ஜேர்மனி, பெல்ஜியத்தில் கன மழை : வெள்ளத்தால் 120 பேர் பலி – 1,300 பேரைக் காணவில்லை!

You are currently viewing ஜேர்மனி, பெல்ஜியத்தில் கன மழை : வெள்ளத்தால் 120 பேர் பலி – 1,300 பேரைக் காணவில்லை!

மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட இடர்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 -ஆக அதிகரித்துள்ளது.

ஜேர்மனியில் மட்டும் குறைந்தது 103 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1,300 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ள நீரில் முழ்கியும், கட்டட இடிபாடுகளில் சிக்கியும் அதிகளவானோர் உயிரிழந்தனர்.

மேற்கு ஐரோப்பாவில் சில நாடுகளில் சாதாரணமாக இரண்டு மாதங்களில் கிடைக்கும் மழைவீழ்ச்சியை ஒத்த மழை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பதிவாகியுள்ளது.

மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர்ச்சியான கன மழை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு ஜேர்மனியின் சில பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் வரையான தகவல்களின் பிரகாரம் ஜேர்மனியில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்தது.

ஜோ்மனி மத்திய மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா மற்றும் ரைன்லேண்ட்-பலட்டினேட் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாநிலங்களில் முறையே 43 மற்றும் 60 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரையான தகவல்களின்படி ஜேர்மனியில் 1,300 பேர் வரை காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 3,500 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் அழிவுகளை அடுத்து ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சு நேற்று இராணுவ பேரழிவு எச்சரிக்கையை வெளியிட்டது. அத்துடன், உடனடியாக 850 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மீட்பு பணிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இதேவேளை, பெல்ஜியத்தில் அண்மையில சில நாட்களாகப் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் முகாமைத்துவ மையம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது. மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூலை 20 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பெல்ஜிய அரசு அறிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments