தீவிரமடையும் கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே முற்றுப்புள்ளி!

You are currently viewing தீவிரமடையும் கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையே முற்றுப்புள்ளி!

இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கும், தமிழக கடற்றொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் நாளுக்கு நாள் கூர்ப்படைந்து தற்போது தீவிரமடையும் நிலை உருவாக்கபட்டு வருகின்றது.

இந்த நிலைமைகள் மேலும் மோசமடையாது முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்திய, இலங்கை அரசுகள் உடனடியாக இதயசுத்தியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர் நலவாரிய உறுப்பினரும், அனைத்து விசைப்படகுகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான எஸ்.யேசுராசா தெரிவித்தார்.

வடமாகாணத்தில் தமிழக மீனவர்களின் கைதுகள் தொடருகின்ற அதேநேரம், தமிழக மீனவர்கள் மற்றும் இழுவைமடி படகுகளின் அத்துமீறல்கள் நீளுகின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 64போ வடமாகாணத்தில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 38பேர் மன்னார் நீதிமன்றத்தின் மூலமும், 8பேர் யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மூலமும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 22பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தீபாவளிப்பண்டிகைக்கு முன்னதாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்திருந்தபோதும் அவர்கள் விடுவிக்கப்படாமை எமக்கு ஏமாற்றமளிக்கின்றது.

நாம் தொடர்ச்சியாக தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். எனினும், 42பேர் வரையில் விடுவிக்கப்பட்டமையால் அதனை இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ண நடவடிக்கையாகக் கருதி நாம் போராட்டத்தினைக் கைவிட்டிருந்தோம். அதேநேரம், எமது போராட்டத்தின் காரணமாக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நீடிக்கும் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆரம்பத்தில் அரச மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் நான்கு சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தபோதும் அதில் தீர்வுகள் எட்டப்பட்டிருக்கவில்லை.

தற்போதைய நிலையில், ஒரேமொழிபேசுகின்ற, சகேதரர்களாக பழகுகின்ற, கடலில் ஆபத்தென்றால் கைகொடுகின்ற ஓரினத்தைச் சேர்ந்தவர்களுக்குள் மோதல்கள் உருவாகும் நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

ஆரம்பத்தில் தவறுதலாக எல்லை மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பின்னர் அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்பட்டன. இப்போது, படகுகளும், நபர்களும் தடுத்துவைக்கப்படும் நிலை மோசமடைகின்றது.

இதனால், அண்ணன், தம்பிகளாக பழகும் இருநாட்டு கடற்றொழிலாளர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரமடைகின்றன. இந்த முரண்பாடுகள் வேண்டுமென்றே தோற்றுவிக்கப்படுகின்றன. இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் ஒன்றாகவே இருக்கின்றன.

இருநாட்டு கடற்றொழிலாளர்களும் வாழ்வாதாரத்துக்காவே போராடுகின்றாhகள். அவ்வாறான நிலையில், இரு தரப்பினரையும் மோதவிடுவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற அச்சம் எமக்கு உள்ளது.

எனவே, இந்த நிலைமையை மேலும் தீவிரமளிப்பதற்கு இடமளிக்க கூடாது. உடனடியாக, இலங்கையின் மிகப்பெரும் நட்பு நாடாகவும், அயல் நாடாகவும் இருக்கும் இந்தியா நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இருநாட்டு அரசாங்கங்களும் இதயசுத்தியுடன் பேச்சுக்களை முன்னெடுத்து நியாயமான உடன்பாடுகளின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை எட்ட வேண்டும் என்று எதிர்பார்கின்றோம் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply