தமிழர் தேசத்தை பறைசாற்றிய கஜேந்திரகுமார் – காலைக்கதிர் ஆசிரிய தலையங்கம்

You are currently viewing தமிழர் தேசத்தை பறைசாற்றிய கஜேந்திரகுமார் – காலைக்கதிர் ஆசிரிய தலையங்கம்

இந்தப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே இப்பத்தியில் ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டி வந்தோம். தேர்தலின் பின்னர் அமையப் போகின்ற நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பில் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை பற்றிய அட்சரகணிதம் பெரிய தாக்கத்தைச் செலுத்தாது, ஆனால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமை தாக்கத்தைச் செலுத்த முடியும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

கடந்த நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பின் கருத்தியலை அழுத்தமாகவும்இ வலிமையாகவும், சட்ட நுணுக்கத்துடனும், உரிய சொல்லாடல் தேர்ச்சியுடனும் முன்வைக்கும் திறமையுள்ளவர்களாக சம்பந்தனும், சுமந்திரனும் மட்டுமே இருந்தனர்.

ஆனால் புதிய நாடாளுமன்றத்தின் கடந்த இரண்டு நாள் அமர்வுகளை நோக்கியவர்கள் – இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக நுட்பமாக அவதானித்தவர்கள் – நாம் முன்னர் குறிப்பிட்ட தமிழர் தரப்பு உறுப்பினர்களின் ஆளுமையும் இப்போது தாக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றமையை நிச்சயம் அவதானித்திருப்பார்கள்.

நேற்றும் முன்தினமும் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் உரைகளை செவிமடுத்தோர் உறுதியாக இந்த முடிவுக்கு வந்திருப்பர்.

நீதியரசர் விக்னேஸ்வரனின் உரையில் அவரது பரந்த பட்டறிவு, அனுபவம் மற்றும் வயது முதிர்வு காரணமாக இனி என்ன நெருக்கடி வந்தாலும் முகம் கொடுக்கலாம் என்ற துணிவு போன்றவை பிரதிபலித்தன என்றால், கஜேந்திரகுமாரின் உரையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற மேடை கிடைக்காததால் இருந்த எரிச்சல் வீச்சும், மரபணு வழியாக வந்த பேரனின் சொல்லாடல் பாய்ச்சலும் முழுஅளவில் எதிரொலித்தன எனலாம்.

ஆற்றொழுக்கான ஆங்கிலத்தில், சரளமாகத் தமிழர் தரப்பின் சுதந்திர உரிமைகளை அவர் முன்வைத்தமை தமிழர்களின் நாடாளுமன்றப் போராட்டம் மீது சற்று நம்பிக்கையைத் தருவதாக அமைந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் தென்னிலங்கை மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்குக் கொடுத்த ஆணையை அங்கீகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆனால்
வடக்கு, கிழக்கு மக்கள் தமிழர் தேசத்துக்கான ஆணையையே கொடுத்திருக்கின்றார்கள், அது ஜனாதிபதிக்கோ, சிங்களத் தேசியக் கட்சிகளுக்கோ வழங்கப்படவில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அதற்கான ஆதாரங்களையும் கோடி காட்டினார்.

சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதனும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவும் தமிழர் தேசத்துக்காகவோ வாக்குக் கேட்டார்கள் என்பதை எடுத்துரைத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்த வாக்குகள் தமிழர் தேசத்துக்கு எதிரான ஆணை அல்ல, அவையும் தமிழர் தேசத்துக்குரிய ஆணை தான் என்று மறுக்க முடியாத நல்லதொரு வாதத்தை முன்வைத்தார்.

“தமிழர் தேசம் என்ற நிலைப்பாடு ஏகோபித்த விதத்தில் அமைந்திருக்கின்றது. இந்த ஆணையை நாம் மீற முடியாது. கடந்த 72 வருடங்களாக இந்த ஆணை தமிழ் மக்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.” – என ஆணித்தரமாக அவர் எடுத்துரைத்தார்.

அது மாத்திரமல்ல, இன்னொரு முக்கிய விடயத்தையும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர் தரப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிரொலித்திருக்கின்றார். இலங்கையின் இறையாண்மையை ஒப்புக்கொண்டு, ஏற்றுக்
கொண்டு, அங்கீகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒரு நாட்டில் வாழும் ஒரு தொகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலையில் நாட்டின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஓர் அரசு தனது சொந்தக் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டு, அதற்கான பொறுப்பிலிருந்து இறையாண்மையைக் காட்டித் தப்பி விட முடியாது என்று அப்பட்டமாக – வெளிப்படையாக – சிங்கள தேசத்தின் நாடாளுமன்றத்தில் முரசறைந்து கூறியிருக்கின்றார் அவர்.

“இலங்கையில் மோசமான குற்றச் செயல்கள் நடந்தன என உலகமும் கூறுகின்றது. குற்றஞ்சாட்டப்பட்ட தரப்புகளில் அரசே முதலிடத்தில் இருக்கின்றது. எந்தவொரு ஜனாதிபதியோ, நாடோ தனது நாட்டின் இறையாண்மையைக் காரணம் காட்டி இக்குற்றச் செயலுக்குக் பொறுப்புக் கூறுவதில் இருந்து தப்பிவிடமுடியாது.” – என்று முழங்கியிருக்கின்றார் அவர்.

இத்தகைய கருத்துக்களை இலங்கை நாடாளுமன்றத்தில் இனிமேலும் துணிச்சலுடன் எதிரொலிக்கப் போகின்றவர்கள் ஓரிருவர்களாகக் கூட இருக்கலாம்.

ஆனால் தென்னிலங்கையில் எந்தப் பெரிய ஜனநாயக வெற்றியை சிங்கள அரசுகள் ஈட்டினாலும், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான விடயங்களை நிலவிரிப்புக்குக் கீழே போட்டு மூடிவிட முடியாது, அது சிங்களத்தின் நாடாளுமன்றத்திலும் தீனக்குரலாகத் தன்னும் எதிரொலிக்கும் என்பதற்குச் சான்றாக ஓரிருவர் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பகிர்ந்துகொள்ள