பெற்றோல் / டீசல் வாகனங்களுக்கு தடை போடும் ஒஸ்லோ மாநகர சபை!

You are currently viewing பெற்றோல் / டீசல் வாகனங்களுக்கு தடை  போடும் ஒஸ்லோ மாநகர சபை!

நோர்வே தலைநகர் Oslo வில், பெற்றோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை முற்றாக தடை செய்யும் வேலைத்திட்டத்தின் முதல்படியாக, மிக முக்கியமான நகர மையப்பகுதியில் இத்தடையை கொண்டுவரும் முயற்சியில் இவ்வருடத்திலிருந்தே மாநகரசபை நிர்வாகம் களத்திலிறங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Oslo வை, இயற்கை மாசேதுமில்லாத “பசுமை நகரம்” என்னும் தகைமைக்கு கொண்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் வேகமாக இயங்கி வரும் தற்போதைய Oslo மாநகரசபை நிர்வாகம், முதல் கட்டமாக பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கான தடையை கொண்டுவரும்போது, 155.000 மக்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அது பாதிக்கலாமென எதிர்வுகள் கூறப்படுகின்றன.

தொடர்ந்தும் படிப்படியாக வரிவாக்கப்பட இருக்கும் இத்திட்டத்தின் முடிவில் முழு Oslo விலும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை பாவிக்கமுடியாத நிலை ஏற்படும். பதிலாக மின்சார வாகனங்களை மட்டுமே பாவிக்க முடியுமெனவும் தெரிவிக்கும் மாநகரசபை நிர்வாகம், அதற்காக இப்பொழுதிலிருந்தே மக்கள் தங்களிடம் இருக்கும் பெற்றோல் / டீசல் வாகனங்களை கைவிட்டு, மின் வாகனங்களுக்கு மாறிக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி முற்று முழுதான தடைக்கு, மக்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் பலத்த எதிர்ப்புக்கள் காணப்படும் நிலையில், Oslo மாநகரசபை நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் காட்சிகளில் “FrP” மற்றும் “FNB” கட்சிகளை தவிர, ஏனைய கட்சிகள் அனைத்தும் படிப்படியான தடைக்கு ஒத்துக்கொண்டுள்ளன.

நோர்வேயின் அடிப்படை சட்டவிதிகளின்படி, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக Oslo மாநகரசபை நிர்வாகம் இவ்வாறான தடையை கொண்டுவர முடியாது என்றாலும், பசுமை நகர திட்டத்துக்கான மாதிரித்திட்டமொன்றை பரிட்சித்து பார்ப்பதற்காக, Oslo மற்றும் Bergen ஆகிய பெருநகரங்களுக்கு மத்திய அரசு அதிகாரத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பெற்றோல் / டீசல் வாகனகளை தடை செய்யும் முயற்சியின் முதல் கட்டமாக, நகர மத்தியில் இருந்த ஆயிரக்கணக்கான வாகனத்தரிப்பிடங்களை படிப்படியாக Oslo மாநகரசபை நிர்வாகம் அகற்றியதை தொடர்ந்து, நகர மாத்திக்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் நிரந்தரமாக பூட்டப்பட்டதோடு, அநேகமான வர்த்தக நிலையங்கள் தலைநகரை விட்டு வேறிடங்களுக்கு மாறியுள்ளன. இதனால், நகர மத்திக்கு வரும் மக்கள் தொகை குறைந்து, நகரம் வெறிச்சோடி விடுமெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், Oslo மாநகரத்தை உலகின் முதலாவது “பசுமை நகரம்” என்ற வரையறைக்குள் கொண்டுவருவோம் என்ற தேர்தல் வாக்குறுதியின் மூலம் மாநகரசபை ஆசனங்களை கைப்பற்றிய “MDG” என்ற பசுமைக்கட்சி, தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மும்முரமாகவுள்ளது. இதற்காக, மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படவேண்டிய பொருளாதாரத்தை, மேற்படி தமது குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகவே அதிகம் பாவிக்கிறதென்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

எதிர்காலத்தில், Oslo மாநகரத்தில் மின்சார வாகனங்களையும், மிதிவண்டிகளையுமே பயன்படுத்த முடியும் எனச்சொல்லும் மாநகர நிர்வாகம், அதற்காக, வீதியெங்கும் மிதிவண்டிகளுக்கான பாதைகளை அமைத்து வருகிறது. பெரும்பாலான நிதி இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தவிரவும், மிதிவண்டிவீதிகள் அமைப்பதற்காக, நூற்றாண்டுகள் பழமையான வீதியோர மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. பசுமை நகரை அமைக்க பாடுபடுவதாக சொல்லும் Oslo மாநகர நிர்வாகம், பசுமை நகருக்கு இன்றியமையாத பசுமை மரங்களை பெருந்தொகையில் அழித்துவருவதும் கண்டனங்களை கிளப்பிவிட்டுள்ளது.

குறிப்பாக, பெருந்தெருக்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாடுகளுக்கென ஒதுக்கப்பட வேண்டிய நிதிகளும், மிதிவண்டிப்பதை அமைப்பதில் செலவிடப்படுவதாக குற்றம் சாட்டும் மக்கள், பெருந்தெருக்கள் பராமரிப்பு கணிசமாக குறைவடைந்துள்ளதால், தரக்குறைவு காரணமாக பெருந்தெருக்களில் விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.

குறிப்பாக, வருடத்தில் 3 மாதங்கள் மட்டுமே மிதிவண்டியை பாவிக்கும்படியான காலநிலையை கொண்டுள்ள நோர்வேயில், வருடம் முழுவதும் மிதிவண்டியை பாவிப்பது எல்லோருக்கும் சாதகமானதாக அமையாது என்பதோடு, 9 மாதங்கள் நீடிக்கும் பனிக்காலத்தில், வீதிகளில் பனி உறைந்துபோயிருக்கும் வேளைகளில் மிதிவண்டிகளை செலுத்துவது சத்தியமாகுமா எனவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மிதிவண்டிகளை செலுத்த முடியாத உடல்நிலையை கொண்டவர்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

பெற்றோல் / டீசல் வாகனங்களை உடனடியாக மின்வாகனங்களுக்கு மாற்றிக்கொள்ளும் அளவுக்கு மக்கள் அனைவரிடமும் பொருளாதாரம் இருக்குமா என்ற கேள்விக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் “Jens Stoltenberg” அவர்களின் ஆட்சிக்காலத்தில், பெற்றோல் வாகனங்களை விடவும், டீசல் வாகனங்களே சூழலை குறைவாக மாசுபடுத்திக்கின்றன என்றும், அதனால் மக்கள் டீசல் வாகனங்களை பாவிக்கும் படியும், முன்னாள் பிரதமர் “Jens Stoltenberg” அவர்களே பகிரங்கமாக மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மக்களில் பெரும்பாலானவர்கள் டீசல் வாகனங்களுக்கு மாறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

பகிர்ந்துகொள்ள