இணைத்தலமை நாடுகள் சேர்ந்து
மண்ணின்மீது நிகழ்த்திய
கோரத்தாண்டவமே
மே பதினெட்டு!
அதிகார அரக்கர்களின்
இனவழிப்பின் திட்டமே
ஒரு இனத்தின் மீது கட்டவிழ்க்கப்பட்ட
இன அழிப்பு!
புன்னகை முகத்தோடு
எம் மண்ணை தொட்ட
அத்தனை பாதங்களும்
எம் நிலத்தை தகர்பதற்கு
அளவெடுத்தனரே தவிர
அமைதியை வரவழைக்க முயலவில்லை!
இவர்களின்
நிகழ்ச்சி நிரலின் அங்கமே
மனிதநேய அமைப்புகள்
அவசரமாக
போர்பூமியை விட்டு
ஓடி ஒழிந்தனர்!
சாட்சியங்கள் இல்லாது
சாகடிக்கவேண்டும் என்பதை விரும்பியவர்
எதிர்பார்க்கவில்லை
சாகும்போதும் சாட்சிகளை
உருவாக்குவார்
மறவர் படையினர்
என்பதை!
சாட்சியங்கள் இல்லாமல்
சாகடிக்கலாம் என்ற
நப்பாசையில்த்தான்
உச்சக்கட்டப்போரின்போது
உலகத்தமிழினம்
இவர்களின்
தெருக்களில் நின்று
உயிர்களை காப்பாற்ற
உரிமைக்குரல் எழுப்பியபோதும்
எம்மை அரவணைக்கவில்லை!
தங்கள் ஊடகங்களிலும்
எம் வலிகளை
ஒளிபரப்பவில்லை!
மாறாக
எதிரியின் வாலில்
தொங்கியவாறு
எம் தொண்டையை
நெரித்தார்கள்!
மனிதநேய முகமூடி
அணிந்தபடி
மண்ணிலே மரணங்களை
நிகழ்த்தினார்கள்!
கண்ணிலே கண்ட
கறுப்பையெல்லாம்
கொத்தணிக்குண்டு போட்டு
கொழுத்தினார்கள்!
நேருக்கு நேர் நின்று
போர்புரிய வக்கற்று
நச்சுக்குண்டு போட்டு
மூச்சை அடக்கினார்கள்!
உணவுத்தடை போட்டு
உயிர்களை
பட்டினிபோட்டு
கொன்றார்கள்!
மருந்துத்தடைபோட்டு
மனிதத்தை
புதைத்தார்கள்!
இப்போதும்
சுய அரசியலுக்காய்
மனிதநேய முகமூடியுடன்
அலைகிறார்கள்!
பூகோள அரசியலில்
அதிகாரத்தை நிலைநிறுத்த
துடியாய் துடிக்கின்றார்கள்!
எப்படித்தான்
நிறத்தை மாற்றி
எம் நீதியைக் குலைத்தாலும்
அறத்திற்காக போராடும் நாம்
புறமுதுகு காட்டோம்!
உன் தவறை உணர்ந்து
எம் உணர்வை மதிக்கும் வரை
எதையும்
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்!
எல்லாம் விதியென
வீழ்ந்து கிடக்கவும்
மாட்டோம்!
மரணித்துப்போன
மனிதத்துக்காக
எங்கள் தோள்களை
உயர்த்துவோம்!
✍தூயவன்