சாவகச்சேரியில் தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு!

You are currently viewing சாவகச்சேரியில் தந்தையும் 9 வயது மகனும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சிறீலங்கா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் சந்தியிலிருந்து கனகம் புள்ளியடிக்குச் செல்லும் வீதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் தந்தையும் அவரது 9 வயது மகனும் உயிரிழந்துள்ளனர்.

மத்துவில் தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த செல்வத்துரை செல்வவராஜ் (51) மற்றும் அவரது மகனான செல்வராஜ் தேசந்த் (09) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, மகன் ஆகியோர் மீது பின்னால் வந்த கே.டி.எச் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் பயணித்தவர்கள், வாகனத்தை சம்பவ இடத்தில் கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, தப்பிச் சென்ற சாரதி உள்ளிட்டவர்களைக் கைது செய்யுமாறு கோரி, அப்பகுதி மக்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மதுபானம் அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காகக் கைது செய்யப்பட்ட சாரதி யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் சிறீலங்கா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply