முடக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அரசியலமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு தமது பூரண ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஆற்றிய அக்கிராசன உரையின்போது புதிய அரசியலமைப்பு, வலுவான பாராளுமன்றம், சுயாதீன நீதித்துறை உள்ளிட்ட விடயங்கள் பற்றி கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
2015இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மக்கள் ஆணைக்கு அமைவாக ஏகமனதான தீர்மானத்துடன் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு வழிப்படுத்தும் குழு, உபகுழுக்கள், மக்கள் கருத்தறியும் குழு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டு புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
ஏறக்குறைய அச்செயற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்திருந்த நிலையிலேயே அரசியல் குழப்பநிலைகள் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து அப்பணிகளை முன்னெடுக்க முடியாது முடக்கப்பட்டுள்ளன.
குறித்த செயற்பாடுகளை முன்னெடுத்த போது தற்போதைய ஜனாதிபதி சார்ந்திருக்கும் தரப்பின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தார்கள். வழிப்படுத்தும் குழுவின் உறுப்பினர்களாகவும் மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு பற்றி ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட உபகுழு உள்ளிட்டவற்றின் உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.
குறிப்பாக, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, சுசில் பிரேம்ஜயந்த, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளில் முழுமையாக பங்கேற்றிருந்தார்கள்.
ஆகவே மீண்டும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதாக இருந்தால் ஏறக்குறைய பணிகள் பூர்த்தியடையும் நிலையில், தற்போதைய பாராளுமன்ற காலத்தில் முன்னெடுத்த அந்த பணிகளை முன்னெடுக்க முடியும்.
மீண்டும் ஒருதடவை காலத்தினை வீணடிப்பதை விடவும் குறித்த முன்மொழிவுகள் தொடர்பாக மீளாய்வு செய்து அச்செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கு மாகவிருந்தால் நாம் அதற்கு ஒத்து ழைப்புக்களை வழங்குவதற்கு தயா ராகவே இருக்கின்றோம் என்றார்.