தமது அன்பிற்குரியவர்கள் தொடர்பான வழக்குகளைக் கைவிடும்படியான எவ்வித அழுத்தங்களுமின்றி உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்குக் காணாமல்போனோரின் குடும்பத்தினர் கொண்டிருக்கும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதுடன் அதற்கு முன்னுரிமை வழங்கவேண்டியது அவசியமாகும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து பதிவான 60,000 – 100,000 இற்கு இடைப்பட்ட காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் இன்னமும் உரியவாறான தீர்வு எட்டப்படவில்லை. அதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் வடக்கில் காணாமல்போனோரின் குடும்பத்தினரால் நீதியைக்கோரி முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர்ச்சியான போராட்டம் 5 ஆவது வருடத்தைப் பூர்த்திசெய்துள்ளது.
நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி முன்னெடுத்துவரும் போராட்டங்களின்போது காணாமல்போனோரின் குடும்பத்தினர் முகங்கொடுத்த அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் எம்மால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற அரச கட்டமைப்புக்களினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என்பதுடன் முக்கிய காணாமலாக்கப்படல் வழக்குகளில் இன்னமும் எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை.
தமது அன்பிற்குரியவர்கள் தொடர்பான வழக்குகளைக் கைவிடும்படியான எவ்வித அழுத்தங்களுமின்றி உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்குக் காணாமல்போனோரின் குடும்பத்தினர் கொண்டிருக்கும் உரிமைக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதுடன் அதற்கு முன்னுரிமை வழங்கவேண்டியது அவசியமாகும் என்று மன்னிப்புச்சபை அப்பதிவில் வலியுறுத்தியுள்ளது.