சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியில் இருந்து தமிழ்த் தேசியம் இல்லாது போய்விடும் என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்பதற்காகவே தலைவர் தெரிவில் போட்டியிடுகின்றேன். இருந்த போதிலும் தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் சக வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கே எனது வாக்கை அளிப்பேன். கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் 90 வீதமான பொதுச் சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசியத்துடன் பயணிக்கும் சிறிதரனுக்கே ஆதரவளிப்பார்கள்.
தமிழ்த் தேசியத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் மற்றொரு சக வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அக்கட்சியில் இருந்து தமிழ்த் தேசியம் இல்லாது போய்விடும்.”
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும், சிறிதரனும் போட்டியிடப்போவதாக நான் அறிந்தேன். அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து யாராவது போட்டியிட வேண்டுமென நான் ஏனையவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். அப்போது அவர்கள் என்னைப் போட்டியிடுமாறு வலியுறுத்தினார்கள். அதன்படியே நான் இந்தத் தலைவர் தெரிவுக்குப் போட்டியிடுகின்றேன்.’ – என்றார்.