தமிழர் தேசமாக தியாக தீபம் திலீபனின் உயிர்தியாக நாளில் ஒன்று சேர்வோம் – அருட்தந்தை சத்திவேல்

You are currently viewing தமிழர் தேசமாக தியாக தீபம் திலீபனின் உயிர்தியாக நாளில் ஒன்று சேர்வோம் – அருட்தந்தை சத்திவேல்

யாக தீபம் திலீபன் நினைவை  சுமந்து பயணிக்கும் ஊர்தியும் அதனோடு பயணித்தவர்கள் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெள்ளிக்கிழமை (22) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தியாக தீபம் திலீபன்  ஊர்தியும் அதனோடு பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் உட்பட ஏனையோர்  கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) திருகோணமலையில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தாக்கப்பட்டமைக்கு தார்மீக பொறுப்பை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலக வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களிடத்தும்,  ஒட்டு மொத்த தியாக தீபம் திலீபன் உணர்வாளர்களிடத்தும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு துறை ஜனாதிபதியிடமே உள்ளது. அவரின் பிரதிநிதியாக மாகாணத்தில் செயல்படுபவரே ஆளுனர் . அவர் தனது கடமையை செய்ய தவறி விட்டு அமைதியாக வீதியில் பயணித்த நினைவஞ்சலி குழுவினரை குற்றம் சாட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தியாக தீபம் திலீபனின் அகிம்சை உணர்வோடு கூறுகின்றோம்.

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பயணத்தை ஆரம்பித்து மூன்றாம் நாளே கொடூர கொலைவெறி இனவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது.

தாக்கியவர்களின் கைகளில் சிங்கக் கொடி காணப்பட்ட து. அதுவே ஆளுநரின்  அலுவலகத்தையும் உள்ளே அலங்கரிக்கின்றது. சிங்க  சிந்தனையே தாக்குவதற்கு காரணம்.

ஊர்தி பயணத்தை ஆரம்பித்த நேரத்தில் இருந்து அரச புலனாய்வாளர்களும் பொலிசாரும்  ஊர்தியை அதனோடு பயணித்தவர்களை நேரடியாக ஒளி/ஒலி பதிவு செய்ததோடு புகைப்படங்களையும் எடுத்து உரிய தரப்பிற்கு தொடர்ச்சியாக அனுப்பிக்கொண்டே இருந்ததோடு கள நிலவரங்களையும் தெரியப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

இவர்களுக்கு கள நிலவரம் நன்றாக  தெரிந்திருந்த நிலையிலேயே தாக்குதல் நடந்திருந்தது என்றால் அது திட்டமிட்ட இனவாதிகளின் செயல்பாடுகள் என்றே கூறவேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேரடியாக அரசின் பாதுகாப்பை மறுத்து இருந்தாலும் அவருக்கான பாதுகாப்பை தனது மாகாணத்தில் கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாகாண ஆளுநருக்கு உள்ளது.

ஊர்தி பயணத்தை ஆரம்பித்த முதல் நாளே அக்கரைபற்றில் எதிர்ப்பு இருந்தது. இரண்டாம் நாள் வாழைச்சேனை பிரதேசத்திலும் எதிர்ப்பு இருந்தது. இதனை நன்றாக தெரிந்திருந்த பாதுகாப்பு தரப்பினர் தொடர்ந்து பயணத்தை உரிய பாதுகாப்பின்றி தொடர்ந்து செல்ல அனுமதி தந்தார்கள் எனில் அது தாக்குதல் நோக்கம் கொண்டதாகும். இவ்வாறான தாக்குதலுக்கு இடம் அளித்த பொலிஸ் அதிகாரிகள் குற்றவாளிகளே. மாகாண மட்டத்தில் அவருக்கு பொறுப்பாக இருக்கின்றவர்களும் குற்றவாளிகளே. ஆளுநரும் குற்றவாளியே.

சிங்கள பௌத்த இனவாத காடையர்களை பாதுகாக்க ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் ஊர்தியோடு பயணித்தவர்கள் மீதும் குற்றம் சுமத்துகின்றார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை எவருக்கும் உள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தவும், சேதங்கள் விளைவிக்கவும் எவருக்கும் உரிமை இல்லை. தாக்கி சேதங்களை விளைவித்தவர்களை பாதுகாக்கும் நோக்கில் பொறுப்பு வாய்ந்த ஆளுநர் கருத்து தெரிவிப்பதன் மூலம் அவர் யாருக்கு பொறுப்பு வகிக்கின்றார் என்பது தெளிவாக இருக்கிறது.

எனவே ஆளுநர் அவர்கள் பொறுப்பு தவறியது முதற் குற்றம். பொறுப்பை தட்டிக் கழித்து பிழையை அடுத்தவர் மேல் சுமத்துவது அதனை விட பெரிய குற்றம். இன, மத ரீதியிலான கொலை குற்றவாளிகளே நாட்டை ஆளுகின்ற போது சாதாரண மக்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்படுவது இயல்பே.

இதற்கு முகம் கொடுக்கவும், தமிழர்களின் அரசியலை வென்றெடுக்கவும் தமிழர் தேசமாக தியாக தீபம் திலீபனின் உயிர்தியாக நாளில் ஒன்று சேர்வோம். எம் மக்கள் சக்தியை வெளிப்படுத்துவோம். காண்பிப்போம் . அரசியல் வழிதடத்தை நாம் தீர்மானிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments