கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு நாட்களில் மழை தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரிமலைக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரம்பிகுளம், சோலையார் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், அணைகளை திறப்பது குறித்து முடிவெடுக்க உயர்மட்ட குழுவை அமைத்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளாவில் கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. கன மழையால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. புல்லகாயார் (Pullakayar ) ஆற்றில் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் கரைபுரண்டோடுவதால் ஆற்றங்கரையோரத்தில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டுமானங்கள் அனைத்தும் சேதமடைந்தன. கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் காணாமல் போனவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் கூட்டிக்கலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 7 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதுவரை அங்கு 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் சோலையார், பரம்பிக்குளம் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து இரு அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், சாலகுடி (Chalakudy) ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டாவில் உள்ள காக்கி அணை திறக்கப்பட்டுள்ளதால் பம்பா ஆற்றில் நீர் மட்டம் 15 சென்டிமீட்டர் உயரத்திற்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சபரிமலைக்கு ஐப்பசி மாத பூஜைக்காக பக்தர்கள் வர தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் கே.ராஜன் அறிவித்தார். சபரிமலைக்கு திங்கட்கிழமை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென தடை விதிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த பக்தர்கள் சிலர் நிலக்கல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடுக்கி அணையில் நீர் மட்டம் 2 ஆயிரத்து 396 அடியை கடந்துள்ளது. முழு கொள்ளளவை எட்ட இன்னும் 7 அடியே உள்ளதால், இடுக்கி அணைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், அணைகளை திறப்பது குறித்து முடிவெடுக்க உயர்மட்ட குழுவை அமைத்து பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, வரும் 20ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மீட்பு பணிகளை விரைவுபடுத்தும் விதமாக இடுக்கி, கோட்டயம், கொல்லம், கன்னூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு கூடுதலாக 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளை வரும் 25ஆம் தேதி வரை திறக்க வேண்டாம் என்று பினராயி விஜயன் உத்தரவிட்டுளார். கனமழை வெள்ளம் காரணமாக சென்னை எழும்பூர் – கொல்லம் விரைவு ரயில் மற்றும் பாலக்காடு – நெல்லை விரைவு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தபோதும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. : இல்லம் தேடி கல்வி… ரூ 1000 ஊக்கத்தொகை… தன்னார்வலர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்ட சுமார் ஐந்தாயிரம் பக்தர்கள் பாதி வழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அதிகாரிகள் மறுத்ததால், எரிமேலி பகுதியில் வழிபாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.