நேபாள எல்லைப் பகுதியில் பேரழிவு: 579 சுற்றுலாப் பயணிகள் காணவில்லை
நேபாளத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவில் காணாமல் போன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 579 ஆக உயர்ந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேபாள பொலிஸாரின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.
காணாமல் போனவர்களில் 28 நாடுகளைச் சேர்ந்த 466 வெளிநாட்டு பிரஜைகளும், 113 நேபாள பிரஜைகளும் உள்ளனர். அவர்களில் 54 பேர் அமெரிக்கர்களும், 33 பேர் பிரித்தானியர்களும் ஆவர். மேலும், 105 இந்தியப் பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உள்ளூர் பொலிஸாரை மேற்கோள்காட்டி AFP வெளியிட்ட தகவலின்படி, நேபாளத்தில் 157 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குறைந்தது 93 பேர் காயமடைந்துள்ளனர். சீனப் பகுதியில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளிலும் சேர்த்து குறைந்தது 160 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதேவேளை, சீன எல்லைப் பகுதியிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அங்கு உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
105 இந்தியர்களை காணவில்லை
நேபாள சுற்றுலா அதிகாரிகளின் தகவலின்படி, காணாமல் போனவர்களில் 105 இந்தியப் பிரஜைகள் உள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் காணாமல் போயுள்ளனர்.
மேலும், 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அவர்களின் தேசிய இனமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதனிடையே, இந்த பேரழிவில் நோர்வே பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என நோர்வே வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் சுமார் 30 நோர்வே பிரஜைகள் தங்களது பயணத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களுக்கு நோர்வே அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவு
புதன்கிழமை முன்னதாக, நேபாள அதிகாரிகள் நிலநடுக்கமே வெள்ளத்துக்கும் மண்சரிவுக்கும் காரணமாக இருந்ததாக தெரிவித்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, உள்ளூர் நேரப்படி காலை 8.37 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






