திருப்திகரமான நிலைக்கு மீண்டு வரும் சிதைவடைந்த “ஓசோன்” படலம்! ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!!

You are currently viewing திருப்திகரமான நிலைக்கு மீண்டு வரும் சிதைவடைந்த “ஓசோன்” படலம்! ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!!

சூழலுக்கு இசையாத அசுத்த வாயுக்களால் பெரும் பாதிப்படைந்திருந்த “ஓசோன்” படலம், திருப்தியளிக்கும் விதத்தில் மீள் நிலைக்கு திரும்புவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1980 ஆம் ஆண்டுப்பகுதியில், “ஓசோன்” படலத்தில் அவதானிக்கப்பட்ட மாபெரும் சிதைவின் வழியாக பூமிக்கு வரக்கூடிய, புற்றுநோய் முதலான ஆபத்தான அசௌகரியங்களை உண்டாக்கக்கூடிய கதிவீச்சுக்கள், மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்குமென கவலை தெரிவித்திருந்த சூழலியல் ஆய்வாளர்கள், இதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் உலகநாடுகளிடம் வேண்டுகோள்களை விடுத்திருந்தனர்.

வீட்டுப்பாவனைப்பொருளான குளிர்சாதனப்பெட்டி மற்றும் வாகனங்களில், வீடுகளில், அலுவலகங்ககளில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டிகள் போன்றவற்றில் பாவிக்கப்படும் மேற்படி இயற்கைக்கு ஒவ்வாத வாயுக்கள், “நுரை நெகிழிகள்” போன்ற இன்னோரன்ன தயாரிப்புக்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. எனினும், சூழலியல் ஆய்வாளர்களின் பரிந்துரையின் பின்னதாக 1987 ஆம் ஆண்டில் கனடா மொன்றியல் நகரில் ஐக்கியநாடுகள் சபையால் நடத்தப்பட்ட கருத்தரங்கின் பின் இவ்வாயுக்களின் பாவனை தடை செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னதாக வருடாவருடம் கணக்கிடப்பட்டு வந்த “ஓசோன்” படலத்தின் சிதைவின் அளவில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததாகவும், 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அளவீட்டின்படி, “ஓசோன்” படலத்தின் சிதைவு மிகவும் குறைந்து, பழையநிலையை அண்மித்திருப்பதாகவும் சூழலியல் ஆய்வாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் “கொலராடோ” மாநிலத்தின் பல்கலைக்கழக ஆய்வின் பெறுபேறாக, 1987 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட, இயற்கைக்கு ஒவ்வாத வாயுக்களின் பாவனை மீதான தடைகள், குறிப்பிடத்தக்களவு பெறுபேறுகளை தந்துள்ளதாகவும், குறிப்பாக, திருப்திகரமான மாற்றங்கள், “அன்டார்ட்டிக்கா” பகுதியிலே அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, “ஓசோன்” படலத்தில் ஏற்பட்டிருந்த சிதைவுகளின் பின்விளைவாக, அண்டவெளியில் இருக்கக்கூடிய சூறைக்காற்றின் வீச்சு திசையிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், இதன்படி, பூமியின் தென்திசைக்கு மாறியிருந்த சூறைக்காற்றின் வீச்சு திசை, மீண்டும் பூமியின் வடதிசைக்கு மாறத்தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருப்திகரமான நிலைக்கு மீண்டு வரும் சிதைவடைந்த

தென்திசையாக வீசும் சூறைக்காற்றின் பின்விளைவாகவே பூமியில் சூறாவளிகளும், கடல் கொந்தளிப்புகளும் ஏற்படுகின்றன எனவும் தெரிவிக்கும் சூழலியல் ஆய்வாளர்கள், “ஓசோன்” படலத்தின் சிதைவுகளூடாக பூமியை அடையும் சூரியக்கதிர்களால் காற்று அதிகளவு அமுக்கத்துக்குள்ளாகி, வெப்பமடைவதால், அது சுழல் காற்றாக மாற்றமடைவதோடு, சூறாவளியாகவும் உருவெடுப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

“ஓசோன்” படலத்தில் ஏற்பட்டிருந்த சிதைவுகளால் தென் திசைக்கு தடம் மாறியிருந்த அண்டவெளி காற்றின் போக்கினாலேயே அவுஸ்திரேலியா, ஆபிரிக்க மற்றும் தென் – அமெரிக்க நாடுகள் கடும் வறட்சிகளை சந்தித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

திருப்திகரமான நிலைக்கு மீண்டு வரும் சிதைவடைந்த

“ஓசோன்” என்பது, பூமியை சுற்றி இயற்கையாகவே அமைந்த வாயுப்படலமாகும். இந்த வாயுப்படலமானது, சூரியனிலிருந்து பூமிக்கு வரக்கூடிய ஆபத்தான “ஊதாக்கதிர்கள் / Ultra Voilet” கதிர்கள் பூமியை வந்தடையாத வண்ணம் பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி “ஊதாக்கதிர்கள்”, மனிதர்களை தாக்கும்போது, மனிதர்களில் இருக்கக்கூடிய நோயெதிர்ப்பு சக்தி கணிசமாக குறைவடைவதோடு, தோல் புற்றுநோயையும் ஏற்படுத்தும் எனவும், பூமியில் புதிய புதிய நுண்ணுயிர்களையும், தாவர வகைகளையும் உருவாக்குமெனவும் சூழலியல் பேராசிரியரான “Tore Furevik” தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள