வடக்கில் சிக்கிய போதைப் பொருட்கள்! – அதிர்ச்சித் தகவல்கள்.

You are currently viewing வடக்கில் சிக்கிய போதைப் பொருட்கள்! – அதிர்ச்சித் தகவல்கள்.

வடக்கில் போதைப்பொருட்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களின் தொகுப்பு இது.

முல்லைத்தீவில் கணவன், மனைவி கஞ்சாவுடன் கைது!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் தனது வீட்டில் 914 கி.கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 34 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முள்ளியவளை புதரிகுடா பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய கணவன் மனைவி இருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்து 214 கி.கிராம் கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

இவர்களுக்கான பிரதான விநியோகஸ்தர்களை தேடும் பணிகளோடு குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற முல்லைத்தீவு பொலிஸார் இன்றைய தினம் குறித்த நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொரியர் மூலம் போதைப் பொருள் விற்ற மருத்துவ மாணவர் கைது!

கொரியர் தபால் சேவையின் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 03ம் ஆண்டில் கல்வி கற்கும் 23 வயதுடைய சியம்பலாவெவ, ரம்பேவ பிரதேசத்தில் வசிக்கும் மாணவனொருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் 45 மயக்க மருந்து மாத்திரைகளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் ஆடைக்குள் ஹெரோய்ன் போதைப்பொருள்!

யாழ் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில், 51 வயதுடைய பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தனது ஆடைக்குள் போதைபொருளை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 06கி.கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

18 ஆயிரம் போதை வில்லைகளுடன் இருவர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போதை வில்லைகளுடன் இருவர் இன்று காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18, ஆயிரம் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி , தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது . கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.அத்துடன் போதை வில்லைகளும் ஒப்படைக்கப்பட்டுள்து.

பாடசாலைக்கு அருகே போதைப்பொருள் விற்ற இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்த ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கமைய குறித்த இளைஞனை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இளைஞனை முற்படுத்தியபோது பொலிஸாரால் சந்தேகநபரை இரண்டு நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

அதற்கமைய சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபருடன் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை சேர்ந்தவர்களை மற்றும் போதைப்பொருளை வாங்கியவர்களை இனம் கண்டுகொண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற 6 பேர் கைது!

யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் , போதை கலந்த பாக்குகள் , மாவா பாக்கு உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களிடம் அவற்றை வாங்கி வந்த மாணவர்களை பொலிஸார் இனம் கண்டு கொண்டனர்.

அவ்வாறு இனம் காணப்பட்ட சுமார் 15 மாணவர்களையும் பொலிஸார் கடுமையாக எச்சரிக்கை செய்து, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்டி , பெற்றோர்களிடம் கையளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 06 இளைஞர்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments