சென்னைய துறைமுகத்தில் இருந்து 40 தொன் ஒக்ஸிஜனை ஏற்றிக்கொண்டு சக்தி என்ற இலங்கைக் கடற்படைக் கப்பல் இன்று காலை புறப்பட்டது.
அத்துடன், விசாகபட்டினத்தில் இருந்து மற்றொரு இந்திய கடற்படைக் கப்பல் 100 தொன் ஒக்ஸிஜனை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை இலங்கை நோக்கி புறப்பட்டதாக இந்திய கடற்படைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தொற்று நோயாளர் தொகை அதிகரித்துள்ளதுடன், ஒக்ஸிஜன் தேவையும் அதிகரித்தை அடுத்து இந்தியாவில் இருந்து ஒக்ஸிஜனைப் பெற்றுவர இலங்கைக் கடற்படைக் கப்பல் கடந்த 17 ஆம் திகதி இந்தியா சென்றது. அங்கிருந்து இன்று காலை புறப்பட்ட இந்தக் கப்பல் 23 ஆம் திகதி இலங்கையை வந்தடையும்.
அத்துடன், நேற்று மாலை விசாகபட்டினத்தில் இருந்து 100 தொன் ஒக்ஸிஜனுடன் புறப்பட்ட இந்தியக் கடற்படைக் கப்பல் 23 ஆம் திகதி இலங்கை வந்தடையவுள்ளது.
இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட ஒக்ஸிஜனை எடுத்துவர உதவுமாறு இலங்கைக் கடற்படையால் இந்தியக் கடற்படையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் ஒக்ஸிஜனை ஏற்றிக்கொண்டு இந்திய கடற்படைக் கப்பல் வருகிறது.
அத்துடன், தேவைக்கேற்ப இலங்கைக் கடற்படைக்கு தனது உதவிகளை தொடர்ந்து வழங்கவும் தயாராக உள்ளதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.