தொடர்ந்து தேசியத்தலைவரையும் அவரது செயற்பாடுகளையும் சிதைக்க முனையும் வெள்ளைநரி!!

You are currently viewing தொடர்ந்து தேசியத்தலைவரையும் அவரது செயற்பாடுகளையும் சிதைக்க முனையும் வெள்ளைநரி!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் வெற்றிகரமான இராணுவத் தலைவராக இருந்தார். ஆனால் அரசியல் தலைவராக அவரால் வெற்றிபெய முடியவில்லை என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

டெய்லிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவா் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரபாகரனை அதிகமானோர் சந்திப்பதை நாங்கள் உறுதி செய்திருக்க வேண்டும். அவரது பார்வை மிகவும் குறுகியதாக இருந்தது. அவர் இந்தியாவைப் புரிந்து கொள்ளவில்லை. ராஜீவ் காந்தியைக் கொன்றது போன்ற முட்டாள்தனமான காரியங்களை அவா் செய்தார்.

பிரபாகரன் எந்தவொரு சிங்களவர்களைளும் இந்தியர்களையும் அதிகளவில் சந்தித்ததில்லை. அடிப்படையில் அவர் சந்தித்த அனைவருமே தமிழர்களாகவே இருந்தனர். அதிகமானவர்கள் அவரை சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவரது உலகம் தொடர்பான பார்வை விரிவடைந்திருக்கும் எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நான் பிரபாகரனுடன் பேச முயன்றேன். ஆனால் அவர் அதை கேட்க விரும்பவில்லை. என் பார்வையில் அன்டன் பாலசிங்கம் சமாதான முன்னெடுப்பில் ஹீரோவாக இருந்தார். சில நேரங்களில் பிரபாகரன் பாலசிங்கம் சொல்வதைக் கேட்டார். எனினும் சில சமயங்களில் பாலசிங்கம் சொல்வதை அவர் கேட்கவில்லை.

போரின் முடிவில் இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் செய்தார்கள். புலிகள் பொதுமக்களை தங்கள் பிணையக் கைதிகளாக வைத்திருந்தனர். அதே நேரத்தில் இலங்கை ஆயுதப்படைகள் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தின. மருத்துவமனைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களைக் குறிவைத்தன. இந்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இலங்கையில் இடம்பெற்ற போரில் பாரிய போர்க்குற்றங்கள் இடம்பெற்றமை தெளிவானது என்பதே எனது கருத்து எனவும் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.

இதேவேளை, இலங்கை பிரச்சினைக்கு இலங்கையர்களே தீர்வு காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். வெளிநாட்டினர் இப்பிரச்சினையைத் தீா்க்க முடியாது. இலங்கை சிங்கள, முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் பேசியே பிரச்சினைகளைத் தீா்க்க வேண்டும். இந்தியர்கள், ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களால் அன்றி உள்நாட்டில் தீா்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம் தீா்வு முயற்சிக்கு அதரவளிக்க மட்டுமே முடியும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

இலங்கையில் மற்றொரு ஆயுதப் போராட்டத்துக்கான சாத்தியம் உள்ளதா? எனக் கேட்டப்பட்டபோது, அவ்வாறான சாத்தியங்கள் இருப்பதாக நான் கருதவில்லை என எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.

இலங்கை மக்கள் கடந்த கால போரால் மிகவும் சோர்வடைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். எனினும் மோதலுக்கு காரணமான தமிழர்களின் முக்கிய பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர குடிமக்களைப் போல உணர்கிறார்கள். அவர்கள் பொலிஸாரையோ அல்லது அதிகாரிகளையோ தங்கள் மொழியில் அணுக முடியாதுள்ளது. இலங்கை முன்னோக்கி செல்ல தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

இலங்கை புலம்பெயர் மக்கள் மற்றும் மற்றும் அவர்களின் முதலீடுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது,

புலம்பெயர்ந்தோருக்கு இலங்கையின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்கு உண்டு. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் அதிகளவாக தமிழர்கள் உள்ளனர். சிங்களவர்களும் புலம்பெயர்ந்துள்ளனர். புலம்பெயர் தேசங்களில் அவர்கள் வெற்றிகரமானவர்களாக உள்ளனர். புலம்பெயர்ந்த மக்கள் பலர் மிகவும் படித்த குழுவினராக உள்ளனர். எனது நாடான நோர்வேயில், தமிழ் இளம் பராயத்தினர் பல்கலைக்கழகங்களில் சராசரி இளம் நோர்வேயர்களை விட மிகச் சிறப்பாக செயற்படுகிறார்கள். கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இதுதான் நிலைமை.

இலங்கையில் கல்வித்துறை, தொழில்துறை மற்றும் சுற்றுலா துறைகளில் புலம்பெயர் இலங்கையர்கள் முதலீடு செய்தால் அது இலங்கையின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். புலம்பெயர் மக்கள் அனைத்து சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவை வழங்க வேண்டும். ஆனால் இலங்கையில் அமைதி முயற்சி இலங்கையே வழிநடத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். விமர்சன ரீதியாகவும் அறிவுசார் தளத்திலும் தார்மீக ஆதரவையும் வழங்க புலம்பெயர்ந்தோரை ஊக்குவிக்க வேண்டும் எனவும் எரிக் சொல்ஹெய்ம் தனது செவ்வியில் குறிப்பிட்டார்.

குறிப்பு:
ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதியாக தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் சமாதானத்தூதுவராக சென்ற இவர் ஒருபக்கசார்பானவராகவே செயற்பட்டார். இவர் சோனியாகாந்தியின் மூளையில் மட்டுமே இயங்கினார் அதனால்த்தான் கடைசிவரையும் சமாதானம் என்றபோர்வையில் விடுதலைப்புலிகளை மிரட்டிவந்தனர்.தங்களுக்கு அடிமைகளாக இருக்க விரும்பாத விடுதலைப்புலிகளின் உறுதியில் சினம் கொண்டுதான் இப்போது வரையும் இந்த வெள்ளைநரி ஊளையிடுகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply