பாராளுமன்றத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கே எதிர்ப்பு தெரிவிக்கும் உங்களால், இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்க முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது, நேற்று நீதி மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய ரவிகரன், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க மாதுகொட, பிரபாகரனின் பெயரில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க செயலாளர் குழுவிடம் முன்மொழிவதாகக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த ரவிகரன், தமிழ் மக்களின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே இத்தகைய எதிர்ப்புகள் அமைவதாகக் குறிப்பிட்டார். இனவாதம் இல்லை எனக் கூறும் ஆளும் தரப்பினர், பிரபாகரனின் பெயரைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழும் நாட்டில், ஒரு பெயரை உச்சரிப்பதற்கே எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப் போகின்றீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், சாணக்க மாதுகொட கருத்துத் தெரிவிக்கையில், சபைக்கு தலைமை தாங்கும் நிலையில் சில சொற்களை ஹன்சார்டில் பதிவு செய்வது தொடர்பான தீர்மானங்களை முன்வைக்க முடியும் என்றும், ‘ஈழம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பிலும் செயலாளர் குழு தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.






