தெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

You are currently viewing தெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா கிருமி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்

குறித்த நோயாளியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு முன்னர் தப்பிச் சென்ற நிலையில், காவல்த்துறையினர் அவரை தேடுகின்றனர்.

தப்பிச் சென்ற நோயாளி கட்டார் நாட்டிலிருந்து கடந்த வாரம் இலங்கை வந்துள்ளார். குறித்த நபர் கட்டாரில் சீன பிரஜை ஒருவருடன் அறையில் தங்கியிருந்ததாக தெரிய வருகின்றது. அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினை இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் குறித்த நபர் தெல்லிப்பளை வைத்தியசாலை இருந்து காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதைக் கண்டறிய அவரை மேலதிக சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதனால், நோயாளியை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றவிருந்தபோது அவர் காணாமல் போயுள்ளதாக வைத்தியசாலை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமி தொடர்பில் பரிசோதனை செய்யும் வசதிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளது. இந்நிலையில் குறித்த நோயாளி தொடர்பான தகவல்கள் என்னிடம் கூறப்பட்டது. ஆனால் நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு வரவில்லை யாழ். போதனா வைத்தியசாலையில் இயக்குநர் டி. சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை காவல்த்துறைக் குழு ஒன்று நோயாளியின் வீட்டிற்கு அனுப்பப்பட்டது, ஆனால் அவர் அங்கு இல்லை. அவர் அச்சத்தில் தலைமறைவாகியிருக்கலாம், என காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள