உறைநிலை குளிருக்கு மத்தியிலும் வீட்டை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட குடும்பம்!

You are currently viewing உறைநிலை குளிருக்கு மத்தியிலும் வீட்டை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட குடும்பம்!

நோர்வே தலைநகர் Oslo வில் அமைந்திருக்கும் மைய நகரப்பகுதியான “Tøyen” என்னுமிடத்தில் அடுக்கு மாடிக்குடியிருப்பில் வசித்து வந்த, வெளிநாட்டு பின்னணியைக்கொண்ட குடும்பம் ஒன்று, கடும் குளிருக்கு மத்தியிலும் வீட்டிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதோடு, ஒதுங்க இடமேதுமில்லாமல் நிர்க்கதியாக நடுத்தெருவில் விடப்பட்ட சம்பவம், மக்களிடையேயும், அரசியல்வாதிகளிடையேயும் கடும் எதிர்ப்புக்களை சம்பாதித்துள்ளது.

5 பிள்ளைகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குடும்பமொன்று, சொந்த வீடு இல்லாமல், வருமானம் குறைந்த நிலையில் வாழ்பவர்களுக்கென வாடகைக்கு விடப்படும் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ளனர். குடும்பத்தலைவரின் வருமானம் போதாது என்பதன் அடிப்படையிலேயே குறித்த வீடு அக்குடும்பத்துக்கு வாடகைக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், வாடகை மகிழூந்து (Taxi) சாரதியாக பணிபுரியும் குடும்பத்தலைவர், 2020 ஆண்டில், வறுமைக்கோடு என்னும் நிர்ணயிக்கப்பட்ட வருமான தொகைக்கும் மேலதிகமாக சுமார் 15.000 நோர்வே குறோணர்களை சம்பாதித்துள்ளார் என்ற காரணத்தை காட்டி, அக்குடும்பத்தை வீட்டிலிருந்து வெளியேறுமாறு, குறித்த வீட்டை வாடகைக்கு வழங்கிய “Bolig Bygg” என்ற நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

எனினும், தற்போதுள்ள “கொரோனா” சூழ்நிலையில் நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்வரும் காலங்களில் தனது வருமானம் மிகவும் குறைந்துவிடுமென்றதன் அடிப்படையிலும், பொதுவாகவே எவ்விதமான விடயங்களுக்கும் மேன்முறையீடு செய்யும் உரிமை சட்டப்படி இருக்கிறது என்பதன் அடிப்படையிலும் குறித்த குடும்பத்தலைவர் தனதுபக்க நியாயங்களை குறிப்பிட்டு மேன்முறையீடு செய்திருந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டுக்கு பதிலேதும் கிடைக்கப்பெறாத நிலையிலும், அக்குடும்பம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

குறித்த குடும்பத்தை வெளியேற்றும் உத்தரவோடு காலை வேளையில் அக்குடும்பத்தின் வீட்டுக்கதவை தட்டிய அதிகாரிகளும், ஆயுதம்தாங்கிய காவல்துறையினரும் குடும்பத்தினரை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தலைவர், வீட்டை வாடகைக்கு விட்ட நிறுவன அதிகாரிகளை தொடர்புகொண்ட போதும், யாரும் சாதகமான பதில்களை வழங்காததால், உறைநிலை காலநிலையை கருத்தில்கொண்டும், 5 இளவயது பிள்ளைகளோடு சென்று தங்குவதற்கு இடமேதும் இல்லாததாலும், சிறிய கால அவகாசத்தை கொடுக்குமாறும் காவல் துறையை வேண்டி கேட்டுக்கொண்டபோதும் எதுவும் பலனளிக்காமல் முழுக்குடும்பமும் உறைநிலை காலநிலையிலும் வெளியில் விடப்பட்டு வீடு சீல் வைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்துக்கு கண்கண்ட சாட்சிகளாக இருந்த அயலவர்கள் அங்கு நின்ற காவல்துறையினரோடு முரண்பட்டபோது, குறித்த குடும்பம் அதிரடியாக வெளியேற்றப்படும் விடயத்தில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை தாம் புரிந்துகொண்டுள்ளதாகவும், எனினும் தமக்கு இடைப்பட்ட கட்டளையை மட்டுமே தாம் நிறைவேற்றுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் கடும் எதிர்ப்பலைகளை கிளப்பிவிட்டுள்ள நிலையில், குறித்த குடும்பத்திற்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்த “Bolig Bygg” என்ற நிறுவனத்தின்மீது கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்ற அதேவேளை, அரசியலாளர்களும் இதுவிடயம் குறித்து அவதானிக்க தொடங்கியுள்ளனர்.

மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த குடும்பத்தை வீட்டிலிருந்து வெளியேற்றுவது தொடர்பிலான முடிவு எடுக்கப்பட்டபோது, நடைமுறை பிறழ்வுகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த ஆவணங்களை பரிசீலித்தவர்கள், சரியான மனிதநேய நெறிமுறைகளை கடைப்பிடிக்கவில்லையென்பது தெளிவாக தெரிவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இவை குறித்த தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ள “Bolig Bygg” என்ற நிறுவனம், குறித்த பகுதியின் உள்ளூராட்சி சபையின் தலைவரே மேற்படி விடயம் தொடர்பில் பதிலளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, தகுந்த பொருளாதாரம் இல்லாமலும், ஒதுங்குவதற்கு இடமில்லாமலும் நடுத்தெருவில் தத்தளித்த குறித்த குடும்பத்துக்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ள நிலையில், குடும்பத்துக்காக அவசர உதவிக்காக நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. அவசர தேவைகளுக்காக 50.000 குறோணர்கள் தேவையென நிர்ணயித்த அயலவர்கள், அதற்கான நிதிச்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கியபோது இதுவரை குவிந்துள்ள உதவிகள் இரட்டிப்பு தொகையை எட்டியுள்ளதோடு, தொடர்ந்து உதவிகள் சேர்ந்து வருவதாக, இவ்வுதவித்திட்டத்தை முன்னெடுத்துள்ளவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

செய்தி மேம்பாடு:

16.02.2021 14:40

மேற்படி குடும்பத்தினர் அதிரடியாக வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து எழுந்துள்ள கண்டனங்களுக்கு மத்தியில், இதுவிடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த வீடு, சந்தைவிலையில் வீடுகளை வாடகைக்கு எடுக்க முடியாதளவுக்கு குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு அவசர உதவியாக வழங்கப்படுவது என்றும், வருமானம் குறைந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே உரித்த குடும்பத்தினருக்கு அவ்வீடு தற்காலிகமாக (அதிக பட்சமாக 5 வருடங்களுக்கு) வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எனினும் குறித்த குடும்பம் அவ்வீட்டில் 9 வருடங்கள் தொடர்ச்சியாக குடியிருந்து வந்த நிலையில், குடும்பத்தலைவரின் வருமானம் அதிகரித்து காணப்பட்டது எனவும் தெரிவிக்கின்றனர்.

உறைநிலை குளிருக்கு மத்தியிலும் வீட்டை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட குடும்பம்! 1

அதிகரித்த வருட வருமானத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது, அக்குடும்பம் சாதாரண சந்தை விலையில் உகந்த வீடொன்றை வாடகைக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய பொருளாதார நிலையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படியில் 2019 ஆண்டிலேயே வீட்டு வாடகைக்கான ஒப்பந்தம் கலவாதியாகிய நிலையில், வீட்டை விட்டு வெளியேறும்படி குடும்பத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும், வேறு வாடகை வீடு உள்ளிட்ட மாற்று வழிகளுக்கான ஆலோசனைகளை வழங்க தயாராக இருந்ததாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனினும், அதை ஒத்துக்கொள்ளாத குடும்பத்தினர், இரு தடவைகள் மேன்முறையீடு செய்ததாகவும், இருந்தாலும் முடிவை மாற்றுவதற்கு போதிய நியாயமான காரணங்கள் இல்லாமையாலும், மேன்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இறுதி எச்சரிக்கை அனுப்பப்படும், அதை அக்குடும்பம் மதிக்காத நிலையிலேயே சட்ட வரைபுகளுக்குட்பட்டு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாக ஆகிவிட்டதாகவும் மேலும் தெரிவிக்கும் அதிகாரிகள், குறித்த உள்ளூராட்சி வட்டத்துக்குள் மாத்திரம் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் 3000 பேர் இருப்பதாகவும், இவர்களில் இவ்வாறான அவசர உதவி வீடுகளுக்காக குழந்தைகளைக்கொண்ட 16 குடும்பங்கள் உட்பட 46 பேர் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு, நியாயபடியும், நடைமுறைப்படியும் மேற்படி சர்ச்சைக்குரிய குடும்பம் சந்தை விலையில் வாடகை வீடொன்றை பெற்றுக்கொள்ளக்கூடியதான பொருளாதார நிலையை கொண்டிருக்கும் நிலையில், வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்களுக்கென ஒதுக்கப்படக்கூடிய வீட்டை விட்டு வெளியேற மறுப்பது நியாயமில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த சர்ச்சைக்குரிய குடும்பத்துக்கென பொதுமக்கள் அளித்துள்ள நிதியுதவி சுமார் 1.5 மில்லியன் நோர்வே குறோணர்களை எட்டியுள்ள நிலையில், வீடொன்றை சொந்தமாக வாங்கிக்கொள்வதற்கு உதவியாக குறிப்பிட்ட தொகையை சகாய வட்டிவீதத்தில் கடனாக வழங்க உள்ளூராட்சி வட்டாரம் முன்வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள