இட்லிப் மாகாணத்தில் சிரிய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 34 துருக்கி ராணுவ வீரர்கள் பலியாகினர்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் போராளிகள் குழுக்கள் மீது ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது.
இட்லிப் மாகாணத்தின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், சிரியாவின் எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளையும் குவித்து வைத்துள்ளது.
இந்த நிலையில், போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் பாரா மற்றும் பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷிய கூட்டுப்படைகள் அதிரடியாக வான்வழி தாக்குதல்கள் நடத்தியது. இந்த தாக்குதல்களில் துருக்கி ராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, ரஷ்யாவும் சிரியாவும் உடனடியாக இந்த இழிவான செயலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எங்களின் நேட்டோ நட்பு நாடான துருக்கிக்கு ஆதரவாக துணை நிற்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.