கேரளாவை உலுக்கும் ஜிகா வைரஸ்: தமிழகத்திலும் ஊடுருவ வாய்ப்பு?

You are currently viewing கேரளாவை உலுக்கும் ஜிகா வைரஸ்: தமிழகத்திலும் ஊடுருவ வாய்ப்பு?

கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து, குமரி எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடி மற்றும் எல்லைப்புற கிராமங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கரோனா பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ள வேளையில், தற்போது ஜிகா வைரஸ் பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்துள்ள, கேரள பகுதியான பாறசாலையைச் சேர்ந்த 13 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அப்பகுதியில் கேரள மாநில சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழக எல்லையை ஒட்டி ஜிகா வைரஸ் தாக்கம் இருப்பதால், குமரி மாவட்டத்திலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியை மும்முரப்படுத்தியுள்ளனர். கேரள எல்லையில் உள்ள குமரி மாவட்ட சோதனைச் சாவடிகளான களியக்காவிளை, காக்காவிளை, நெட்டா சோதனைச்சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கின்றனர்.

மேலும், குமரி மாவட்ட சுகாதாரத் துறையினர் 25 பேர் அடங்கிய குழுவினர் கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள பளுகல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்கள் குறித்து சோதனை மேற்கொண்டனர். ஜிகா வைரஸ் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பரவாமல் தடுக்கும் வகையில் எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply