இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 174 பேர் உயிரிழந்த நிலையில் மனதை உருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா சுரபயா களம் கண்டன. இப்போட்டியின் போது வன்முறை வெடித்தது.
இப்போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அரேமா அணியின் தீவிர ரசிகர்கள், கடும் கோபமடைந்தனர். இதையடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு சென்றனர்.
அப்போது களத்தில் இருந்த பல அரேமா வீரர்கள் தாக்கப்பட்டனர். இதை கட்டுப்படுத்த மக்கள் கூட்டத்தின் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கலவரம் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்ததோடு தற்போது வரையில் 174 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மடியில் வைத்தபடியும், காயமடைந்தவர்களை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இறந்த பெண்ணின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்படும் காட்சியும் வெளியாகியுள்ளது.