அமெரிக்காவின் மொன்டானா மாநிலம் பில்லிங்ஸ் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினர் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, 44 வயதான ஆலன் ஸ்மித் என்பவர் தனது உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் உட்பட நான்கு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளில் 13 வயது சிறுவன், 7 வயது சிறுமி, 15 வயது சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோர் அடங்குகின்றனர்.
சம்பவத்தின்போது வீட்டிலிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்பின்னர் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 1 மணி வரை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
12 வயது சிறுமி 911 அவசர உதவி எண்ணுக்கு அழைத்து, தனது குடும்பத்தினரை காப்பாற்ற முயன்றதாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் தனது பெற்றோர், பாட்டி, சகோதரி மற்றும் நான்கு குழந்தைகளை ஆலன் ஸ்மித் கொலை செய்த பின்னர் வீட்டுக்கு தீ வைத்ததாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். பின்னர் பொலிஸாரால் எதிர்கொள்ளப்பட்ட அவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆலன் ஸ்மித் சில வாரங்களுக்கு முன்புதான் பெற்றோரின் வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னர் எதிர்பாராதவிதமாக குடும்ப இரவு உணவின்போது வீட்டுக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் இந்த ஆண்டு இடம்பெற்ற 22ஆவது பெருமளவிலான கொலைச் சம்பவம் என அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 சம்பவங்கள் குடும்ப அல்லது தனிப்பட்ட தகராறுகளுடன் தொடர்புடையவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.






