இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை. அவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை தான் விரும்புகின்றார்கள். ஊடகங்கள் கேள்விகளாக்குவதும் அதற்கு பதில்கள் கூறுவதும் சிறந்த விடயமல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தனித்து வாக்கு கேட்பதற்கு இந்தியா காரணமா என கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அண்மையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் இலங்கை அரசியலில் நீண்டகால அனுபவம் பெற்றவர். அவர் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை ஒருமித்தே சந்தித்திருந்தார்.
தமிழ் தேசிய கட்சிகள் இலங்கையிலும் சர்வதேசத்திலும் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்று ஒருமித்து கோரிக்கை முன்வைத்து வரும் நிலையில் தான் ஜெய்சங்கரும் அக்கட்சிகளின் தலைவர்களை ஒருமித்து சந்தித்துள்ளார்.
அதிகாரங்கள் பகிரப்பட்டு, அவை மீள எடுக்கப்படாத வகையில், இந்தியாவிலுள்ள அரசியல் அமைப்பை போன்று இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கட்சிகளின் கோரிக்கையாக இருந்துள்ளது. அவ்வாறான பின்னணியில் இந்தியா பிரித்து செயற்படுகின்றது என்று கூறுவது பொருத்தமற்ற ஒன்றாகும். அபத்தமானது என்று இந்தியாவுக்கு தனது நன்றி விசுவாசத்தை தெரிவித்துள்ளார்.