யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று(15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன எனவும், ‘தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 01’ இல் இருந்து 63 என்புத் தொகுதிகளும், ‘தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 02’ இல் இருந்து இரண்டு என்புத் தொகுதிகளும் என மொத்தமாக 65 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன எனவும் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா மன்றில் வெளிப்படுத்தினார்.
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான இடைக்கால அறிக்கையும், நீல நிறப் புத்தகப்பையுடன் (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பையுடன்) மீட்கப்பட்ட சிறுவனின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று அறிவித்திருந்த நிலையில், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினுடைய அறிக்கையும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினுடைய அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.






