கைது வேட்டை ஆரம்பம் – இதுவரை 90 பேர் கைது!

You are currently viewing கைது வேட்டை ஆரம்பம் – இதுவரை 90 பேர் கைது!

கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, நேற்றுமுன்தினம் மட்டும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹாவைச் சேர்ந்த 09 சந்தேக நபர்களும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 04 சந்தேக நபர்களும் நேற்று கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

15 சந்தேக நபர்கள் நீர்கொழும்பையும் 17 சந்தேக நபர்கள் பொலன்னறுவையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார். இதேவேளை, கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் இந்திராணி அத்தநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மினுவாங்கொட பிரதேச சபையின் தலைவர் குமார அரங்கல்ல மற்றும் மினுவாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஹசந்த லக்மால் பெரேரா ஆகியோரின் வீடுகளுக்கு தீ வைத்த மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேவேளை, நாடு முழுவதும் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் தீ வைப்புச் சம்பவங்கள் மற்றும் சொத்து அழிவை கட்டுப்படுத்த சிறீலங்கா காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கூடிய போது இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

இந்தக் கூட்டத்துக்கு சிறீலங்கா காவல்துறைமா அதிபரும் அழைக்கப்பட்டிருந்த நிலையில் எம்.பி.க்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீ வைப்பு மற்றும் வாகனங்களுக்கு சேதம் விளைவிப்பதை கட்டுப்படுத்துவதற்கு சிறீலங்கா காவல்துறை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply