ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தில் குற்றவாளியாக நோர்வே!

You are currently viewing ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்தில் குற்றவாளியாக நோர்வே!

இளம் தாயொருவரிடமிருந்து அவரது குழந்தையை பிரித்தெடுத்த வழக்கில், ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் நோர்வேயை குற்றவாளியாக அறிவித்துள்ளது.

குறித்த இளம் தாய், அவரது ஆண் குழந்தையை பெற்றெடுத்த சுமார் 43 நிமிடங்களில் அக்குழந்தையை நோர்வேயின் குழந்தைகள் நலன் காக்கும் அமைப்பு பொறுப்பெடுத்துக்கொண்டதாகவும், குறித்த இளம் தாய்க்கு அவரது குழந்தையை வளர்க்கும் உரிமை மறுக்கப்பட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கிலேயே ஐரோப்பிய மனிதவுரிமைகள் நீதிமன்றம் நோர்வேயை குற்றவாளியாக அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் நடைபெற்றதாக சொல்லப்படும் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுகையில், அப்போது 20 வயதே நிரம்பியிருந்த குறித்த இளம் தாயின் இளமைக்கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்ட நோர்வேயின் குழந்தைகள் நலன் காக்கும் அமைப்பு, தாயால் அவரது குழந்தையை சரிவர கவனித்துக்கொள்ள முடியாதென தீர்மானித்ததோடு, குழந்தை பிறந்தவுடனேயே அக்குழந்தையை தானே பொறுப்படுத்துக்கொள்வதாகவும் முன்கூட்டியே தாய்க்கு அறிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

வைத்தியசாலையில் குழந்தை பிறந்ததும் சுமார் 43 நிமிடங்கள் மட்டுமே குழந்தையை தன்னுடன் இருக்க அனுமதித்த மேற்படி அமைப்பு, பின்னர் குழந்தையை தன்னிடமிருந்து பிரித்தெடுத்து சென்றுவிட்டதாக தெரிவிக்கும் அவ்விளம்தாய், தனக்கு தாய்ப்பால் சுரப்பதை நிறுத்துவதற்கான மாத்திரைகள் வழங்கப்பட்டதோடு தன்னை வீடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது குழந்தைக்கு நல்லதொரு தாயாக இருப்பதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் குறித்த அமைப்பு நிராகரித்ததாக கூறும் இளம் தாய், குழந்தை வளர்ப்பில் அனுபவம் இல்லாதவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கும் நலன்புரி நிலையங்களில் தன்னை அனுமதித்து, தனது குழந்தையோடு இணைந்து வாழ ஆவன செய்யுமாறு தான் விடுத்த வேண்டுகோளையும் குறித்த அமைப்பு கருத்திலெடுக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் குழந்தைகள் நல சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீதி கிடைத்திருக்காத நிலையில், ஐரோப்பிய மனிதவுரிமைகள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, இப்போது குறித்த இளம் தாய்க்கு சாதகமான தீர்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வேயில் குழந்தைகள் நலன்களை காக்கும் அரச அமைப்பானது மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடந்தகாலங்களில் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. குறித்த அமைப்பின் நடவடிக்கைகள், அவ்வமைப்பின் அடிப்படை நோக்கங்களுக்கு எதிரானதாகவே இருந்துவருவதாக பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், குழந்தைகளை பெற்றோரிடமிருந்து மனிதாபிமானமில்லாத முறையில் பிரித்தெடுத்ததாக நோர்வேயில் பதிவு செய்யப்பட்டு நோர்வே நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட 39 வழக்குகள் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதுவரை 3 வழக்குகள் விசாரிக்கப்பட்டு அனைத்து வழக்குகளிலும் நோர்வே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பது அவதானிக்கத்தக்கது.

3.8 5 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments