கணவர் ஸ்ரீஹரனை வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு சிறை முகாமில் இருந்து விடுவிக்க கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

You are currently viewing கணவர் ஸ்ரீஹரனை வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு சிறை முகாமில் இருந்து விடுவிக்க கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதியான நளினி ஸ்ரீஹரன் (நளினி முருகன்), தனது கணவர் ஸ்ரீஹரனை வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு சிறை முகாமில் இருந்து விடுவிக்க கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் விடுவிக்கப்பட்ட முருகன் என்ற ஸ்ரீஹரன், திருச்சி மத்திய சிறைக்குள் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, இலங்கை குடியுரிமை காரணமாக அந்த வளாகத்தை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனது நெருங்கிய குடும்பத்தை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்.

இந்த நிலையில், நளினியின் மனுவை ஏற்று கொண்ட நீதிபதி, தமிழக அரசாங்கம் மற்றும் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO) ஆறு வாரங்களுக்குள், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நளினி தனது மனுவில், தனது மகள் ஹரித்ரா இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதாகவும், எனவே தமது கணவர் இங்கிலாந்தில் மகளுடன் வாழ விரும்புகிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக அவர் தனது கடவுச்சீட்டை பெற இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், எனினும் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போது அவரால் அதனை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசாங்கத்தின் கொள்கையின்படி, வெளிநாட்டினர், சிறையில் இருந்து விடுதலையானதும், சில நிபந்தனைகளின் கீழ் மாநிலத்தில் குடும்பத்துடன் வசிக்க அனுமதிக்கப்படுவதாக நளினி குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, மற்றவர்கள் தங்களுக்கு விருப்பமான வெளிநாடுகளில் தஞ்சம் கோர அனுமதிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், வெளிநாட்டவர்களின் பிராந்திய பதிவு அலுவலகத்தின் உத்தரவு காரணமாக, ஸ்ரீஹரன் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் வரை முகாமில் இருந்து வெளியேறுவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நளினி சுட்டிக்காட்டியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments