இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது!

You are currently viewing இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது!

பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்து இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது. திருகோணமலையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய புலனாய்வு சேவை கடுமையாக எதிர்த்துள்ளது என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டையில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

திருக்கோணமலை மாவட்டத்தில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை அமைக்க பிரான்ஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியின் குறுகிய நேர இலங்கை விஜயத்துக்கான நோக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பிரான்ஸ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை அமைக்கும் கோரிக்கையை தேசிய புலனாய்வு சேவை கடுமையாக எதிர்த்து இந்த யோசனை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பிரதான பேசுபொருளாக காணப்படும் பின்னணியில் பிரான்ஸுக்கு இடமளித்தால் அது தவறான எடுத்துக்காட்டாக அமையும்.

பிரான்ஸை தொடர்ந்து அமெரிக்கா, சீனா, உள்ளிட்ட பலம்வாய்ந்த நாடுகளுக்கும் இலங்கையில் முகாமிட அனுமதி வழங்க நேரிடும்.

திருகோணமலைக்கு பிரான்ஸ் வரவில்லை நேட்டோவில் பாதுகாப்பில் மேற்குலகில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. உலகில் அதிகாரமிக்க மையமான இந்திய பெருங்கடல் எதிர்வரும் காலங்களில் ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படும் என்று இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உலகிலும், ஆசியாவிலும் பலமான போட்டி நாடுகளாக இந்தியாவும் சீனாவும் காணப்படுகின்றன. இந்திய பெருங்கடலின் முக்கிய கேந்திரமாக இலங்கை காணப்படுவதால் பலமிக்க போட்டி நாடுகள் இலங்கையில் ஏதாவதொரு வழியில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள ஆரம்பத்தில் இருந்து முயற்சிக்கின்றன.

அமெரிக்கா 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எக்சா,சோபா மற்றும் எம்.சி.சி. ஆகிய ஒப்பந்தங்கள் ஊடாக இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தது. நல்லாட்சி அரசாங்கம் அதற்கு சார்பாக செயற்பட்டது. நாட்டு மக்களின் எதிர்ப்பை ஒன்றிணைத்து அமெரிக்காவின் முயற்சியை முறியடித்தோம்.

பிரான்ஸ் ஊடாக தனது நோக்கத்தை அடைய அமெரிக்கா முயற்சிக்கிறது. இலங்கையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை அமைக்க வேண்டிய தேவை பிரான்ஸூக்கு கிடையாது. பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்துக் கொண்டு எம்மை ஏமாற்ற முடியாது என்பதை அமெரிக்காவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments