கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருந்த சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சிங்கப்பூரில் ஒரே நாளில் 728 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 23 ஆம் தேதி சிங்கப்பூரில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் நாடு தழுவிய அளவில் கொரோனா பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டன. ஆசியாவில் அதிக அளவிலான விமானப் போக்குவரத்தை கையாளும் விமான நிலையங்களில் ஒன்றான சாங்கி விமான நிலையத்தில் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
வணிக வளாகங்கள், பள்ளிகளில் உடல் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு காய்ச்சல் உள்ளவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பிப்ரவரி மாத மத்தியில் சுவாசப் பிரச்னை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 900 பொது சுகாதார முன்னெச்சரிக்கை மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கியிருந்தன.
இவை யாருக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும் என்பதனை வரையறுத்ததோடு பொது மருத்துவமனைகளில் நெருக்கடியை குறைத்து மருத்துவமனைகள் நோய் பரப்புமிடங்களாக மாறாமல் தவிர்த்தன.
நோயின் தீவிரம் குறித்து அன்றாடம் “WhatsApp” மூலம் மக்களுக்கு தகவல்களும், முன்னெச்சரிக்கை குறிப்புகளும் தரப்பட்டன. தெளிவான திட்டமிடல் இருப்பதால் சீனா, தென்கொரியா, இத்தாலியைப் போல நமது நாட்டை கொரோனா முடக்கப் போவதில்லை என்று சிங்கப்பூரின் பிரதமர் மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். இதனால் சிங்கப்பூர் வழக்கம் போல இயங்கியது. ஆனால் அங்குதான் கொரோனா மீதான சிங்கப்பூரின் கணிப்பு தவறிப்போனது. பிப்ரவரி 29 ஆம் தேதி சிங்கப்பூரில் கொரோனாவல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102 ஆக இருந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி அது 1000 ஆக உயர்ந்தது. இதனால் வேறு வழியின்றி ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஏப்ரல் 10 ஆம் தேதியன்று 2000 ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆம் தேதி இரு மடங்காகி 4 ஆயிரத்து 427 ஆக உயர்ந்தது. 15 ஆம் தேதியன்று ஒரே நாளில் 447 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 16 ஆம் தேதி அதிகபட்ச எண்ணிக்கையாக 728 பேர் பாதிக்கப்பட்டனர்.
முதலிலேயே விழித்துக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்தபோதும், எதிர்பாராதவிதமாக கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள சிங்கப்பூர், தற்போது மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.