கொரோனாவினால் 16 வயதான பள்ளி மாணவி மரணம் !

You are currently viewing கொரோனாவினால் 16 வயதான பள்ளி மாணவி மரணம் !

பாரிஸில் 16 வயதான பள்ளி மாணவி ஜூலி வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த மை வீடுகளில் முடங்கிக் கிடக்கும் கல்விச் சமூகத்தினரிடையே பெரும் துயரச் செய்தியாகப் பரவியிருக்கிறது.

உலகை உலுக்கிவரும் பெரு வைரஸ் தொற்றினால் தினம்தினம் செத்து மடிவோரில் வயதில் ஆகக் குறைந்த நோயாளியின் மரணம் இது என்று பிரெஞ்சு சுகாதாரத்துறை இதனைப்பதிவு செய்கிறது.

பொதுவாக வயோதிபர்களையும் பவீனமானவர்களையுமே கொரோனா பலியெடுக்கிறது என்று பரப்பப்பட்ட செய்திகளை ஜூலியின் மரணம் பொய்யாக்கியிருப்பது மருத்துவ வட்டாரங்களையும் சற்று அதிர்ச்சிக்குள் ளாக்கியது. 

என்றாலும் இந்த வயதுக்காரர்களில் இது “மிக மிக அரிதான” ஒரு தொற்று என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

புறநகர்ப் பகுதியான எஸோன் ( Essonne) பிரதேசத்தில் வசிக்கும் லிஸே(Lycée) மாணவி ஜூலி. அவளுக்கு சில தினங்கள் சாதாரண இருமல் நீடித்ததால் தாயார் அவளை குடும்ப வைத்தியரிடம் கூட்டிச் செல்கிறார். அங்கு ஜூலி மூச்சு விட சிரமப்படுவதை அவதானித்த டாக்டர் அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவசரசேவையை (Samu) அழைக்கின்றார்.

சிறிது நேரத்தில் எஸோன் அருகே உள்ள Longjumeau வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றாள் ஜூலி. அங்கு அவளுக்கு சி. ரி. ஸ்கான், நுரையீரல் சோதனைகள் நடக்கின்றன. எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவளது தாயாரிடம் சொல்லப்படுகிறது. வைரஸ் பரிசோதனையும் நடந்துகொண்டிருக்கிறது என்கின்றனர் டாக்டர்கள்.

அன்றிரவு சீரற்ற சுவாச நிலைமை தென்படவே அவள் அங்கிருந்து பாரிஸில் உள்ள ‘நேக்கர்'( Necker) சிறுவர் மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு மாற்றப்படுகிறாள். தகவல் அறிந்து அவளது தாயார் அங்கு விரைகிறார். லேசாக தனக்கு நெஞ்சு வலிப்பதாக தாயாரிடம் கூறுகிறாள் ஜூலி. ஆனால் அடுத்தடுத்து அங்கு நடத்தப்பட்ட இரண்டு வைரஸ் பரிசோதனைகளும் சாதகமான முடிவை தருகின்றன. அங்கு பணியில் இருந்த டாக்டர் தனது கைப் பெருவிரலை உயர்த்திக்காட்டி ஜூலிக்கு வைரஸ் தொற்று இல்லை என்ற செய்தியை தாயாரிடம் மகிழ்வோடு தெரிவிக்கிறார். இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர்கள் திருப்திப்படுகின்றனர். 

நாளையே மகள் வீடுதிரும்பிவிடுவாள் என்ற நம்பிக்கையோடு அங்கிருந்து இருப்பிடம் திரும்பிவருகிறார் தாயார்.

அன்று பின்னராக மாலையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. 

“Longjumeau மருத்துவமனையில் நடத்தப்பட்ட முதலாவது பரிசோதனையில் ஜூலிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவளது நிலைமை மோசமடைகிறது. அவள் தனிமைப்படுத்தப்படவேண்டும். அவசரமாக வாருங்கள் ” என்று தாயாரிடம் தகவல் சொல்லப்படுகிறது.

பதறிப்போன தாயார் தனது மூத்த மகளையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய போது ஜூலி உயிர் பிரிந்திருந்தாள். அவளது உடல் சிறிது சாம்பல் நிறமாக மாறியிருந்தது. 

” நம்பவே முடியவில்லை.. அவளது கைகளைத் தொட்டுப்பார்த்தேன்.. அப்போதும் சூடாக இருந்தது.. மூத்த சகோதரி அவளது நெற்றியை தடவி விட்டாள்.. அவ்வளவுதான். இனி நீங்கள் இங்கே இருக்க முடியாது. ஜுலியின் உடைமைகள் எதனையும் கூட நீங்கள் எடுத்துச் செல்ல முடியாது.. அவளை மறுபடியும் பார்க்க முடியாது. தற்போதுள்ள கட்டுப்பாடுகள் இதை அனுமதிக்காது என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.. நாங்கள் வெறுமனே வீடு திரும்பினோம்.. ஜூலியை அங்கேயே விட்டுவிட்டு .. ” – இவ்வாறு ஜூலியை பார்த்த அந்தக் கடைசி நிமிடங்களைக் கூறிப் புலம்புகிறார் அந்தத் தாய்.

ஜூலியின் உடைமைகள் அனைத்தும் தீயிடப்படும். அதுவே தற்போதைய நடைமுறை என்று சொல்லப்பட்டதும் அவள் நினைவாக, அவள் அணிந்திருந்த காப்பு, ஞானஸ்தான சங்கிலி இரண்டையும் மட்டும் எடுத்துக்கொள்கின்றனர்.

துயர் மிகுந்த இந்த அவலக்கதையை ஊடகங்கள் நீண்ட செய்திகளாகப் பதிவு செய்கின்றன. 

‘ஜூலிக்குச் செய்யப்பட்ட முதல் பரிசோதனை முடிவு ஏன் தாமதமாக வந்தது? அடுத்த இரண்டு பரிசோதனைகளும் ஏன் ‘நெக்கடீவ்’ ஆக இருந்தன?
அப்படியானால் தற்போது நடைமுறையில் உள்ள வைரஸ் பரிசோதனைகளில் குறைபாடுகள் உள்ளனவா? குழந்தைகளை இந்நோய் தாக்காது என்று ஆரம்பத்திலிருந்தே எங்களிடம் சொல்லப்பட்டதே.. அது? ‘

ஜுலியின் குடும்பத்தினரைக் குழப்பும் இதே கேள்விகளை பாரிஸ் ஊடகங்கள் சிலவும் எழுப்புகின்றன. “என்றைக்குமே இதற்கு விடை கிடைக்கப்போவதில்லை” என்கின்றனர் ஜூலியின் பெற்றோர்.

மருத்துவ உலகம் தடுமாறி நிற்கிறது. தேர்தல் முடிவுகளை அறிவிப்பது போல அடிக்கடி சாவு எண்ணிக்கைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன உலக ஊடகங்கள்.. எண்ணிக்கைகள் கிடுகிடு என உயர்ந்துகொண்டிருக்கின்றன. பிரான்ஸின் ஈழத்தமிழர் சமூகம் இதுவரை இளம் குடும்பத்தலைவர்கள் இருவர் உட்பட மூவரை இழந்து நிற்கிறது…இன்னும் பலர் இருக்கலாம்..

ஜூலியின் இறுதி நிகழ்வுகளை பத்துப் பேருடன் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் வரை சாவச்சாலையில் இருந்து அவளது உடல் வெளியே எடுக்கப்பட மாட்டாது. 

ஜுலியின் நண்பர்கள் தங்கள் தோழிக்கு அஞ்சலி செலுத்த ஒன்றுகூட முடியாத சூழ்நிலை. இதனால் இணையப்பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் துயர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

“மே 4 இல் பள்ளிகள் திறக்கப்பட்டதும் நாம் ஓர் அஞ்சலி நிகழ்வைச் செய்வோம். வெள்ளை, சிவப்பு நிறங்களை அணிந்து கொண்டு அமைதியாய் ஊர்வலம் போவோம். வெள்ளை நிறம் அவளது மனிதத்துக்கானது. சிவப்பு அவளுக்கு மிகப் பிடித்த நிறம்….”

ஜூலியின் தோழிகள் இதற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

” ஒரு குழந்தையின் இழப்பின் துயர் தாங்க முடியாதது. ஆனாலும் எங்களிடம் ஒர் உன்னதமான வாழ்க்கை இருந்தது. அதைத் தொடரத்தான் வேண்டும்.. வாழ்வின் அர்த்தமும் அதுதான்.. “

ஊடகம் ஒன்றிடம் இப்படிக் கூறுகிறார் ஜுலியின் தாயார்.

(நன்றி: குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள