இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் நோர்வே நாடாளுமன்றில் , நோர்வே தொழிலாளர் கட்சியின் / Arbeiderpartiet நாடாளுமன்ற உறுப்பினர் கம்சாயினி குணரத்தினம் / #kamzy ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் Gajendrakumar Ponnambalam #selvarajah_kajendren #nadarajar_kandeepan #sugash_kanagarathnam #theeban_arokianather அடங்கிய குழுவினரின் ஐரோப்பிய வருகையின் போது, நோர்வே அரசியல் மட்டத்துடனான அவர்களின் சந்திப்பில், கம்சாயினி குணரத்தினத்துடனும் சந்திப்பை மேற்கொண்டு, இலங்கை தொடர்பான தற்போதைய நிலை பற்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சனாதிபதி அவர்களே!
போர் கொந்தளித்த இலங்கையில் 1988 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலித்த ஒவ்வொரு முறையும், என்னை கருவில் சுமந்தபடி, என் தாய் கோவில்களிலும் பள்ளிகளிலும் ஒளிந்துகொண்டார்.
நான் பிறந்தேன்; என் தம்பி பிறந்தான்.
பின்னர் வாழ்க்கை எங்களை பாதுகாப்பான நோர்வேக்கு அழைத்துச் சென்றது – முதலில் Hammerfest என்ற நகரில் வாழ்ந்தோம்; பின்னர் Oslo நகருக்கு வாழ்க்கை நகர்ந்தது.
உள்நாட்டுப் போர் 2009 மே மாதத்தில் முடிவடைந்தது என்றாலும், ஒரு போர் முடிவடைவது என்பது, ஒரு மோதலும் முடிவடைகிறது என்பதல்ல.
இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பான இடங்கள் எதுவும் இல்லை. “பாதுகாப்புப் பகுதிகள்” என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட இடங்களிலும் பொதுமக்கள் தஞ்சம் புகுந்தனர்; ஆனாலும் அங்கு கூட குண்டுகள் விழுந்தன. குடும்பங்கள் தற்காலிக தஞ்சக் கூடங்களில் வாழ்ந்தன.
குழந்தைகள் இடையறாத பயத்தில் வளர்ந்தன. மருத்துவமனைகள், பாடசாலைகள், மத வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பான இடங்களாக அல்லாமல் புதிய அபாய மண்டலங்களாக மாறின.
தமிழர்களும், முஸ்லிம்களும் கடுமையான கொடுமைகளை அனுபவித்தனர் – இதனை இந்த பாராளுமன்றம் பல ஆண்டுகளாகவும், கட்சி வேறுபாடுகள் இன்றி, சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஒருமித்துக் கூறி வந்துள்ளது.
ஏனெனில் உண்மை வெளிவர வேண்டும். வேறும் பல நாடுகளும் முன்வைத்த இந்த கோரிக்கை, இலங்கை அதிகாரிகளால் முழுமையாக ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை.
சனாதிபதி அவர்களே,
கடந்த காலம் இன்னமும் நிகழ்காலத்தை பாதிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் கட்டுமானப் பணிகளின்போது மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. தனித்தனி எச்சங்கள் மட்டும் அல்லாமல், பல மனித உடலை எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட மனிதப்புதைகுழிகள் கொண்ட கூட்டக் கல்லறைகளில், பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் போன்றோரின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஒருகாலத்தில் பெயர், குடும்பம், வாழ்க்கை எனக்கொண்டிருந்த மனிதர்கள், இன்று மண்ணுக்குள் அடையாளமற்ற எச்சங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். செம்மணி ஒரு சாதாரண இடம் அல்ல. பல தசாப்தங்களாக இப்பகுதி கட்டாய மாயமாதல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பல ஆண்டுகள் தங்கள் உறவுகளை தேடியுள்ளன; அவர்களைவிட்டு பல ஆண்டுகள் நம்பிக்கையுடன் காத்திருந்தன.
தங்கள் குழந்தைகளை அடக்கம் செய்ய முடியாத பெற்றோர்; தங்கள் பெற்றோருக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் வளர்ந்த குழந்தைகள் என்பதுதான் இன்றைய நிலை. இது வெறும் வரலாறு அல்ல. இன்னும் தீர்க்கப்படாத இந்த துயர விதிகளின் பதில்களுக்காக குடும்பங்கள் காத்திருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் காணாமல் போனோரின் குடும்பங்களை சந்தித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர், துணைவர், குழந்தைகள் மட்டுமல்லாமல், “என்ன நடந்தது…?”, “அவர்கள் எங்கே போனார்கள்…??”, “ஏன் எங்களுக்கு அவர்களைப்பற்றி ஒருபோதும் தெரியப்படுத்தப்படவில்லை…???” என இன்னும் அதே கேள்விகளை கேட்கும் மக்கள்.
சனாதிபதி அவர்களே,
துப்பாக்கிச் சத்தம் நின்றவுடன் போர்கள் முடிவதில்லை. நியாயமும் பொறுப்பூக்கமும் நிறைவேறும் போதுதான் அவை உண்மையில் முடிவடைகின்றன. இந்த சவால்கள், கடந்த காலத்தை மட்டுமல்ல, நிகழ்காலத்தையும் குறிக்கின்றன.
2019 ஆம் ஆண்டின் ஈஸ்டர் தாக்குதல்கள் அதற்கு ஒரு உதாரணம். தேவாலயங்களும் ஹோட்டல்களும் தாக்கப்பட்டன. வழிபாட்டில் இருந்தவர்கள்; வேலையில் இருந்தவர்கள்; அன்றாட வாழ்க்கையின் நடுவில் இருந்தவர்களின் வாழ்க்கைகள் சில விநாடிகளில் பறிக்கப்பட்டன.
குடும்பங்கள் சிதைந்தன; முழு நாடும் மன உளைச்சலுக்கு ஆளானது.
அதன் பின்னதான ஆண்டுகள் முழுவதும் உளவுத்துறை, பொறுப்பு மற்றும் அரசியல் கையாளல் குறித்த கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
நேற்றுதான், முன்னாள் புலனாய்வு தலைவர் இந்த விசாரணை தொடர்பாக, சாத்தியமான உடந்தை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இது சட்டத்தின் ஆட்சி மற்றும் நிறுவன நம்பிக்கை தொடர்பில் இன்னும் முக்கியமான கேள்விகளாக உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.
சனாதிபதி அவர்களே,
அடிப்படை உரிமைகள் இன்னும் சவாலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. காலனித்துவ கால சட்டங்களின் கீழ், ஒரே பாலின உறவுகள் இன்னும் குற்றமாக்கப்பட்டுள்ளன.
பலருக்கு இது காகிதத்தில் இருக்கும் சட்டம் மட்டும் அல்ல. வெளிப்படுவோமோ என்ற பயம்; கைது செய்யப்படுவோமோ என்ற பயம்; ஒதுக்கப்படுவோமோ என்ற பயம்.
கருக்கலைப்பு சட்டம் பிராந்தியத்தில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகும். கர்ப்பத்தடுப்பு சாதனங்களுக்கான அணுகல் சமமல்ல. இது பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பெண்களின் தன்னாட்சி உரிமையை பாதிக்கிறது. பெண்களின் வாழ்க்கைத் தேர்வுகளை பாதிக்கிறது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வடக்கு மற்றும் கிழக்கில் சைவ கோவில்கள் இடிக்கப்பட்டதாக பதிவுசெய்துள்ளன. இது கட்டிடங்களைப் பற்றியது மட்டும் அல்ல. பல தலைமுறைகளாக மக்கள் பிரார்த்தித்த, துயரப்பட்ட, கொண்டாடிய இடங்களைப் பற்றியது. வரலாறு, அடையாளம், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் நம்முடைய கண்முன்னே அழிக்கப்படுவது பற்றியது.
சனாதிபதி அவர்களே,
இலங்கை பெரும் வாய்ப்புகள் கொண்ட நாடாகும். ஆனால், மக்கள் தொகையின் பெரும் பகுதி நியாயம், உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பு இன்னும் தீர்க்கப்படாததாக உணர்ந்தால், நிலையான ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியாது.
சனாதிபதி அவர்களே,
நோர்வே ஒரு சிறிய நாடு. ஆனால், சர்வதேச ஈடுபாட்டில் நீண்ட பாரம்பரியம் கொண்டது. ஏனெனில் ஜனநாயகமும் மனித உரிமைகளும் புவியியல் எல்லைகளால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.
எனவே கேள்விகள் கேட்பது நியாயமானதே.
தேர்தலுக்குப் பிறகு இலங்கை அரசு எந்த சீர்திருத்த வாக்குறுதிகளை வழங்கியது…?
வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் ஒளியில் மனித உரிமை நிலைமையின் முன்னேற்றத்தை நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம்…??
சட்டத்தின் ஆட்சி, ஸ்திரத்தன்மை மற்றும் சமரசத்தை ஆதரிக்க நோர்வே எந்த வழிமுறைகளை பயன்படுத்த முடியும்…???
இது விரல் சுட்டிக்காட்டுவது பற்றியது அல்ல. இது உலகளாவிய உரிமைகளை பாதுகாப்பதில் ஒரே நிலைப்பாட்டுடன் இருப்பது பற்றியதாகும்!
#kamzy கம்சாயினி குணரத்தினம்
26.02.2026






