நோர்வேயின் தேசிய மட்டத்திலான தமிழ்ப் போட்டிகள்!

You are currently viewing நோர்வேயின் தேசிய மட்டத்திலான தமிழ்ப் போட்டிகள்!

நோர்வேயில் அண்ணளவாக கடந்த மூன்று தசாப்தங்களாக எம் தாய்மொழியாம் தமிழ் மொழிக் கற்கைச் செயற்பாடுகளை முன்னெத்து வரும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் தனது அடுத்த கட்டப் பாய்ச்சலாக நோர்வேயில் தேசிய ரீதியாக ” அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் ” என்று பெயரிட்டு தமிழ் மொழிக்கான போட்டிகளை கடந்த வார இறுதி முதல் ஆரம்பித்துள்ளது.

கடந்த மாத இறுதித் தினமான 29.02.20 மற்றும் 01.03.20 ஆகிய சனி, ஞாயிறு தினங்களில் கதை சொல்லுதல் (சிறுவர்கள் ), பேச்சுப் போட்டி, கவிதை மொழிதல், சிறுவர்களுக்கு வளர்ந்தவர்கள் கதை சொல்லுதல் என்ற போட்டிகள் ஒஸ்லோவில் தமிழர் வள ஆலோசனை மையத்தில்  இரு மண்டபங்களில் இடம் பெற்றது.

200ற்கும் அதிகமான போட்டியாளர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டமை தமிழ் ஆர்வலர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழத்தியுள்ளது. குறிப்பாக முதற் தடவையாக இடம்பெற்ற கவிதை மொழிதல் போட்டி பலரினதும் கவனத்தை ஈர்த்தது. அதிலும் நோர்வே நாட்டில் பிறந்து வளரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரின் ஆர்வமும், அவர்களின் மொழித் திறனும் பலரை ஆச்சரியப்பட வைத்தது என்பது மிகையல்ல.

நோர்வே ரீதியாக நடைபெற்ற இப் போட்டிகளில் வெளிமாநிலங்கள் உட்பட  ஒன்பது அன்னை பூபதி கலைக்கூட  வளாகத்தினர் பங்கு பற்றியது குறிப்பிடத்தக்கது. சிறார்களின் அனல் பறந்த பேச்சுக்கள் பலரினதும் பாராட்டுக்களைப் பெற்றதோடு, புலம் பெயர் வாழ்வில் தமிழ் மொழக்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது.

இப்போட்டிகளில் பணியாற்றிய நடுவர்கள் கருந்து தெரிவிக்கையில், பல சிறார்களின் வியத்தகு மொழித் திறனும், உச்சரிப்பும் மிகவும் பாராட்டப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டதோடு, தமது நடுவர் பணி மிகக் கடுமையாக இருந்ததோடு, மிகவும் குறுகிய புள்ளி வித்தியாசத்திலேயே வெற்றியாளரைத் தெரிவு செய்வும் நெருக்கடி நிலை இருந்ததை குறிப்பிட்டனர்.

கவிதை படைத்தலும் மொழிதலும், திருக்குறள் போட்டி, கைப்பேசி மூலம் குறும்பட, சித்திரக் கதை ஆக்கம் என இன்னும் பல போட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ள அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள், இலையுதிர் காலம் வரையில் பல கட்டங்களாக  போட்டிகள் நடைபெறவுள்ளதாக போட்டிப் பணிக் குழுவினர் தெரிவிக்கின்றனர். அதே வேளை வளாகங்களில் கல்விச் செய்ற்பாடுகளில் ஈபடாத ஏனையவர்களும் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளதை தெரிவித்ததோடு, போட்டிகளில் பங்குபெற ஆர்வமுள்ளவர்கள்  தமது இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்பதயும் http://annai-tamilmutram.annai.no/ அறியத்தந்தனர்.

புலம் பெயர் நாட்டில் தமிழ் மொழிக்கான இப்படியான போட்டிகள் மூலம் எமது அடுத்த தலைமுறைக்கு எம் மொழி, கலை, பண்பாடு என்பவற்றை காவிச் செல்ல ஒர் மிகச் சிறந்த செயற்பாடு என்பதை பார்வையாளர் பலர் சுட்டிகாட்டியதாகத் தெரிவிக்கும் எமது செய்தியாளர் ,கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் இடம் பெற்ற இத் தமிழ்ப் போட்டிகள் பலரினதும் பாராட்டைப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள