இரத்தத்திலிருந்து “கொரோனா” எதிர்ப்பு மருந்து! நோர்வே ஆய்வாளர்கள் முயற்சி!!

You are currently viewing இரத்தத்திலிருந்து “கொரோனா” எதிர்ப்பு மருந்து! நோர்வே ஆய்வாளர்கள் முயற்சி!!

“கொரோனா” தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டவர்களின் இரத்தத்திலிருந்து “கொரோனா” எதிர்ப்பு மருந்தை உருவாக்க முடியுமாவென நோர்வே ஆய்வாளர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

“கொரோனா” பாதிப்புக்குள்ளானவர்களுக்கான முறையான சிகிச்சைமுறை ஒன்றினை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சிகள், ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அதே நேரத்தில், “கொரோனா” வைரசினால் பீடிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்தில் இருக்கக்கூடிய நோயெதிர்ப்பு சக்திக்கான சிறுதுணிக்கைகளை (Plasma) பிரித்தெடுத்து, அவற்றிலிருந்து “கொரோனா” வைரசுக்கெதிரான எதிர்ப்பு மருந்தை உருவாக்க முடியுமென நம்புவதாக, மேற்படி ஆய்வுகளுக்கு பொறுப்பான பேராசிரியர் “John Torgils Vaage” நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“கொரோனா” வைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில், “கொரோனா” வைரசுக்கெதிரான நோயெதிர்ப்பு சிறுதுணிக்கைகள் (Plasma) உருவாகி, அவை “கொரோனா” வைரசுக்களை எதிர்த்து போராடுவதாலேயே, “கொரோனா” தாக்குதலிலிருந்து குறித்த நபரால் மீள முடிகின்றது என்ற யதார்த்தத்தின் அடிப்படையில் இதை ஆய்வு முறையில் சோதித்து பார்க்க முடியுமெனவும் தெரிவிக்கும் பேராசிரியர் “John Torgils Vaage”, எனினும், இம்முறையை கையாண்டு உருவாக்கப்படக்கூடிய எதிர்ப்பு மருந்து, நோயாளியுடைய உடலில் இயற்கையாகவே இருக்கக்கூடிய நோயெதிர்ப்பு சக்தியில் மாற்றமெதையும் உண்டாக்காதெனவும் மாறாக, மருந்தின் இயங்குதிறன் குறையும்வரை நோயாளியின் உடலில் தங்கியிருப்பதோடு “கொரோனா” வைரசை எதிர்த்து போராடுமெனவும் தெரிவிக்கிறார்.

“எபோலா” வைரசுக்களுக்கெதிரான மருந்தை கண்டறிவதில் மேற்படி முறைமை பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கும் பேராசிரியர், “கொரோனா” வுக்கெதிரான மருந்தை கண்டறிவதிலும் மேற்படி முறைமை பயனளிக்குமெனவும் தெரிவிக்கிறார்.

நாடளாவிய ரீதியில் இந்த ஆய்வுகளுக்கு தன்னார்வ இரத்தக்கொடையாளர்களை எதிர்பார்க்கும் பேராசிரியர், இந்த முறை தகுந்த பயனை கொடுக்குமென தான் நம்புவதாகவும், வெற்றி கிட்டும் பட்சத்தில் மிகக்குறுகிய காலத்தில் “கொரோனா” வைரசால் பீடிக்கப்பட்டவர்கள் பலன் பெறுவார்களெனவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள