டிரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் 2 மூத்த அதிகாரிகள் பதவி நீக்கம்!

  • Post author:
You are currently viewing டிரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் 2 மூத்த அதிகாரிகள் பதவி நீக்கம்!

அமெரிக்காவில் டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணையில், அவருக்கு எதிராக சாட்சியம் அளித்த மூத்த அதிகாரிகள் 2 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஜோ பிடெனின் செல்வாக்கை குறைப்பதற்காக, உக்ரைனில் தொழில் நடத்தி வருகிற அவர் மீதும், அவரது மகன் ஹண்டர் பிடென் மீதும் ஊழல் விசாரணை நடத்துமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்தார், அப்படி அவர்கள் மீது விசாரணை நடத்தாவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் பயங்கரவாத ஒழிப்பு நிதி வழங்கப்பட மாட்டாது எனவும் கூறினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

டிரம்ப் பதவியை தவறாக பயன்படுத்தி அரசியல் லாபம் பெற முயன்றதாக ஜனநாயக கட்சி அவர் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தது.

இதில் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் வெற்றி பெற்றது. ஆனால் செனட் சபையில் தீர்மானம், மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறினால் டிரம்ப் பதவி பறி போய்விடும் என்ற நிலையில், அங்கு தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் டிரம்ப் பதவி தப்பியது.

இந்த பதவி நீக்க தீர்மானத்தின் மீது அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நடந்த விசாரணையின்போது, டிரம்புக்கு எதிராக 2 மூத்த அதிகாரிகள் சாட்சியம் அளித்தனர். அவர்கள், ஐரோப்பிய கூட்டமைப்புக்கான அமெரிக்க தூதர் கார்டன் சாண்ட்லேண்ட், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசகர் அலெக்சாண்டர் விண்ட்மேன் ஆகியோர் ஆவார்கள்.

கடந்த புதன்கிழமை செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்து, தனது பதவி தப்பியதும் இவர்களை பதவி நீக்கம் செய்ய டிரம்ப் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருவரும் அதிரடியாக நேற்று முன்தினம் நீக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி கார்டன் சாண்ட்லேண்ட் விடுத்துள்ள அறிக்கையில், “ஐரோப்பிய கூட்டமைப்புக்கான தூதர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி உள்ளார். எனக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்ததற்காக ஜனாதிபதிக்கும், நிலையான ஆதரவு அளித்து வந்ததற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவுக்கும், ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள நிபுணர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

அதே நேரத்தில், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசகர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டு விடுவோம் என்று அலெக்சாண்டர் விண்ட்மேன் எதிர்பார்த்து இருந்தார் என தகவல்கள் கூறுகின்றன.

இவர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நடந்த விசாரணையின்போது, “கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி ஜனாதிபதி டிரம்ப், முறையற்ற விதத்தில் உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியது அறிந்து கவலை அடைந்தேன்” என கூறினார். தான் பழிவாங்கப்படுவோம் என தெரிந்தும், எப்படி டிரம்புக்கு எதிராக சாட்சியம் அளிக்கிறீர்கள் என கேட்டபோது, “நாடாளுமன்ற உறுப்பினர்களே, இது அமெரிக்கா. இங்கு உரிமைதான் முக்கியம்” என கூறியது நினைவுகூரத்தக்கது.

பதவி நீக்க விசாரணையில் தனக்கு எதிராக சாட்சியம் அளித்த 2 மூத்த அதிகாரிகளை டிரம்ப் பதவியை விட்டு நீக்கி இருப்பது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகிர்ந்துகொள்ள