தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டிய 14 ஆம் நாள் பயணம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.
28/02/2024 காலை முலூஸ் மாநகர சபை முன்றலில் அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பிற்பகல் சன்லூவி மாநகர சபையில் சந்திப்பை முடித்து விட்டு சுவிசு நாட்டுக்குள் உள்நுழைகின்றது.
பிரான்சில் முக்கிய அரசியற் சந்திப்புக்கள் நடத்தப்பட்டது. சிறிலங்கா பேரினவாத அரசின் பொய் முகத்திரை கிழிக்கப்படுவது மாத்திரமின்றி திட்டமிட்டு தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைக்காக அரசியல் முன்னெடுப்புக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 28 தடவையாக தொடரும் அறவழிப்போராட்டத்தின் தொடர்ச்சியினையும் இவ்விரு மாநகரசபைகளும் நன்கு அறிந்திருந்த நிலையில், தொடர் போராட்டத்தின் பலனாக மிக உறுதியான நம்பிக்கை வாக்குறுதிகளும் தரப்பட்டன. குறிப்பாக தாம் பிரான்சு நாட்டின் வெளி நாட்டமைச்சிற்கும் அரச அதிபருக்கும் இதுவரை தமிழர்கள் நிலை சார்ந்து அனுப்பிய கடிதங்கள் மற்றும் இம்முறை இறுதியாக அனுப்பிய கடிதங்கள் போன்றவற்றை மனித நேய ஈருருளிப்போராட்டம் மேற்கொள்வோரிடம் சமர்ப்பித்தனர்.
தொடர்ந்தும் எமது போராட்டம் எழுச்சியோடு பயணிப்பது கண்டு மெச்சிக்கொண்ட முதல்வர்கள் சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசு தமிழின அழிப்பிற்கு பொறுப்புக்கூறும் வகையில் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நீதி விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும், அதற்கு தாமும் ஆவன செய்வதோடு அல்சாசு மாநிலம் தமிழர்களின் போராட்டங்களுக்கு நிச்சயம் ஆதரவு நல்கும் எனவும் கூறப்பட்டது.
“எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனியாக நின்று, மக்களுக்குப் புறம்பாக நின்று, விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. அது நடைமுறைச் சாத்தியமான காரியமுமல்ல”
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”