பிரித்தானியாவில் கட்டமைக்கப்பட்ட “இனவாதம்” நடைமுறையில் இருந்து வருகிறதாவென்ற கருதுகோளை உள்ளடக்கிய விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
11.07.2021 அன்று நடைபெற்ற, ஐரோப்பிய வெற்றிக்கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் பிரித்தானிய மற்றும் இத்தாலிய அணிகள் மோதிக்கொண்டதில், இத்தாலிய அணி இறுதியில் வெற்றிபெற்றுக்கொண்டது. வெற்றியை தீர்மானித்த இறுதிக்கணங்களில் பிரித்தானிய அணியை சேர்ந்த “Marcus Rashford, Jadon Sancho மற்றும் Bukayo Saka” ஆகிய வீரர்கள், தமக்கான வாய்ப்புக்களை தவறவிட்ட காரணத்தினால், அவர்கள்மீது இனவாத கருத்துக்களை பிரித்தானிய உதைபந்தாட்ட இரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிரங்கமாக தெரிவித்திருந்தமை பரவலான கண்டங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பிரித்தானியாவில் கட்டமைக்கப்பட்ட இனவாதம் இன்னமும் நடைமுறையில் உள்ளதாவென்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இறுதிப்போட்டியில் பிரித்தானிய அணியினர் தோல்வியை தழுவிக்கொண்டதை தொடர்ந்து குறித்த மூன்று வீரர்கள்மீதும் இனவாதக்கருத்துக்களை முன்வைத்த பிரித்தானிய இரசிகர்கள், குறித்த மூன்று வீரர்களையும் “ஆபிரிக்காவுக்கு திரும்பி செல்லுங்கள்” எனவும் இழிவாக குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, “மான்செஸ்டர்” நகரில் வைக்கப்பட்டிருந்த “Marcus Rashford” என்ற வீரரின் உருவப்படமும் நாசம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விடயம் குறித்து கருத்துரைத்துள்ள “ஸ்கொட்லண்ட் யார்ட்” காவல்துறை, தம்மால் இதை அனுமதிக்க முடியாதெனவும் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்திருக்கும் அதேவேளை, பிரித்தானிய அணியின் பயிற்றுவிப்பாளரும், அணியின் தலைமை வீரரும், தமது அணியை சேர்ந்த குறித்த மூன்று வீரர்கள்மீதும் முன்வைக்கப்படும் இனவாதக்கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில், பிரித்தானிய பிரதமரும் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த மூன்று வீரர்கள்மீதும் கடந்த மூன்று நாட்களில் சமூகவலைத்தளங்களில் ஏராளமான இனவாதக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், “Twitter” வலைத்தளம் இதுவரை இவ்வாறான 1000 இனவாத கருத்துக்களை நீக்கியுள்ளதோடு, இக்கருத்துக்களை பகிர்ந்த பலரின் கணக்குகளையும் முடக்கியுள்ளதாகவும், அதேபோலவே “Facebook” மற்றும் “Instagram” உள்ளிட்ட தளங்களும் தத்தமது தளங்களில் பகிரப்பட்ட இனவாதக்கருத்துக்களை நீக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த ஐரோப்பிய வெற்றிக்கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட இறுதிப்போட்டியை தொடர்ந்து, பிரித்தானிய அணியின் குறித்த மூன்று வீரர்கள்மீதும் முன்வைக்கப்படும் இனவாதக்கருத்துக்கள், உதைபந்தாட்ட மைதானங்களை தாண்டியும், சமூகக்கட்டமைப்புக்களிடையேயும் வேரூன்றியுள்ளமையை, தற்போதைய உக்கிரமான நிலை எடுத்துக்காட்டுவதாக, “மான்செஸ்டர்” பல்கலைக்கழக பேராசிரியரும், இன மற்றும் இனவேற்றுமை தொடர்பில் ஆய்வில் ஈடுபட்டு வருபவருமான “Bridget Byrne” தெரிவித்துள்ளதோடு, பிரித்தானியாவில் நிலவக்கூடிய இனவாத மனப்பான்மையை இல்லாதொழிக்க பல்லாண்டுகள் கடுமையாக பணியாற்றவேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.