டென்மார்க்கில் நடைபெற்ற ஈழத்தமிழரின் வரலாற்றுக் கண்காட்சி.

You are currently viewing டென்மார்க்கில் நடைபெற்ற ஈழத்தமிழரின் வரலாற்றுக் கண்காட்சி.

டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக் கூடத்தினரால் ஒக்டோபர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட வரலாற்றுக் கண்காட்சி 2023 என்னும் நிகழ்வானது, வரலாற்றில் பொன்னால் பதிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். சொல்லுக்கு முன்னே செயல் இருக்க வேண்டும். செயலால்தான் நாம் செல்வாக்குப் பெற்றோம்! என்னும் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்த இக் கண்காட்சியானது புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழர், எம் மாவீரர் கண்ட கனவை நனவாக்கும் இலக்கை நோக்கிய பயணத்தில் பயணிக்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது என்பது மிகப் பெரிய உண்மை.

இரண்டு நாட்களிலும் தமிழீழத் தேசியக் கொடியேற்ல், பொதுச்சுடரேற்றம், 2ஆம் லெப். மாலதியின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடரேற்றம், மலர்வணக்கம், அகவணக்கம், மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் கீதம் என்பன கண்காட்சியின் தொடக்க நிகழ்வுகளாக அமைந்தன. தொடர்ந்து கற்காலம் தொடங்கி இன்று வரையிலான ஈழத்தமிழரின் வரலாற்றுச் சுருக்கம் காணொளியில் காட்டப்பட்டது. இக்காணொளிப்பதிவானது, கண்காட்சியைக் காண வந்திருந்தோர் எமது வரலாறு சார்ந்த தெளிவுடனும் உணர்வுடனும் செல்லும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்காட்சியைக் காண வந்தோர் தமிழரது மரபுவழி உணவுகள், அவற்றின் சிறப்புகள் போன்ற பண்பாட்டு அடையாளங்களைக் கண்டும் உண்டும் களித்து மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து, கற்காலம் முதல் ஐரோப்பியர் காலம் வரையிலான வரலாறுகள் சான்றுகளுடன் காட்சிப்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இப்பகுதியானது, ஈழத்தின் தொன்மைக் குடிகள் நாங்களே என்ற உணர்வை ஏற்படுத்தியது. சிங்கள ஆட்சியாளர்களால் தமிழினத்தின் உரிமைகளைப் பறிக்கும் நோக்குடன் நடைமுறைப்படுத்திய இன்றும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் சட்டங்கள் பற்றி தெளிவைக் கொடுக்கும் பகுதியானது, தமிழினத்தை அழிக்கும் அரசின் திட்டங்களைக் காட்சிகளாக வந்திருந்தோர் மனங்களில் பதியச் செய்தது. தொடர்ந்து தமிழீழம் உங்களை வரவேற்கிறது என்ற மண்டபத்திற்குள் நுழைந்தால், விடுதலை வேட்கை கொண்டு உருவாக்கப்பட்ட வான்படை, கடற்படை போன்ற பல்வேறு வகைப்பட்ட போர்முறைகள் பற்றிய காட்சிகள் பழந்தமிழரின் வீரத்துக்கு இணையாக எமது வீரமறவர்கள் இருந்தார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தின. மண்டபத்தின் ஒரு பக்கம் நடைமுறை அரசின் கலை கல்வி சார்ந்த கொள்கைககள் பற்றிய காட்சிகள் தெளிவான விளக்கங்களுடன் காட்சியமைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கம் பொருண்மிய மேம்பாட்டுக் கொள்கைகள் பற்றியும் போர்க்காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவடையச் செய்ய வேண்டுமென்ற நோக்குடன் உருவாக்கப்பட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் செயற்பாடுகள் பற்றிய விளக்கங்கள் தமிழீழத் தேசியத் தலைமையின் திட்டமிட்ட செயற்பாடுகளை வலியுறுத்தின. இறுதியாகப் போரும் வலியும் என்ற பகுதியின் உயிரோட்டமான காட்சியமைப்புகள், வந்திருந்தோர் மனங்களில் வலிகளைத் தந்ததுடன் மட்டுமல்லாது சிந்திக்கவும் வைத்தன. இவற்றைவிட அறிவூட்டல், வாழ்வியல், தொல்காப்பியம் சொல்லும் வாழ்வியல் போன்ற சிறப்புப் பகுதிகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.

இக்கண்காட்சியின் முதல்நாள் இளையோருக்கான நாளாகத் திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும். பாடநூல்களில் கற்றறிந்த ஈழத்தமிழரின் வரலாற்றுத் தொடர்ச்சியினை, இவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையில் உயிரோட்டமான முறையில் காட்சியமைக்கப்பட்டு, வாழிடமொழியிலும் விளங்கங்கள் கொடுக்கப்பட்டு மிகச் சிறப்பான கண்காட்சியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அயல்நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்தவர்களென மண்டபங்கள் நிறைந்து மக்கள் காணப்பட்டமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நாம் எங்கு வாழ்ந்தாலும் தாய்மொழிப்பற்று, தாயகப்பற்று, இனப்பற்றுடன் வாழ்கிறோம் இனியும் வாழ்வோம் என்ற நம்பிக்கையை எமக்கு ஊட்டியது.
பலரது விலைமதிக்க முடியாத உழைப்பு, குறிப்பாக இளையோர் அமைப்பின் ஒத்துழைப்புகள், வினைத்திறன் மிக்கோரின் திறமைகள் போன்ற கூட்டுமுயற்சியின் விளைவாகவே இக்கண்காட்சி மாபெரும் வெற்றியை அடைந்தது. இவ்வெற்றியானது அயல்நாடுகளிலிருக்கும் தமிழர் கல்விசார் அமைப்புகளும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வத்தையும் விருப்பத்தையும் ஏற்படுத்தும் என நாம் திடமாக நம்புகின்றோம்!

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments