தியாகதீபம் நினைவேந்தலுக்கு பொதுக்கட்டமைப்பு! மீண்டும் கூவும் “ஈ(ன)ழநாடு”!!

You are currently viewing தியாகதீபம் நினைவேந்தலுக்கு பொதுக்கட்டமைப்பு! மீண்டும் கூவும் “ஈ(ன)ழநாடு”!!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுக்கப்படும் காலப்பகுதி நெருங்கியிருக்கும் இவ்வேளையில், நினைவேந்தலுக்கு பொதுக்கட்டமைப்பு தேவை என மீண்டும் கூவ ஆரம்பித்திருக்கிறது, இந்திய நியமனத்தில் இயங்கும் “ஈ(ன)ழநாடு” மின்னிதழ். தனது, 20.09.2023 அன்றைய பதிப்பின் “இப்படியும் நடக்கிறது” மற்றும் ஆசிரிய தலையங்கத்தில் இதையே கூவியிருக்கிறது அந்த கூலி நாளிதழ். கூடவே, வழமை போல தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மீதும் வசை பாடலுடன்…

தியாகதீபத்தின் நினைவேந்தலை தாங்கள் மட்டுமே நடத்துவோம் என்பது போல, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நடந்துகொள்வதாக, இல்லாத ஒன்றை உருவகப்படுத்த முனைகிறது அந்த மின்னிதழ். நினைவேந்தல் காலத்தில் அவரவர் தத்தமது வேலைகளை மட்டும் கவனித்துக்கொண்டிருக்க, தியாகதீபத்தின் நினைவாலயத்தை சுத்தம் செய்து, மெருகூட்டி, நினைவேந்தலுக்கு தயார் செய்வது என அனைத்து பணிகளையும் முன்னின்று செய்வது முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மாத்திரமே என்பது மக்களுக்கு தெரிந்த விடயம். முன்னணியின் செயற்பாட்டாளர்கள் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்வதால், அது முன்னணியின் பணி மாத்திரமே என பொருள் கொள்வது அவரவர் சிந்தனா சக்திக்கு உட்பட்டது. தியாகதீபம் எல்லாருக்கும் பொதுவானவர். அவரது நினைவாலயத்தை தூய்மையாக பாராமரிப்பதோ, மெருகூட்டுவதோ ஒரு சாராருக்கு, குறிப்பாக முன்னணியினருக்கோ மாத்திரம் உரித்தானதல்ல; யார் வேண்டுமானாலும் அந்த காரியங்களை மேற்கொள்ள அனைவருக்கும் உரிமையுண்டு. அதற்கு தியாக உணர்வும் வேண்டும்.

இங்கு விடயம் என்னவெனில், எல்லாரும் தாங்கள் உண்டு, தங்கள் வேலையுண்டு என இருக்கும் நிலையில், தியாகதீபத்தின் நினைவாலயத்தை நினைவுகூரலுக்கு தயார்படுத்துவது முன்னணியின் செயற்பாட்டாளர்களாக மாத்திரம் இருப்பதுதான் பலரது கண்களை உறுத்துகிறது. தாங்கள் செய்ய மறந்த ஒன்றை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் முன்னின்று செய்கிறார்கள் என்ற காழ்ப்புணர்வு மட்டுமே இவர்களை வசைபாட வைக்கிறது. இந்த வரிசையில் இந்திய நியமனமான “ஈ(ன)ழநாடு” மின்னிதழும் அடக்கம்.

தியாகதீபம் எல்லோருக்கும் பொதுவானவர், அவரது நினைவுகூரலுக்கான ஏற்பாடுகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற யதார்த்தத்தை சிந்தித்து செயற்படும் மனோநிலை இல்லாத இவ்வாறான தரப்புக்கள், மேற்படி விடயத்தை முன்னணியின் செயற்பாட்டாளர்கள் முன்னெடுப்பதை மனதளவில் தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலிருந்தே இவ்வாறான வசைபாடல்களை செய்கிறார்கள். நேரம், காலம், பொருளாதாரம் ஒதுக்கி, தியாகதீபத்தின் நினைவாலயத்தை தயார்படுத்த மனமில்லாமல், துப்பில்லாமல் ஒதுங்கியிருக்கும் தரப்புக்களுக்கு, முன்னணியின் செயற்பாட்டாளர்களின் இந்த முன்னேற்பாடுகள் கண்களில் விரல்களை விட்டு குடைவது தவிர்க்க முடியாததுதான்.

இவ்வாண்டும், வழமை போல, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மட்டுமே தியாகதீபத்தின் நினைவாலயத்தை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார்கள். வேறு யாரும் அப்பக்கம் தலைவைத்தும் படுக்கவில்லை. தொடர்ந்து பல நாட்களாக தயார்படுத்தல்கள் தொடர்ந்த போதிலும், முன்னணியின் செயற்பாட்டாளர்களை தவிர, வேறு யாரும் அங்கு வந்து ஒரு துரும்பைத்தானும் எடுத்துப்போடவில்லை என்பதே உண்மை. எல்லாவற்றையும் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் நிறைவு செய்த பின், கருத்து சொல்லவும், குறை சொல்லவும் வரிசையில் வரும் இவர்கள், பணிகள் நடைபெற்ற போது எங்கு ஒளிந்திருந்தார்கள் என்பதெல்லாம் இவர்களுக்கே வெளிச்சம்.

பொத்துவிலில் ஆரம்பித்த தியாகதீபம் ஊர்தி, திருமலை கப்பல்துறையில் வைத்து, இனவாதிகளால் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு, ஆகக்குறைந்தது தார்மீக அடிப்படையிலாவது கண்டனம் தெரிவிக்க இயலாத இந்திய நியமனமான “ஈ(ன)ழநாடு”, இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை அந்த ஊர்தி ஏற்படுத்த முனைந்திருக்கிறது என்பதுபோல், பட்டும் படாமலும் “ஊர்க்குருவி” பத்தியில் எழுதியிருக்கிறது. இதன்மூலம் என்ன சொல்ல அது முனைகிறது என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். தியாகதீபத்தின் ஊர்தி மூலம் தமிழ் அரசியல்வாதிகள் பிரிவினைவாதத்தை தூண்டி விடுவதாகவும், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசு, இனவாதிகளின் தாக்குதல்களை அனுமதிக்கிறது என்றும், இது, இனங்களுக்கிடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்பதால், இப்படியான விடயங்களை தடுக்க வேண்டும் எனவும் கூறி, தியாகதீபத்தின் ஊர்தி தேவையற்ற ஒன்று என சொல்ல முற்படுகிறது, இந்த இந்திய நியமன மின்னிதழ்.

இந்த மின்னிதழை எத்தனை மக்கள் பார்க்கிறார்கள் என்பதற்குமப்பால், இது விதைக்க முற்படும் விஷத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதை யாரும் மறுதலித்துவிட முடியாது. தியாகதீபத்தின் கீர்த்தி, தமிழர் தாயகப்பிரதேசமெங்கும் வாழும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சரியாக கடத்தப்பட வேண்டியது. அதை, இந்த ஊர்தி சரியாகவே செய்து வருகிறது என்பதற்கு, அந்த ஊர்தி பயணிக்கும் வழியெல்லாம் கூடி நின்று தியாகதீபத்துக்கு அஞ்சலி செலுத்தும் மக்களே சாட்சி. இம்முறை, ஸ்ரீலங்கா புலனாய்வுப்பிரிவும், ஒட்டுக்குழுக்களும், இன்னபிற இனவாதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, திருமலையில் ஊர்தி தாக்கப்பட்டிருக்கிறது. இத்தாக்குதல் அப்பட்டமான இனவாத தாக்குதலாக இருக்கும் நிலையிலும், வெறுமனே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே மனதில் கொண்டு, இந்த இனவாத தாக்குதலை அரசியல் மயப்படுத்த முனைகின்றன, இந்த இந்திய நியமன மின்னிதழும், அது போலவே தமிழர் விரோதப்போக்கில் கூலிக்கு இயங்கும் சக்திகளும்.

நினைவேந்தலுக்கு பொதுக்கட்டமைப்பு வேண்டும் என்று கூவுபவர்கள், நினைவேந்தல் காலப்பகுதியில் மாத்திரம் வெளியே வந்து, வாங்கியதற்கு மேலால் கூவி, அமைதியாக நடந்தேற வேண்டிய நினைவேந்தலை குழப்பியடித்துவிட்டு செல்வதோடு தங்கள் வேலையை முடித்துக்கொள்கிறார்களே ஒழிய, பொதுக்கட்டமைப்புக்குண்டான பணிகளை என்றுமே முன்னின்று நடத்தியதில்லை. சென்ற வருடமும், வழமை போலவே முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மாத்திரம் தியாகதீபத்தின் நினைவேந்தலுக்கான தயார்படுத்தல்களை செய்து முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, எல்லாம் நிறைவுற, தயார்ப்படுத்தப்பட்டதன் பின்னதாக, நினைவேந்தல் குழுதான் நினைவேந்தலை நடத்தும் என்று அடாவடி நடத்தப்பட்டது எல்லோருக்கும் நிலையிருக்கலாம். நினைவேந்தல் குழு பற்றி பேசுபவர்கள் யாரும், நினைவேந்தல் முன்னேற்பாடுகளில் கலந்துகொண்டு, தங்கள் பங்களிப்பை வழங்குவதில்லை. கேட்டால், அங்கு முன்னணி நிற்கிறது என சாட்டு வேறு சொல்வார்கள். தியாகதீபம் என்ன தனியே முன்னணிக்கு மட்டும் சொந்தமானவரா என்ன…? யார் செய்தால் என்ன, பணிகள் சிறப்புற நடந்தேறுவதுதான் முக்கியம் என இந்த புல்லுருவிகள் நினைப்பதில்லை. தாங்களும் செய்யாமல், முன்வந்து செய்யும் முன்னணியின் செயற்பட்டாளர்களையும் வசைபாடி, அதற்கு ஒரு அரசியல் கற்பித்து, இறுதியில் தியாகதீபத்தை கொச்சைப்படுத்துவதையே வழமையாக வைத்திருக்கிறார்கள்.

இதற்கு, கடந்த வருட நிகழ்வுகளே சாட்சி. எல்லா முன்னேற்பாடுகளையும் தமிழ்த்ததேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் தனித்து செய்து முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, நினைவேந்தலை பொதுக்குழு செய்யவேண்டும் என கூட்டம் போட்டார்கள். முன்னாள் போராளிகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் ஒரு குழு, நினைவேந்தல் இறுதிநாளில் விளைவித்த குழப்பங்கள் காணொளிகளாக பரவிக்கிடக்கின்றன.  குறிப்பாக “ஜனநாயக போராளிகள் கட்சி” என தங்களை சொல்லிக்கொள்ளும் குழுவின் உறுப்பினரான “மறவன்புலவு பிரபாகரன்” என்றழைக்கப்படுபவர் நடந்துகொண்ட முறை பலரையும் முகம் சுளிக்கவைத்ததையும் மறந்துவிடலாகாது. தேசத்துக்காக பாடுபட்டவர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் இவர், ஈகைச்சுடருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையே அறியாதவராக, ஏற்கெனவே ஏற்றப்பட்ட ஈகைச்சுடரை அப்புறப்படுத்தி, அதற்கு அவமரியாதை செய்தமை காணொளி ஆதாரமாக இருக்கிறது.

தவிரவும், தியாகதீபத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்படுவதற்கான குறித்த நேரம் இருக்கையில், தாங்கள்தான் முதலில் ஈகைச்சுடர் ஏற்றவேண்டும் என்ற வெறும் அரசியல் போட்டியின் காரணமாக, குறித்த நேரத்துக்கும் முன்னதாக ஈகைச்சுடரை வேறொரு இடத்தில் ஏற்றி, அந்த தியாகதீபத்தையே அவமதித்தவர்கள்தான் இவர்கள் என்பதை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற ஒரே காரணத்துக்காக, தூக்கு காவடி ஒன்றை அவசரகதியில் ஏற்பாடு செய்து, தியாகதீபத்தின் நினைவாலயத்தில் வெறிக்கூத்தாடினார்கள் என்பதையும் மக்கள் நேரிலே பார்த்திருந்தார்கள். எல்லாவற்றுக்கும் தாங்களே காரணமாக இருந்துவிட்டு, கடைசியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிமீது பழியை போட்டார்கள். திட்டம் போட்டு கொடுக்கப்பட்டவற்றின்படியே அனைத்து  சம்பவங்களும் இந்த குழப்பவாதிகளால் நடத்தி முடிக்கப்பட்டதன் பின்புலம் அறியாமல் குழப்பத்தோடு கலைந்த மக்களுக்கு, பின்னாளில் இத்தரப்புக்களின் சூழ்ச்சிகள் தொடர்பில் வெளிவந்த குரல் பதிவுகள், காணொளிகள் என்பன, உண்மை என்ன என்பதை பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தன.

ஈகைசுடர் அவமதிப்பு – காணொளி 

அடாவடி – காணொளி

குழப்பதிற்கான திட்டமிடல் – குரல் பதிவு

குழப்பவாதிகளால் பாதிக்கப்பட்ட பொதுமகன் கருத்து – காணொளி

இப்போது, மீண்டும் இம்முறையும் குழப்பங்களை உருவாக்கி, தியாகதீபத்தின் நினைவேந்தலில் கலவரங்களை உருவாக்கி, தியாகதீபத்தின் நினைவேந்தலுக்கு அரசின் நிரந்தர தடையை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு, இத்தரப்புக்கள் பொதுக்குழு என்று மீண்டும் பல்லவி பாடுகின்றன. அதற்கு, இந்திய நியமனமான “ஈ(ன)ழநாடு” போன்றவையும் துணை நிற்கின்றன. தியாகத்தின் எல்லையை மீறிய நம் பிள்ளை, தியாகதீபத்தின் உயிர்க்கொடை, இந்திய ஒன்றிய அரசை துகிலுரித்துப்போட்டமையானது, இந்திய ஒன்றியதுக்கு காலத்துக்கும் அழியாத அவமானமாகும். தமிழர் தேசத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள், இந்த அவமானத்தை அறிந்துவிடக்கூடாது எனவும், தியாகதீபத்தின் அறவழி போராட்டத்தின் கீர்த்தியை இல்லாதொழிக்க வேண்டுமெனவும் முனைப்போடு, இந்திய ஒன்றிய வழிநடத்தலில் இயங்கும் தரப்புக்களை வைத்து முன்னெடுக்கப்படும் இவ்வாறான இழி செயல்களை தமிழர் தேசமாக எம்மக்கள் ஒன்றிணைந்து முறியடிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

காணொளி (ஈகைச்சுடர் அவமதிப்பு): Jaffna Rajith

முகப்பு புகைப்படம்: Tamil Mathy

குகன் யோகராஜா

20.09.2023

 

 

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments