இறையாண்மை என்னும் வலிமையான ஆயுதம்-பகுதி2

You are currently viewing இறையாண்மை என்னும் வலிமையான ஆயுதம்-பகுதி2

இறையாண்மை என்னும் வலிமையான ஆயுதம் மேதகு பிரபாகரன் சிந்தனையின் வழிவரைபடத்தின் தடத்தில் தொடர்ந்து போராடும். தமிழீழம் கனவல்ல,எங்கள் உயிரோடு கலந்துவிட்ட,மாவீரர்களின் குருதி தோய்ந்த உரிமைதேசமாகும் சட்டங்கள் என்பவை பொது விருப்பத்தின் வெளிப்பாடுகளே. ரூசோ இவ்விதம் மக்களின் இறையாண்மையயை (Popolur Sovereignty) உயர்த்திப் பிடித்தார். ரூசோவின் சிந்தனைகள் பிரெஞ்சுப் புரட்சியையும், அமெரிக்க விடுதலைப் போரையும் உந்தி உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தன. பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பா முழுவதும் ‘தேசிய’ உணர்ச்சியை பல்வேறு மக்களிடம் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஐரோப்பியப் பேரரசுகளிடமிருந்து விடுபட்டு தேசங்கள் எழுந்தன. ரூசோ பேசிய மக்களின் இறையாண்மை தேசங்களுக்கான இறையாண்மையாகவே இருந்தது. ஒவ்வொரு மக்களும் பிரதிநிதிகள் மூலமாக அன்றி, நேரடியாகவே தங்களை ஆண்டுகொள்ள வேண்டும் என்று கருத்தறிவித்தார். மக்களுடைய இறையாண்மையை வேறொரு அமைப்பு பெறமுடியாது என்பது அவரது எண்ணம். ஐரோப்பாவில் ரூசோவின் சிந்தனைகள் ‘தேசிய இறையாண்மை’ (National Sovereignty) என்ற கோட்பாட்டு வடிவத்தைப் பெற்றது.

ஒவ்வொரு தேசிய இனமும் தன் இறையாண்மையைத் தானே கொண்டிருக்கிறது. ரூசோவின் ‘பொது விருப்பம்’ கோட்பாடு, ஒரே மொழி, ஒரே தேசிய இனம், குறுகிய பரப்பு, மக்களே நேரடியாக அரசில் பங்கு பெறுதல் ஆகியவற்றுக்குச் சார்பாக இருந்தமையால், அது தேசங்களின் இறையாண்மை கருத்தாக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. National Sovereignty என்பது ஒரு கூட்டு இறையாண்மை (Collective Sovereignty) ஆகும். ஒவ்வொரு மனிதனும் இறையாண்மை உள்ளவன் என்பது ஜனநாயகக் கோட்பாடு. ஒவ்வொரு மனிதனுக்கும் தன் மீது, தன் உடல் மீது முழு உரிமை இருக்கிறது. இது ஆள் உரிமை அல்லது ஆளுடைமை உரிமை (Personal Liberty) என்று கூறப்படுகிறது. தான் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இதுவே மனிதனின் “Self determination” உரிமை ஆகும். இது தனிமனிதனின் இறையாண்மையைக் குறிக்கிறது.

ஒரு தேசிய இனம் என்பது ஒரு பெரிய விரிவாக்கப்பட்ட மனித உரு (Expanded Self) போன்றது. ஓரினத்தின் இறையாண்மை (National Sovereignty) என்பது ஒரு கூட்டு இறையாண்மை ஆகும். தேசிய இனத்தின் இறையாண்மையை மறுப்பது என்பது அந்த இனத்தின் ஒவ்வொரு மனிதனின் இறையாண்மையை மறுப்பது ஆகும். இது ஜனநாயகத்தின் சாரத்தையே மறுப்பது ஆகும். ஒரு தனிமனிதனுக்கு தன் தீர்மானிக்கும் உரிமை அல்லது தன்னுரிமை ( Selff-Determination) உண்டு என்றால், அதே உரிமை அந்த தேசிய இனத்துக்கும் உண்டு. இதை உலகப் பிரகடனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

தேசிய இறையாண்மை என்ற சொல் முதன் முதலாக பிரெஞ்சுப் புரட்சியின் போது வெளியிடப்பட்ட ‘மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனத்தில்’ (Declaration of the Rights of Man and Citizen) தான் பயன்படுத்தப்பட்டது. தேசிய இறையாண்மையும், மக்கள் இறையாண்மையும் (Popular sovereignty) ஒன்றல்ல. தேசிய இன மக்களிடம் இறையாண்மை சிதறிப்பரவிக் கிடக்கிறது என்பது பொருள் அல்ல. அதற்கு மாறாக ‘ஒரு மக்கள்’ அனைவரையும் ஒட்டு மொத்தமாக உருவகிக்கிற தேசிய இனத்திடம் இறையாண்மை முழுமையாகத் தங்கியிருக்கிறது என்று பொருள்.

மொழி இன தேசிய மக்களாட்சி அரசுகளின் தொடக்கம்

அமெரிக்க விடுதலைப் போரின் போது வெளியிடப்பட்ட சுதந்திர அறிக்கை(1776) முக்கியமானது.

“எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர். பிறரால் மாற்ற இயலாத உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமைகளைப் பாதுகாக்கவே மக்களிடையே அரசாங்கங்கள் நிறுவப்பட்டன. அரசாங்கங்களின் நியாயமான அதிகாரங்கள் ‘ஆளப்படுவோரின் இணக்கம்’ என்று அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்நோக்கங்களை அழிக்க எம்முறையான அரசாங்கமும் முற்படுமானால், அதனை மாற்றி அல்லது அழித்துப் புதிய அரசாங்கத்தை நிறுவ மக்களுக்கு உரிமையுண்டு”.

பிரெஞ்சுப் புரட்சியிலும் ரூசோவின் தாக்கம் இருந்தது. புரட்சியின் போது 1789 இல் கூடிய தேசிய அவை (National Assembly), பிரான்சின் அரசியலமைப்பைத் தீட்டுமுன் ‘மனிதன், குடிமகன் இவர்களின் உரிமைகளின் அறிக்கை’யை 1789-இல் வரைந்தது. ‘மனிதர்கள் சுதந்திரத்துடன் பிறந்து சம உரிமையுடன் வாழ்கிறார்கள். மனிதனின் வரையறுக்க இயலாத நடைமுறை உரிமைகளைப் பாதுகாப்பது ஒவ்வோர் அரசியல் சட்டத்திற்குமுரிய நோக்கமாகும். இறையாண்மை நாட்டு மக்களிடமே இருக்கிறது. அரசியலமைப்பை மாற்றக் கூடிய வரையறுக்க இயலாத உரிமை நாட்டு மக்களிடம் இருக்கிறது .

அமெரிக்க விடுதலைப் பிரகடனமும், பிரெஞ்சுப் புரட்சியாளர்களின் மனிதனின் – குடிமகனின் உரிமைப் பிரகடனமும் இனி அரசு முறையின் அடித்தளம் மக்களாட்சிதான் என முன்னறிவித்து விட்டன. சில தேசங்களின் காலனியாதிக்கப் பேராசை முதல் உலகப் போருக்குக் (1914-1918) காரணமானது. ஆனால், ஐரோப்பாவில் எஞ்சியுள்ள தேசங்கள் தங்கள் விடுதலைக்காக முட்டி மோதிக் கொண்டமையும் முதல் உலகப் போருக்கு முக்கிய காரணமாகும். முதல் உலகப் போரின் இறுதியில் அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், நசுக்கப்பட்ட தேசிய இனங்கள் தேசங்களாக உரிமை பெற்று அரசியல் சமூகங்களாக நிலைபெற ஆதரவளித்தார். அதன்படி எந்த ஒரு தேசமும் இனி இன்னொரு தேசத்தின் கீழ் இருக்கத் தேவையில்லை என்ற கருத்து ஏற்கப்பட்டது. பல தேசங்களைத் தம் ஆட்சி அதிகாரத்துக்குள் அடக்கிக் கொண்டிருந்த பேரரசுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, ரஷ்யா ஆகியவை பல பகுதிகளை இழந்தன.

மத்திய ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கு ஐரோப்பாவிலும் புதிய தேசிய இன அரசுகள் உருவாயின. பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, செக்கோஸ்லேவியா, யுகோஸ்லாவியா (ஆறு தேசங்களை உள்ளடக்கியது) ஆகியவை உருவாக்கப்பட்டன. புதிய தேசங்களின் அரசியலமைப்புகள் மூன்று முக்கியப் பண்புகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டன. அவை,

1. ஆளுரிமை (Personal Liberty)
2. மக்கள் இறையாண்மை (Popular sovereignty)
3. நாட்டுணர்ச்சி அல்லது தேசிய இன உணர்ச்சி (Nationalism).

முதல் உலகப் போருக்குப் பிறகு உருவான அரசு முறை ‘தேசிய மக்களாட்சி முறை’ ஆகும். அதாவது ‘தேசிய இனங்களின் இறையாண்மையுள்ள ஆட்சியும் அவற்றில் ஜனநாயக முறைமையும்’ என்பதே புதிய போக்கு ஆகும். இப்போக்கு தான் உலகம் முழுவதும் பரவியது. சிதைக்கப்பட்ட ஜனநாயகம் என்ற ஐரோப்பாவின் முறை இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தியாவில் அது மழிக்கபட்டு செயல்படுத்தப்பட்டது. “வாக்குரிமை” என்ற ஜனநாயகம் ஏற்கப்பட்டு, தேசிய இறையாண்மையும், தேசிய ஜனநாயகமும் மறுக்கப்பட்டு விட்டன. இந்தியா என்ற சந்தையைக் காக்கவும், சமஸ்கிருத ஆரிய மேலாண்மையைத் தொடரவும் ‘இந்தியாவே தேசம்’ என்று கற்பிதம் செய்யப்பட்டு, அதை ஏற்கும்படி கட்டாயம் செய்யப்படுகிறது.

தமிழர் இறையாண்மை

இந்தியாவில் எழுந்த ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் 1947 இல் முடிவடைந்தது. Decolonisation என்னும் ‘அந்நிய காலனிய ஆதிக்க வெளியேற்றம்’ சாதிக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வலுவந்தமாக இணைக்கப்பட்ட பல தேசங்கள், இன்று ‘உள்நாட்டுக் காலனிகளாக’; தொடர்ந்து சுரண்டப்படுகின்றன. மேலை நாடுகளைப் போலன்றி, தமிழ்த் தேசிய இனம் ஒரு நீண்ட கால இருப்பையும் வரலாற்றையும் கொண்டது. தமிழகம் 1801 இல் தான் இந்தியாவுடன் இணைக்கபட்டு தனது இறையாண்மையை ஆங்கிலேயரிடம் இழந்தது. தேசிய இன இறையாண்மை தமிழகத் தமிழினத்துக்கு மீண்டும் கிடைக்கவே இல்லை

தமிழீழத் தமிழ்த் தேசிய இனமும் – இறையாண்மையும்

தமிழீழத் தமிழ்த் தேசிய இனம், சிங்களப் பெருந்தேசிய இனம் ஆகியவை இலங்கையிலே தனித்தனியே ஆனால் ஓர் அரசின் கீழ் இருந்து வருகின்றன. இனவெறி பிடித்த பெருந்தேசிய சிங்கள அரசு தமிழர் மீது இனஅழிப்பை நிகழ்த்தி வருகிறது. சிங்கள மரபின் மூதாதையான விஜயன் இலங்கைக்கு வரும் முன்னரே இலங்கையில் சீர்மிகு பண்பாட்டுடன் வாழ்ந்து வந்த தமிழர்கள் 17 ஆம் நூற்றாண்டில் தனி அரசு இழந்தனர். கி.பி. 1619 இல் தமிழ் ஈழ மன்னன் சங்கிலி, போரில் வெல்லப்பட்டு, தமிழர் இறையாண்மை போர்த்துகீசியர்களால் கைக்கொள்ளப்பட்டது. 1815 இல் ஆங்கிலேயர் கண்டி தமிழ் அரசையும் வென்று தமிழர் இறையாண்மையைக் கைக்கொண்டார்கள். 1833 இல் தமிழர் தாயகம் சிங்களப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு ஆங்கிலேயரால் ஒரு நாடாக உருவாக்கப்பட்டது. 1948-இல் இலங்கை விடுதலை பெற்ற போது ஈழத்தமிழர் இறையாண்மை அவர்களுக்குத் திருப்பி அளிக்கப்படவில்லை.

1956 இல் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை உருவாக்கி இலங்கையில் ஒரு கூட்டாட்சியை உருவாக்கிக் கோரிக்கை வைத்தார். இது 1972 இலும் கூட ஏற்கப்படவில்லை. 1972 இல் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து ‘தனிநாடு’ கோரிக்கையை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கேசன்துறையில் வெற்றி பெற்றார். 1972 இல் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை சாதிக்கவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்கப்பட்டது.

1976 இல் தனி ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ‘தமிழர்க்குத் தனிநாடு’ என்ற கோரிக்கையை ஆதரித்து 19க்கு 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, ஈழத்தமிழர் தம்முடைய கருத்தை ஜனநாயக முறைப்படித் தெரிவித்தனர். தமிழீழத் தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். அது கோரும் தீர்வு தமிழீழம் ஆகும்.
தமிழீழம் என்பது வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையில் முன்னிறுத்தப்பட்டு தமிழீழத் தமிழ் மக்களால் ஜனநாயக முறைப்படி ஏற்பளிக்கப்பட்ட அரசியல் தீர்வாகும். ஈழமக்களின் அரசியல் தீர்வைத்தான் எந்த நாடும், எந்த கட்சியும் நிறைவேற்றித் தர வேண்டுமே ஒழிய தங்களுக்குப் பிடித்த அல்லது தங்கள் நலனுக்கு உகந்த நயவஞ்சகத் திட்டங்களை அரசியல் தீர்வு என்னும் போர்வையில் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது.

அரசியல் – அறிவியல் பார்வை
தமிழீழப்பகுதியில், முப்படைகளைக் கொண்டு தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள இனவெறி அரசை யாராவது கண்டனம் செய்தால் ‘அது இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவது’ என்று இந்திய தேசிய அரசியல்வாதிகள் கூக்குரலிடுகிறார்கள்.

சிங்கள இனவெறி அரசுக்கு ஆயுதமும், பணமும், பயிற்சியும், உளவு வேலையும் செய்து தருகின்ற இந்திய அரசைப் பார்த்து ‘இலங்கை ஒருமைப் பாட்டைக் காக்கிறேன் என்றும் இந்திய ஒருமைப்பாட்டைக் குலைத்து விடாதீர்கள்’ என்றும் அறிவுறுத்தலாகக் கூறினால் கூட ‘இந்திய இறையாண்மைக்கு ஆபத்து’ என்று அலறுகிறார்கள்.

இந்திய தேசியம் என்ற பெயரில் தங்கள் சமூக, பொருளியல் மேலாதிக்கத்தை இங்கே நிறுவிக் கொண்டவர்கள். அரசியல் அறிவியல் பார்வையற்றோர் அவர்களுடன் ஒத்துப் போகிறார்கள்

இந்தியாவின் அரசியல் முறை மேற்கத்திய உலகிடமிருந்து கொண்டு வரப்பட்ட ஒன்று. இறையாண்மைக் கோட்பாடும், மக்களாட்சிக் கோட்பாடும் உலகம் முழுவதும் எந்த வடிவில் எந்த உணர்வில் பயன்படுத்தப்படுகிறதோ அதே வடிவில் தான் இங்கும் பயன்படுத்தப்பட வேண்டும். பழங்காலத்தில் அனுமார் இலங்கையில் தமிழர் நகரைத் தீயிட்டு எரித்ததாக ராமாயணம் கூறுகிறது. இன்று தமிழர்தேசம் இனஅழிப்பிற்கு ஆளாகியிருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே எந்த தேசிய இனமும் விடுதலை அடையக்கூடாது, அவ்வாறு விடுதலை பெற்றால் இங்கே இந்தியத் தேசியப் பொய்மை தகர்ந்து போகும் என்று அஞ்சுகிறார்கள்

இறையாண்மையின் பெயரால் உண்மையான தேச இறையாண்மையை மறுப்பது, ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகத்தை வதைப்பது என்பது நீண்டக்காலம் தொடர முடியாது. அரசியல் அறிவியல் தமிழ்நாட்டு மக்களின் கண்களைத் திறக்கும் போது, இந்திய ஒன்றியப் பொய்மை தகர்ந்து போகும்.

தொடரும்…

-அனைத்துலக சிந்தனைப்பள்ளி-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments