அள்ளிப் பூச்சொரிந்து
அழகுரதம் உனையேற்றி
நாலுமாட வீதி சுமந்து
நமச்சிவாயா என்றோமே
காதுகொடுத்து நீ கேட்டிருந்தால்
நாடிழந்து போயிருப்போமா நமசிவாயா
காதுகளை மூடிக்கொள்
கைக்குழந்தை கதறுகின்றது கேட்டிருக்கும்..
எத்தனை ஆண்டுகள்
அத்தனையும் நீ மறந்து
முத்துரதமேறிச் சுற்றிவரும்
மொத்த அழகும் கண்டோமே.
எப்படித்தான் பவனிவர
எழுந்தருளி இருக்கிறாயோ
அப்படியே இருந்து கொள்
அடுத்த தலைமுறைக்கும் நீயே சாட்சி ..
கற்பைத் திண்றவன்
கையெடுத்துக் கும்பிடத்தான்
கடவுளென வந்தாயோ
காதை பொத்திக்கொள்
கண்களை மூடிக்கொள் கடவுளே
எத்தனை நாட்கள் உனை
சுற்றி வந்து
சுடரேற்றித் தொழுதிருப்போம்
அத்தனையும் மறந்து போன
ஆண்டவன் நீயேதான்..
நந்திக்கடலோரம் நீயிருந்து
நாலு திசையும் ஓசையிடும்
பொங்கியெழும் அலையோடு எங்கள் அழுகுரலையும் கேட்டுக்கொள்..
நாயகரைச் சுமந்தமண்
நாதியற்றுக் கிடக்கின்றது
நாங்கள் சுற்றிவந்த தெருக்களும்
குற்றுயிராய்த் துடித்திருக்க
பாதம் பட்ட மண்ணில்
பகை சூழன்றாடுது நாளை
பகை தீர்த்துக் கொள்வோம்
முள்ளிவாய்கால் முடிவுபோல்/
✍ஈழவன் தாசன்
ஈழம்
சென்னை