தமது நாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா!

You are currently viewing தமது நாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா!

சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்யர்கள், புட்டின் தலைமையிலான அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய, இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

நேற்று பிற்பகல் 12.50 மணிக்கு நாட்டிலிருந்த இறுதிக் கட்ட ரஷ்ய சுற்றுலா பயணிகள் கட்டுநாயக்கவிலிருந்து ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி பயணித்தனர்.

ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் ‘ விமானம் ஒன்றினை இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி உருவாகியுள்ள நிலைமையை அடுத்தே ரஷ்ய சுற்றுலா பயணிகள் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வர எதிர்ப்பார்த்திருந்த சுமார் நான்கு இலட்சம் சுற்றுலா பயணிகளை இலங்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றுலாத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் ரஷ்யா திரும்புவதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையம் வந்த இறுதிக் கட்ட ரஷ்ய சுற்றுலா பயணிகளில் பலர், விமான நிலைய உள் நுழையும் பகுதியில் வைத்து ஊடகங்களிடம் பேசினர்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யர்களை உடனடியாக நாடு திரும்புமாறு தமது அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாகவும், அதன்படியே சுற்றுலாவை இடை நடுவே முடித்துக்கொண்டு நாடு திரும்ப, இறுதி விமானத்துக்கு விமான நிலையத்துக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது ஊடகங்களிடம் பேசிய எலோனா மெசன்கோவா எனும் சுற்றுலா பயணி கருத்து தெரிவிக்கையில்,

‘ 14 நாட்கள் சுற்றுலா பயணமாக நாம் இலங்கை வந்தோம். எனினும் 7 நாட்களில் நாம் நாடு திரும்ப வேண்டி ஏற்பட்டுள்ளது. நாம் ஹிக்கடுவையில் இருந்தோம். அப்போது தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் பதிவாகியுள்ளது. இதனால் எம்மை நாடு திரும்புமாறு எமது அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது.

முன்னதாக எமக்கு எமது அரசாங்கம், இலங்கைக்கு சுற்றுலா பயணம் செல்ல முடியும் என கூறி எம்மை ஊக்குவித்தது. அரசாங்கமே எம்மை இவ்வாறு இங்கு சுற்றுலா பயணத்துக்காக அனுப்பினர்.

எரிபொருள், மின்சார பிரச்சினைகளிடையேயும் நாம் மிக விருப்பத்துடன் சுற்றுலா பயணத்தை அனுபவித்தோம். எனினும் திடீரென ஏற்பட்ட இந் நிலைமையை எம்மாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமும் கவலையடைகிறோம்.

ரஷ்ய சுற்றுலா பயணிகளால், இலங்கைக்கு அந்திய செலாவணி மெருமளவு கிடைத்தது. எனினும் இப்போது இந்த நடவடிக்கையால் அது சாத்தியமற்று போயுள்ளது.

இந்த விமான தடை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பார் என நினைக்கின்றேன். இவ்வாறான நிலையில் தான் சுற்றுலா பயணத்தை உடனடியாக முடித்துக்கொண்டு நாடு திரும்புமாறு அரசாங்கம் எமக்கு அறிவித்தது.

இந்த சம்பவத்தால் எதிர் காலத்தில் கூட ரஷ்யர்கள் இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் வர பின்வாங்கலாம். ரஷ்யாவின் விமானங்கள் எந்த காரணத்துக்காகவும் கைப்பற்றப்பட மாட்டாது அல்லது தடை செய்யப்படமாட்டாது என இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எழுத்து மூல உடன்படிக்கை இருக்கும் நிலையில், ஐரோப்பாவின் சிறிய காப்புறுதி நிறுவனம் ஒன்றுக்காக, ஆயிரக் கணக்கான ரஷ்யர்களை அசெளகரியப்படுத்தியது புதுமையளிக்கிறது. எதிர்கால சுற்றுலாத் துறையையே சவாலுக்கு உட்படுத்தி இலங்கை தனது அந்திய செலாவணி மார்க்கத்தையே மூடியுள்ளமை வியப்பாக உள்ளது.

ரஷ்யாவுக்கு செல்லும் இறுதி விமானத்தில் நாமும் செல்வதற்காகவே வந்துள்ளோம்.’ என தெரிவித்தார். ரஷ்ய மொழியில் ஊடகங்களிடம் பேசிய அவரின் கருத்துக்களை, எலேனா மெசன்கோவா உள்ளிட்ட சுற்றுலா குழுவின் வழிகாட்டியா செயற்பட்ட முதித்த மெவன் குமார சிங்கள மொழியில் மொழி பெயர்த்திருந்தார்.

முன்னதாக ரஷ்யாவின் ‘ஏரோபுளோட் எயார் பஸ் ஏ 330’ விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து ,கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2 ஆம் திகதி உத்தரவிட்ட நிலையில் அதில் பயணிக்க தயாராக இருந்த 191 பேர் அருகே உள்ள ஹோட்டல்கலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில், ரஷ்யாவிலிருந்து நேற்றுமுன்தினம் வெறுமையாக வந்த எஸ்.யூ. 289 எனும் விமானம் அந்த 191 பேர் உள்ளிட்ட 275 சுற்றுலா பயணிகளை தனது நாட்டுகே அழைத்து சென்றது.

இந் நிலையில் நேற்று முற்பகல் 10.10 மணிக்கு வெறுமையாக கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானம் பிற்பகல் 12.50 மணிக்கு மேலும் 275 சுற்றுலா பயனிகலை ரஷ்யா நோக்கி அழைத்து சென்றுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments