தமிழீழ விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர் பாலா அண்ணா பேசுகிறார்!

You are currently viewing தமிழீழ விடுதலைப்புலிகளின் தத்துவாசிரியர் பாலா அண்ணா பேசுகிறார்!

தனது மனவேதனைகளை மனம்‌ திறந்து கொட்டினார்‌ பிரபாகரன்‌. உதவிப்‌ பொலிஸ்‌ மாஅதிபர்‌ திரு.மோகனதாஸ்‌ தமிழீழ விடுதலைப்‌ போராட்டத்திற்கு விரோதமானவர்‌ என்றும்‌ விடுதலைப்‌ புலிகள்‌ இயக்கத்தையும்‌ அதன்‌ தலைமையையும்‌ வெறுக்கிறார்‌ என்றும்‌ சிங்கள அரசின்‌ உளவுத்‌ துறையுடன்‌ அவருக்கு நெருங்கிய உறவுண்டு என்பதையும்‌ விளக்கிச்‌ சொன்னோம்‌.
அப்பொழுது, திரு.மோகனதாஸ்‌ பற்றி எமக்கு சில அந்தரங்கத்‌ தகவல்கள்‌ கிடைத்திருந்தன. அவர்‌ சிங்கப்பூருக்கு அடிக்கடி பயணம்‌ செய்து ஒரு சிங்கள உயர்தர அதிகாரியைச்‌ சந்திப்பதாகவும்‌, பெரும்‌ தொகையில்‌ லஞ்சம்‌ வாங்கி ஈழ விடுதலை அமைப்புகள்‌ பற்றி தகவல்களைப்‌ பரிமாறுவதாகவும்‌ மிகவும்‌ நம்பிக்கைக்குரிய மலையாளப்‌ பத்திரிகையாளர்‌ ஒருவர்‌ எமக்குத்‌ தெரிவித்திருந்தார்‌. இந்த விபரங்களை எல்லாம்‌ நாம்‌ முதலமைச்சருக்கு தெரிவித்தோம்‌. நாம்‌ கூறியதையெல்லாம்‌ மிகவும்‌ ஆர்வமாகவும்‌, உன்னிப்பாகவும்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தார்‌ எம்‌.ஜி.ஆர்‌. நாம்‌ கொடுத்த தகவல்கள்‌ முதலமைச்சருக்கும்‌, மோகனதாஸ்க்கும்‌ மத்தியில்‌ பெரிய விரிசலை ஏற்படுத்தியது என்பதை பின்பு அறிந்தோம்‌.
எம்‌.ஜி.ஆருடனான அன்றைய சந்திப்பு எமக்கு சாதகமாக அமைந்தது. விடுதலைப்‌ புலிகளிடமிருந்து பறிமுதல்‌ செய்யப்பட்ட ஆயுதங்கள்‌ அனைத்தையும்‌ திருப்பி ஒப்படைக்குமாறு தமிழக காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்‌ எம்‌.ஜி.ஆர்‌. எமது இயக்கத்திடமிருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்கள்‌ மிகவும்‌ சொற்பம்‌. இந்திய அரசிடமிருந்தும்‌, வெளியுலகத்திடமிருந்தும்‌ பெறப்பட்ட ஆயுதங்களில்‌ பெரும்பாலானவற்றை நாம்‌ ஏற்கனவே தமிழீழத்திற்கு அனுப்பியிருந்தோம்‌. ஏனைய அமைப்புகளிடமிருந்தே ஏராளமான ஆயுதங்கள்‌ கைப்பற்றப்பட்டன. மொத்தம்‌ நாற்பது கோடி பெறுமதியான ஆயுதங்களைக்‌ கைப்பற்றியதாக திரு.மோகனதாஸ்‌ அறிவித்திருந்தார்‌. ஏனைய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட ஆயுதங்களையும்‌ புலிகளிடம்‌ ஒப்படைக்குமாறு கேட்டோம்‌. எவ்வித தயக்கமுமின்றி அதற்கு இணங்கினார்‌ எம்‌.ஜி.ஆர்‌. ஏனைய அமைப்புகளிடமிருந்து பறிமுதல்‌ செய்த சகல ஆயுத தளபாடங்களையும்‌ விடுதலைப்‌ புலிகளிடம்‌ திருப்பி ஒப்படைக்கும்‌ பொறுப்பும்‌ திரு.மோகனதாஸிடம்‌ கையளிக்கப்பட்டது. எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆயுதப்‌ பறிமுதல்‌ அதிர்ஷ்டத்தில்‌ முடிந்தது என எண்ணிக்‌ கொண்டோம்‌.
முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆரின்‌ அன்பும்‌ ஆதரவும்‌ இருந்தபோதும்‌, தமிழ்நாட்டில்‌ தங்கியிருந்து இந்திய அரசின்‌ அழுத்தங்களுக்கு ஆளாவதை தலைவர்‌ பிரபாகரன்‌ விரும்பவில்லை. இந்திய ஆதிக்கப்‌ பிடியிலிருந்து விடுபட்டு, தமிழீழத்தில்‌ சுதந்திரமாக இயங்கி போராட்டத்தை முன்னெடுப்பதையே அவர்‌ விரும்பினார்‌. யாழ்ப்பாணம்‌ செல்வதற்கான இரகசியத்‌ திட்டங்கள்‌ தீட்டப்பட்டன. 1987ம்‌ ஆண்டு ஜனவரி முற்பகுதியில்‌ பிரபாகரன்‌ தமிழீழம்‌ சென்றடைந்தார்‌. நானும்‌ அடேலும்‌ தொடர்ந்தும்‌ சென்னையில்‌ தங்கியிருந்து அரசியற்‌ பரப்புரைப்‌ பணியில்‌ ஈடுபட்டிருந்தோம்‌. பிரபாகரன்‌ யாழ்ப்பாணம்‌ சென்றுவிட்டார்‌ என்ற செய்தி தமிழகப்‌ பத்திரிகைகளில்‌ பிரசுரமாகியதை அடுத்து முதலமைச்சர்‌ என்னை அவசரமாக அழைத்தார்‌.
எம்‌.ஜி.ஆர்‌ அவர்களுடன்‌ திரு.சிதம்பரமும்‌ இருந்தார்‌. அப்பொழுது சிதம்பரம்‌ இந்திய மத்திய அரசின்‌ ஒரு முக்கிய அமைச்சராகப்‌ பணிபுரிந்தார்‌. பிரதமர்‌ ரஜீவ்‌ காந்திக்கு மிகவும்‌ நெருக்கமானவர்‌. இலங்கையின்‌ இனப்‌ பிரச்சினை குறித்து ரஜீவிற்கும் ஆலோசனையும்‌ வழங்கி வந்தார்‌. மத்திய அரசின்‌ தூதுவராக ஏதோ பிரச்சினையுடன்‌ வந்திருக்கிறார்‌ என எண்ணினேன்‌. புன்முறுவலுடன்‌ என்னை வரவேற்ற எம்‌.ஜி.ஆர்‌ தனக்கு முன்பாக அமரச்‌ சொன்னார்‌. நான்‌ அமர்ந்த அந்தக்‌ கணமே திரு.சிதம்பரம்‌ என்‌ மீது சீறி விழுந்தார்‌. “நீங்கள்‌ நன்றிக்‌ கடன்‌ உள்ளவர்களா? உங்களுக்கு பொறுப்புணர்வு ஏதாவது உண்டா?” என்று கதறினார்‌. எதற்காக இப்படி ஆத்திரப்படுகிறார்‌. முதலில்‌ எனக்கு ஒன்றும்‌ புரியவில்லை.
“உங்களது இயக்கத்திற்கு இந்திய அரசு எத்தனையோ உதவிகளைச்‌ செய்திருக்கிறது. உங்களுக்கு புகலிடம்‌ தந்து, உங்களது போராளி கொடுத்து, ஆயுதங்கள்‌ கொடு, செய்யவில்லையா? இப்பொழுதும்‌ கூட ஈழத்‌ தமிழரின் பிரச்சினைக்கு சமாதான வழியில்‌ தீர்வுகாண இந்திய அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. இப்படி எல்லாம்‌ நாம்‌ செய்தபோதும்‌ நீங்கள்‌ எமக்கு விரோதமாகச்‌ செயற்படுகிறீர்கள்‌. இந்திய அரசுக்கு நீங்கள்‌ எந்த வகையிலும்‌ ஒத்துழைப்புத்‌ தரவில்லை.” என்றார்‌ அமைச்சர்‌ சிதம்பரம்‌. நான்‌ மெளனமாகக்‌ கேட்டுக்கொண்டிருந்தேன்‌.
“இப்பொழுது உங்களது தலைவர்‌ பிரபாகரன்‌ எங்கே இருக்கிறார்‌? திடீரென மாயமாக மறைந்து விட்டார்‌. யாருக்கும்‌ தெரிவிக்காமல்‌ யாழ்ப்பாணம்‌ சென்றுவிட்டாராமே? இப்படிச்‌ செய்வது சரியா? மத்திய அரசுக்குத்‌ தெரியப்படுத்தாதது பரவாயில்லை. ஆனால்‌ தமிழ்நாட்டு அரசுக்காவது தெரியப்படுத்தியிருக்கலாம்‌ அல்லவா? அப்படித்தான்‌ செய்யாவிட்டாலும்‌ முதலமைச்சருக்காவது சொல்லியிருக்கலாம்‌ அல்லவா? முதலமைச்சர்‌ உங்களுடன்‌ எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்‌. ஆதரவாக இருக்கிறார்‌. அவருக்காவது தெரியப்படுத்தியிருக்கலாம்‌ அல்லவா? அப்படிச்‌ செய்யாதது பெரிய தவறு” என்றார்‌ திரு.சிதம்பரம்‌. முதலமைச்சருடன்‌ முடிந்துவிடப்‌ பார்க்கிறார்‌ என்பது தெளிவாகியது. எம்‌.ஜி.ஆர்‌ எதுவுமே பேசவில்லை. என்னைப்‌ பரிதாபமாகப்‌ பார்த்துக்‌கொண்டிருந்தார்‌.
“எண்பத்து மூன்று இறுதிப்‌ பகுதியிலிருந்து பல வருடங்களை பிரபாகரன்‌ இந்தியாவில்‌ கழித்துவிட்டார்‌. அவர்‌ இங்கு தஞ்சம்‌ கேட்டு வரவில்லை. இராணுவப்‌ பயிற்சித்‌ திட்டம்‌ சம்பந்தமாக இந்திய அரசின்‌ அழைப்பின்‌ பேரில்தான்‌ அவர்‌ இங்கு வந்தார்‌. இங்கு தங்கியிருந்த காலத்தில்‌ பல கசப்பான அனுபவங்களையும்‌ பெற்றார்‌. இப்பொழுது போராட்ட களத்திற்கு செல்ல வேண்டிய காலமும்‌ வரலாற்றுத்‌ தேவையும்‌ அவருக்கு ஏற்பட்டு விட்டது. தமிழீழக்‌ களத்திலிருந்துதான்‌ எமது மக்களின்‌ உரிமைப்‌ போராட்டத்தை அவர்‌ முன்னெடுக்க விரும்புகிறார்‌. அதனால்தான்‌ அவர்‌ தாயகம்‌ செல்ல வேண்டி நேர்ந்தது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம்‌ செல்வது மிகவும்‌ ஆபத்தான பயணம்‌. தரைப்‌ பாதை மட்டுமன்றி, கடல்‌ கடந்தும்‌ செல்ல வேண்டும்‌. பிரபாகரனுக்கு பல எதிரிகள்‌ இருக்கிறார்கள்‌. அவருக்கு விரோதமாக பல சக்திகள்‌ செயற்படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும்‌ அவரைப்‌ பழி தீர்ப்பதற்காக வெறிகொண்டு அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில்‌ பிரபாகரனின்‌ பாதுகாப்புக்‌ கருதியே அவரது பயணத்தை இரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம்‌ முடிவெடுத்தது” இப்படியாக ஒரு விளக்கம்‌ கொடுத்தேன்‌.
அமைச்சர்‌ சிதம்பரம்‌ என்னை விட்டபாடில்லை. “சரி, பிரபாகரன்‌ தான்‌ பாதுகாப்புக்‌ கருதி அவசரமாக, இரகசியமாக யாழ்ப்பாணம்‌ போய்விட்டார்‌. நீங்களாவது முதலமைச்சருக்கு அத்‌ தகவலை தெரிவித்திருக்கலாம்‌ அல்லவா?” என்று கூறி என்னை மடக்க முயன்றார்‌. முதலமைச்சரும்‌ என்னைக்‌ கேள்விக்‌ குறியுடன்‌ நோக்கினார்‌. உண்மையைச்‌ சொல்வதுதான்‌ ஒரே வழியாகத்‌ தென்பட்டது.
முதலமைச்சரைப்‌ பார்த்துச்‌ சொன்னேன்‌. “சார்‌, பிரபாகரன்‌ யாழ்ப்பாணம்‌ சென்றது உண்மையில்‌ எனக்கும்‌ தெரியாது. அவர்‌ எனக்கும்‌ கூட தெரியப்படுத்தவில்லை. மிகவும்‌ இரகசியமான காரியங்களை இரகசியமாக செய்து முடிப்பதுதான்‌ எமது இயக்கத்தின்‌ மரபு. நேற்றுத்தான்‌ எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல்‌ அணுப்பியிருந்தார்‌ பிரபாகரன்‌. உங்களுக்கு அறிவிக்குமாறு பணித்திருந்தார்‌. நான்‌ உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னராக நீங்கள்‌ என்னை இங்கு அழைத்து விட்டீர்கள்‌.” என்றேன்‌. சகுனியார்‌ வாயடைத்துப்‌ போய் இருந்தார்‌. முதலமைச்சருக்கு நிலைமை புரிந்தது. தலைவர்‌ பிரபாகரன்‌ தாயகம்‌ திரும்பியதன்‌ அவசியத்தை அவர்‌ உணர்ந்து கொண்டார்‌. அந்தப்‌ பயணம்‌ குறித்து இரகசியம்‌ பேணப்பட்டதையும்‌ அவர்‌ புரிந்து கொண்டார்‌. மத்திய அமைச்சர்‌ சிதம்பரம்‌ முடித்துவிட முனைகிறார்‌ என்பதையும்‌ விளங்கிக்‌ கொண்டார்‌.
“பிரபாகரன்‌ செளக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார்‌ எம்‌.ஜி.ஆர்‌. “ஆமா சார்‌” என்றேன்‌. “அவரைப்‌ பாதுகாப்பாக இருக்கச்‌ சொல்லுங்கள்‌” என்றார்‌. நான்‌ விசாரித்ததாகவும்‌ சொல்லுங்கள்‌” என்றார்‌. சந்திப்பு சுமுகமாக முடிந்தது. முகத்தை தொங்கப்‌ போட்டபடி இருந்தார்‌ சிதம்பரம்‌.
1987ம்‌ ஆண்டு ஜுலை மாதம்‌, இந்திய – இலங்கை ஒப்பந்தம்‌ கைச்சாத்திடப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக நானும்‌ பிரபாகரனும்‌ முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆரை புதுடில்லியில்‌ சந்தித்தோம்‌. அதுவே எமது கடைசிச்‌ சந்திப்பாக அமைந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில்‌ நிகழ்ந்த இறுதிச்‌ சந்திப்பிலும்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ எமக்கு அனுசரணையாக நின்று எமது நிலைப்பாட்டை ஆதரித்தார்‌. புதுடில்லியில்‌ நிகழ்ந்த அந்த சந்திப்பின்‌ பின்னணியே ஒரு விசித்திரமான கதை.
1987 ஜாலை மாதம்‌ 24ம்‌ திகதி. தலைவர்‌ பிரபாகரன்‌, யோகரத்தினம்‌ யோகி, திலீபன்‌ ஆகியோருடன்‌ கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின்‌ முதற்‌ செயலர்‌ ஹர்தீப்‌ பூரியையும்‌ ஏற்றிக்‌ கொண்டு இந்திய விமானப்‌ படையின்‌ உலங்குவானூர்தி ஒன்று சுதுமலை அம்மன்‌ கோவில்‌ மைதானத்திலிருந்து சென்னை புறப்பட்டது.
பிரபாகரனும்‌ அரசியல்‌ துறையைச்‌ சேர்ந்த போராளிகளும்‌ மீனம்பாக்கம்‌ விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள்‌ என்றும்‌, அங்கு சென்று அவர்களைச்‌ சந்திக்குமாறும்‌ எனக்கு தகவல்‌ தரப்பட்டது. மீனம்பாக்கம்‌ சென்றபொழுது அவர்கள்‌ எனக்காக காத்து நின்றார்கள்‌. நாம்‌ அவசரமாக புதுடில்லி செல்ல வேண்டும்‌ என்றும்‌, ஒரு முக்கிய விடயமாக பிரதமர்‌ ரஜீவ்‌ காந்தி எம்மைச்‌ சந்திக்க விரும்புவதாகக்‌ கூறிய இந்தியத்‌ தூதரக அதிகாரி திரு.பூரி தம்மைக்‌ கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாகவும்‌ பிரபாகரன்‌ சொன்னார்‌. இதில்‌ ஏதோ தில்லு முல்லு இருப்பதாக எனக்குத்‌ தோன்றியது. எனினும்‌ இந்தியப்‌ பிரதமர்‌ விடுத்த அழைப்பை நிராகரிப்பது நாகரீகம்‌ அல்ல. எதற்கும்‌ புதுடில்லி சென்று பார்ப்போமே என நினைத்தேன்‌. ஒரு இந்திய விமானப்படை விமானத்தில்‌ புதுடில்லி சென்றோம்‌. அங்கு அசோக்கா விடுதிக்கு அழைத்துச்‌ செல்லப்பட்டோம்‌. அது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி. புதுடில்லியில்‌ மிகவும்‌ பிரபல்யமானது. விமான நிலையத்திலிருந்து ஆயுதம்‌ தாங்கிய காவல்துறையினரின்‌ பாதுகாப்புடன்‌ சென்றுகொண்டிருந்த எமது வண்டி விடுதியின்‌ முன்‌ வாயிலை அடைந்தபோது அங்கு பல நூற்றுக்கணக்கான இந்திய இராணுவ அதிரடிப்‌ படையினர்‌ (கறுப்புச்‌ சீருடை அணிந்த கரும்பூனைகள்‌) விடுதிக்‌ கட்டடத்தைச்‌ சூழ நிற்பதைக்‌ கண்டோம்‌. நாம்‌ சந்தேகத்துடன்‌ ஒருவரை ஒருவர்‌ பார்ப்பதைக்‌ கண்டதும்‌, “உங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது’” என்றார்‌ பூரி. கரும்பூனைகள்‌ சூழ விடுதியின்‌ அதியுயர்‌ மாடிக்கு அழைத்துச்‌ செல்லப்பட்டோம்‌. ஆளுக்கு ஒரு அறையும்‌, கலந்துரையாடுவதற்கு ஒரு கூடமுமாக அந்த மாடியின்‌ ஒரு பகுதி எமக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எமது அறைகளுக்கு முன்பாகவும்‌ மாடிபூராகவும்‌ ஆயுதம்‌ தரித்த கரும்பூனைகள்‌ பாதுகாப்பாக நிலையெடுத்து நின்றனர்‌. சிறிது நேரத்தில்‌ இந்திய புலனாய்வு உயர்‌ அதிகாரி ஒருவர்‌ அங்கு வந்தார்‌.
எமது பாதுகாப்புக்‌ குறித்து நாம்‌ தடுப்புக்‌ காவலில்‌ வைக்கப்பட்டிருப்பதாகவும்‌ விடுதியை விட்டு வெளியேற எமக்கு அனுமதியில்லை என்றும்‌ தொலைபேசி மூலம்‌ வெளியுலகத்துடன்‌ தொடர்பு கொள்ள முடியாதென்றும்‌ எமது நிலைமையை தெளிவுபடுத்தினார்‌. சற்று நேரத்தில்‌ இலங்கைக்கான இந்தியத்‌ தூதுவர்‌ திரு.டிக்சிட்‌ எம்மை சந்திப்பார்‌ என்றும்‌ நாம்‌ புதுடில்லிக்கு அழைக்கப்பட்டதன்‌ அரசியல்‌ காரணத்தை அவர்‌ விளக்கிக்‌ கூறுவார்‌ என்றும்‌ சொன்னார்‌. இந்திய அரசின்‌ பொறிக்குள்‌ சிக்கி விட்டோம்‌ என்பது புலனாகியது. எதுவுமே செய்யமுடியாத நிர்க்கதியான நிலை. இந்தியத்‌ தூதுவருக்காகக்‌ காத்திருந்தோம்‌.
ஒரு மணிநேரம்‌ கழித்து, திரு.டிக்சிட்‌ அங்கு வந்தார்‌. முகத்தைக்‌ கடுப்பாக வைத்துக்‌ கொண்டு, தனது சுங்கானைப்‌ பற்றவைத்த பின்னர்‌ அங்கிருந்த சோபாவில்‌ அமர்ந்தார்‌. “இந்திய அரசுக்கும்‌ இலங்கை அரசுக்கும்‌ மத்தியில்‌ ஒரு ஒப்பந்தம்‌ ஏற்பட்டிருக்கிறது. இந்தியப்‌ பிரதமர்‌ திரு.ரஜீவ்‌ காந்தி வெகு விரைவில்‌ கொழும்பு சென்று அந்த ஒப்பந்தத்தில்‌ கைச்சாத்திட இருக்கிறார்‌. இந்த ஒப்பந்தம்‌ தமிழரின்‌ இனப்‌ பிரச்சினைக்கு ஒரு நல்ல, நியாயமான தீர்வை வழங்குகிறது. இவ்வொப்பந்தத்தை நீங்கள்‌ கட்டாயமாக ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌.” என்று அடித்துக்‌ கூறினார்‌. பின்பு தனது பைக்குள்ளிருந்து ஒப்பந்தத்தின்‌ பிரதி ஒன்றை எடுத்து என்னிடம்‌ கையளித்துவிட்டு, அதனை மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளங்கப்படுத்துமாறு கேட்டுக்‌ கொண்டார்‌. இரண்டு மணி நேரத்தின்‌ பின்பு தான்‌ திரும்பி வருவதாகவும்‌ அப்பொழுது ஒரு முடிவுடன்‌ இருக்குமாறும்‌ கூறியவர்‌ எமது பதிலுக்காகக்‌ காத்திராது அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச்‌ சென்றார்‌.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக மொழிபெயர்த்து பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தினேன்‌. உப்புச்‌ சப்பற்ற மாகாண சபைத்திட்டம்‌ ஒன்று இனப்‌ பிரச்சினைக்கு தீர்வாக வைக்கப்பட்டிருந்தது. அரசியல்‌ அதிகாரங்கள்‌ மத்திய அரசிடம்‌ குவிக்கப்பட்டிருந்தது. வட கிழக்கு மாகாணங்கள்‌ தற்காலிகமாக இணைக்கப்படுமென விதிக்கப்பட்டிருந்தது. மாகாண சபையைக்‌ கலைக்கும்‌ அதிகாரமும்‌ ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.
எல்லாவற்றிற்கும்‌ மேலாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட 72 மணி நேரத்திற்குள்‌ எமது ஆயுதத்‌ தளபாடங்கள்‌ இந்திய அமைதிப்‌ படைகளிடம்‌ கையளிக்கப்பட வேண்டும்‌ என்றும்‌ ஒப்பந்தத்தில்‌ விதிக்கப்பட்டிருந்தது. எமக்குத்‌ தரப்பட்ட இரண்டு மணிநேர கால அவகாசத்தில்‌ ஒரு தீர்க்கமான முடிவைப்‌ பிரபாகரன்‌ எடுத்தார்‌. அதாவது, எந்தக்‌ காரணத்திற்காகவும்‌ இந்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என உறுதியான தீர்மானம்‌ மேற்கொண்டார்‌.
சரியாக இரு மணிநேரத்தின்‌ பின்‌ திரு.டிக்சிட்‌ திரும்பி வந்தார்‌. வந்ததும்‌ எமது முடிவைக்‌ கேட்டார்‌. இந்த ஒப்பந்தத்தை எக்‌ காரணத்தைக்‌ கொண்டும்‌ ஏற்க முடியாது என்றோம்‌. ஏன்‌ ஏற்க முடியாது என்று கேட்டார்‌. காரணங்களை விளக்கிக்‌ கூறினோம்‌. ஒப்பந்தத்தில்‌ பரிந்துரைக்கப்பட்டிருக்கும்‌ மாகாணசபைத்‌ திட்டத்திலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இத்திட்டம்‌ எமது மக்களின்‌ அரசியல்‌ அபிலாசைகளை நிறைவு செய்யத்‌ தவறிவிட்டது என்றோம்‌. எமது முடிவை மாற்றுமாறு மன்றாட்டமாகக்‌ கேட்டார்‌. பின்பு வற்புறுத்திக்‌ கேட்டார்‌. இறுதியாக மிரட்டத்‌ தொடங்கினார்‌.
“நீங்கள்‌ ஏற்றுக்‌ கொண்டாலும்‌ ஏற்றுக்‌ கொள்ளாவிட்டாலும்‌ இந்த ஒப்பந்தம்‌ கைச்சாத்திடப்படும்‌. இரு நாடுகள்‌ செய்து கொள்ளும்‌ உடன்பாடு இது. இதனை நீங்கள்‌ எதிர்த்தால்‌ பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்‌” என்று மிரட்டினார்‌. எப்படியான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்‌ என்று கேட்டபொழுது, “இங்கே தொடர்ந்தும்‌ தடுப்புக்‌ காவலில்‌ இருக்க வேண்டி நேரிடும்‌. ஒப்பந்தத்தை ஏற்கும்‌ வரை இந்தியாவில்‌ உங்களை தடுத்து வைத்திருக்க எம்மால்‌ முடியும்‌.” என்றார்‌.
“எத்தனை காலமோ, எத்தனை வருடங்களோ எம்மைத்‌ தடுப்புக்‌ காவலில்‌ வைத்தாலும்‌ நாம்‌ இந்த ஒப்பந்தத்தை ஏற்கப்‌ போவதுமில்லை. ஆயுதங்களை ஒப்படைக்கப்‌ போவதுமில்லை.” என்று உரத்த குரலில்‌ சொன்னார்‌ பிரபாகரன்‌. ஆத்திரத்தில்‌ அவரது விழிகள்‌ பிதுங்கின. திரு. டிக்சிட்‌ கேரளத்தைச்‌ சேர்ந்தவர்‌. அவருக்கு தமிழ்மொழி நன்கு தெரியும்‌. நான்‌ மொழிபெயர்ப்பதற்கு முன்னரே பிரபாகரன்‌ அடித்துச்‌ சொன்னது அவருக்கு ஆத்திரத்தை மூட்டியது.
“ஆயுதங்களை நீங்கள்‌ ஒப்படைக்க மறுத்தால்‌, இந்திய இராணுவத்தைக்‌ கொண்டு உங்களது ஆயுதங்களைப்‌ பறித்தெடுப்போம்‌. இந்திய இராணுவத்திற்கு முன்பாக உங்களது போராளிகள்‌ வெறும்‌ தூசு.” என்று ஆவேசத்தில்‌ கூச்சலிட்டவர்‌ தனது சுங்கானை எடுத்து பிரபாகரனிடம்‌ காண்பித்து, இதனை நான்‌ பற்றவைத்து புகைத்து முடிக்கும்‌ நேரத்திற்குள்‌ இந்திய இராணுவம்‌ உங்களது போராளிகள்‌ அனைவரையும்‌ துவம்சம்‌ செய்துவிடும்‌” என்று கூறிவிட்டு ஏளனமாக ஒரு எக்காளச்‌ சிரிப்புச்‌ சிரித்தார்‌. எங்கள்‌ எல்லோரது முகங்களும்‌ கோபத்தினால்‌ சிவந்தது. மிகவும்‌ சிரமப்பட்டு ஆத்திரத்தை அடக்கிய பிரபாகரன்‌, “உங்களால்‌ முடிந்ததைச்‌ செய்து பாருங்கள்‌. ஆனால்‌ நாங்கள்‌ இந்த ஒப்பந்தத்தை ஒரு பொழுதும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்‌ போவதில்லை” என்று உறுதிபடக்‌ கூறினார்‌.
டிக்சிட்டுக்கு கோபத்தால்‌ உதடுகள்‌ நடுங்கின. “மிஸ்டர்‌ பிரபாகரன்‌, நீங்கள்‌ இந்திய அரசாங்கத்தை இத்துடன்‌ நான்கு தடவைகள்‌ ஏமாற்றிவிட்டீர்கள்‌’” என்றார்‌. “அப்படியானால்‌, நான்கு தடவைகள்‌ எமது மக்களை இந்திய அரசிடமிருந்து காப்பாற்றியிருக்கிறேன்‌. அதற்காக நான்‌ பெருமைப்படுகிறேன்‌” என்றார்‌ பிரபாகரன்‌. திடீரென எழுந்த டிக்சிட்‌ அங்கிருந்து வெளிநடப்புச்‌ செய்தார்‌.
இந்தியத்‌ தூதர்‌ டிக்சிட்டின்‌ “மிரட்டல்‌ இராஜதந்திரம்‌” தோல்வி அடைந்த போதும்‌, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை விடுதலைப்‌ புலிகள்‌ மீது திணித்துவிடும்‌ முயற்சி தொடர்ந்தது. ரஜீவ்‌ நிர்வாகத்தின்‌ உயர்‌ அதிகாரிகள்‌, மாறி மாறி, ஒவ்வொருவராக எம்மைச்‌ சந்தித்து ஒப்பந்தத்தின்‌ முக்கியத்துவத்தை எடுத்து
விளக்கினார்கள்‌. இந்திய உள்ளக புலனாய்வுத்‌ துறையின்‌ (I.B) அதிபர்‌ திரு.எம்‌.கே நாராயணன்‌, வெளிவிவகார அமைச்சரின்‌ கூட்டுச்‌ செயலர்‌ திரு.சகாதேவ்‌, வெளிவிவகார அமைச்சைச்‌ சேர்ந்த திரு.நிகல்‌ சேத்‌, கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தைச்‌ சேர்ந்த ஹர்தீப்‌ பூரி ஆகியோர்‌ தொடர்ச்சியாக மாறி மாறி சந்திப்புக்களை நிகழ்த்தினர்‌. புது டில்லியில்‌ அசோகா விடுதியில்‌ இந்தத்‌ திரைமறைவு நாடகம்‌ பல நாட்களாகத்‌ தொடர்ந்தது. திரு.பிரபாகரன்‌ எதற்கும்‌ அசைந்து கொடுக்கவில்லை. தனது நிலைப்பாட்டில்‌ உருக்குப்‌ போல உறுதியாக நின்றார்‌. புலிகள்‌ மிகவும்‌ பிடிவாதமாக நிற்கின்றார்கள்‌ என பிரதமர்‌ ரஜீவ்‌ காந்திக்கு அறிவிக்கப்பட்டது. அவர்‌ தனது அதிகாரிகளை அழைத்து மந்திராலோசனை நடத்தினார்‌. இறுதி முயற்சியாக தமிழக முதல்வர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்களை புதுடில்லிக்கு அழைப்பதென முடிவாகியது. ஜுலை 2ம்‌ திகதி பிரதமரின்‌ விசேட விமானத்தில்‌ எம்‌.ஜி.ஆர்‌ புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டார்‌.
அன்றிரவே, இந்திய தலைநகரிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில்‌ முதலமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைவர்‌ பிரபாகரனும்‌ நானும்‌ யோகரத்தினம்‌ யோகியும்‌ எம்‌.ஜி.ஆரிடம்‌ அழைத்துச்‌ செல்லப்பட்டோம்‌. முதலமைச்சருடன்‌ திரு.டிக்சிட்டும்‌ இருந்தார்‌.
இந்திய – இலங்கை ஒப்பந்தம்‌ பற்றியும்‌ அதில்‌ பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத்‌ திட்டம்‌ பற்றியும்‌ இம்‌ மாகாண சபைத்திட்டம்‌ மூலம்‌ ஈழத்‌ தமிழரின்‌ அரசியல்‌ அபிலாசைகள்‌ முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும்‌ ஒரு நீண்ட புராணம்‌ பாடிக்‌ கொண்டிருந்தார்‌ டிக்சிட்‌. நாடியில்‌ கையூன்றியவாறு பொறுமையுடன்‌ கேட்டுக்‌ கொண்டிருந்தார்‌ எம்‌.ஜி.ஆர்‌.
“தமிழர்‌ விடுதலைக்‌ கூட்டணியும்‌ சகல போராளிக்‌ குழுக்களும்‌ இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால்‌ இவர்கள்‌ மட்டும்‌ இதனை எதிர்க்கிறார்கள்‌. தமிழீழத்‌ தனியரசைத்‌ தவிர இவர்கள்‌ எதையுமே ஏற்கமாட்டார்கள்‌ போலத்‌ தெரிகிறது. ஆனால்‌ இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும்‌ அனுமதிக்கப்‌ போவதில்லை. இவர்கள்‌ இந்தியாவை விரோதித்தால்‌ பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்‌” என்று சீறினார்‌ இந்தியத்‌ தூதுவர்‌.
“இந்த மாகாண சபைத்‌ திட்டத்தில்‌ உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ்‌ மக்களின்‌ அபிலாசையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க இத்‌ திட்டத்தை நாம்‌ எதற்காக ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌ என்றார்‌ யோகரத்தினம்‌ யோகி. இதைத்‌ தொடர்ந்து யோகிக்கும்‌ டிக்சிட்டுக்கும்‌ கடும்‌ வாக்குவாதம்‌ மூண்டது. “சென்றவாரம்‌ யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த திரு.பூரி இந்த ஒப்பந்தம்‌ பற்றியும்‌ மாகாணசபைத்‌ திட்டம்‌ பற்றியும்‌ உமக்கு விபரமாக விளக்கினாராம்‌. அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள்‌ இப்போது எதற்காக எதிர்ப்புத்‌ தெரிவிக்க வேண்டும்‌” என்று டிக்சிட்‌ கதற, அதனை மறுத்துரைத்தார்‌ யோகி. “யாழ்ப்பாணத்தில்‌ இந்த ஒப்பந்தம்‌ பற்றி எதுவுமே பேசப்படவில்லை” என்றார்‌ யோகி.
“அப்பொழுது என்னை ஒரு பொய்யன்‌ என்று சொல்கின்றீர்களா?” என்று கேட்டார்‌ டிக்சிட்‌. “நீங்கள்‌ உண்மை பேசவில்லை” என்றார்‌ யோகி. வாக்குவாதம்‌ சூடு பிடித்தது. கோபாவேசம்‌ கொண்டவராக முதலமைச்சரைப்‌ பார்த்து, “பாருங்க சார்‌, என்னைப்‌ பொய்யன்‌ என்று சொல்கிறார்‌” எனக்‌ கதறினார்‌ டிக்சிட்‌. ஒரு ஏளனப்‌ புன்னகையுடன்‌ மெளனம்‌ சாதித்தார்‌ பிரபாகரன்‌. இந்த விவாதத்தில்‌ நானும்‌ குறுக்கிடவில்லை. இந்தியத்‌ தூதுவர்‌ டிக்சிட்‌ நிதானம்‌ இழந்து உணர்ச்சி வசப்படுகிறார்‌ என்பதை உணர்ந்து கொண்டார்‌ எம்‌.ஜி.ஆர்‌. “நீங்கள்‌ சிறிது நேரம்‌ வெளியே இருக்கிறீர்களா? நான்‌ இவர்களுடன்‌ பேச வேண்டும்‌” என டிக்சிட்டை பண்பாக வேண்டிக்‌ கொண்டார்‌ முதலமைச்சர்‌. சிறிது தயக்கத்துடன்‌ அங்கிருந்து வெளியேறினார்‌ இந்தியத்‌ தூதுவர்‌.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள்‌ பற்றியும்‌ அதனை ஏற்றுக்கொள்ள நாம்‌ மறுப்பதன்‌ காரணங்கள்‌ பற்றியும்‌ எம்‌.ஜி.ஆர்‌ எம்மிடம்‌ வினவினார்‌. ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத்‌ தெளிவாக விளக்கினோம்‌. ஈழத்து அரசியற்‌ கட்சிகளும்‌, ஆயுதக்‌ குழுக்களும்‌ இந்திய அரசின்‌ நெருக்குவாரத்திற்கும்‌ மிரட்டலுக்கும்‌ பணிந்து விட்டார்கள்‌ என்றும்‌, இந்திய அச்சுறுத்தல்களுக்குப்‌ பணிந்து நாம்‌ எமது மக்களின்‌ உரிமைகளை விட்டுக்‌ கொடுக்கத்‌ தயாராக இல்லை என்றும்‌ சொன்னோம்‌. தமிழரின்‌ இனப்‌ பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்‌ தீர்வு காணாத நிலையில்‌, சிங்கள ஆயுதப்‌ படைகள்‌ தமிழர்‌ மண்ணை ஆக்கிரமித்து நிற்கும்‌ சூழ்நிலையில்‌, எமது ஆயுதங்களைக்‌ கையளித்து, எமது போராளிகளைச்‌ சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும்‌ எடுத்து விளக்கினோம்‌.
எமது விளக்கங்களை முதலமைச்சர்‌ பொறுமையுடன்‌ செவிமடுத்தார்‌. எமது நிலைப்பாட்டின்‌ நியாயப்பாடுகளையும்‌ அவர்‌ புரிந்து கொண்டார்‌. இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின்‌ கேந்திர-புவியியல்‌ நலனைப்‌ பேணுவதற்‌காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும்‌ உணர்ந்து கொண்டார்‌. இந்திய – இலங்கை ஒப்பந்த விவகாரத்தில்‌ பிரபாகரன்‌ என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத்‌ தனது முழு ஆதரவும்‌ இருக்கும்‌ என்றார்‌ எம்‌.ஜி.ஆர்‌. அழுத்தங்களுக்கு விட்டுக்‌ கொடுக்காது, கொண்ட கொள்கையில்‌ உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர்‌ பாராட்டவும்‌ தவறவில்லை. முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத்‌ தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்‌.
முதலமைச்சரின்‌ சந்திப்பு அறைக்கு வெளியே திரு.டிக்சிட்டும்‌ ஒரு இந்திய புலனாய்வு அதிகாரியும்‌ நின்று கொண்டிருந்தனர்‌. எம்மை வழிமறித்த இந்தியத்‌ தூதுவர்‌, “ஒப்பந்தத்தை ஏற்றுக்‌ கொள்ளும்படி முதலமைச்சர்‌ வற்புறுத்தினார்‌ அல்லவா?” என்று கேட்டார்‌. நாம்‌ பதிலளிக்காது மெளனமாக நின்றோம்‌. “முதலமைச்சர்‌ சொன்னபடியே செய்யுங்கள்‌” என்றார்‌. “அப்படியே செய்வோம்‌” என்று கூறிவிட்டுச்‌ சென்றோம்‌.
முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்களுடனான கடைசிச்‌ சந்திப்பு அதுதான்‌. இந்திய-புலிகள்‌ யுத்தம்‌ தொடங்கிய காலத்தில்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ கடும்‌ சுகவீனமுற்றிருந்தார்‌. அப்பொழுது ஒரு நாள்‌ சென்னையில்‌ தங்கியிருந்த கேணல்‌ கிட்டுவைத்‌ தனது வீட்டுக்கு அழைத்து பண உதவி செய்ததுடன்‌, இந்திய இராணுவத்துடன்‌ போர்‌ நிறுத்தம்‌ செய்யுமாறும்‌. இந்திய அரசுடன்‌ பேச்சுவார்த்தை நடத்துமாறும்‌ தலைவர்‌ பிரபாகரனுக்கு ஒரு தகவல்‌ அனுப்பியிருந்தார்‌.
1987ம்‌ ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ 23ம்‌ திகதி முதலமைச்சர்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்கள்‌ காலமானார்‌. மறு நாள்‌ 24ம்‌ திகதி இந்திய தேசிய துக்க தினமாக பிரகடனம்‌ செய்யப்பட்டது. அன்றைய நாளில்‌ தமிழீழத்தை ஆக்கிரமித்து நின்ற இந்தியப்‌ படைகள்‌ போர்‌ நிறுத்தம்‌ அறிவித்தனர்‌. வீதிகளில்‌ ரோந்து சென்ற இந்தியத்‌ துருப்புக்கள்‌ முகாம்களில்‌ முடக்கப்பட்டன. அவ்வேளை யாழ்ப்பாணம்‌ வடமராட்சியில்‌ இந்தியப்‌ படைகளின்‌ கடும்‌ வேட்டைக்கு இலக்காகி பல்வேறு அவலங்களை அனுபவித்து வந்த நானும்‌ எனது மனைவி அடேலும்‌ அன்றைய நாள்‌, எம்‌.ஜி.ஆரின்‌ நினைவாக அமைதி பேணப்பட்ட அந்த சுமூக சூழலைப்‌ பயன்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து தப்பிச்‌ செல்ல முடிந்தது.
தமிழ்‌ நாட்டில்‌ நாம்‌ வசித்தபோது எமது அமைப்பின்‌ வளர்ச்சிக்கும்‌ முன்னேற்றத்திற்கும்‌ பேருதவி புரிந்த அந்தப்‌ பெரிய மனிதர்‌ தனது மறைவில்‌ கூட எமக்கு உயிர்‌ அளிப்பதில்‌ பெரும்‌ பங்கு வகித்தார்‌ என அடேல்‌ பாலசிங்கம்‌ “சுதந்திர வேட்கை’ என்ற தமது நூலில்‌ எம்‌.ஜி.ஆர்‌ அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி இருக்கிறார்‌. முற்றும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments