தமிழர் வரலாற்றில் உணர்வுபூர்வமான நாளாகக் கருதப்படும் மாவீரர் நாள் இன்று (27) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மட்டுமன்றி, தமிழக தொப்புள்கொடி உறவுகள், உலகெங்கும் வாழும் தமிழர்கள் மாவீரர்களை நினைவுகூர்ந்து வீரவணக்கம் செலுத்துவதற்குத் தயாராகியுள்ளனர்.
தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவிடங்கள் மற்றும் பொது இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ள நினைவிடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்பட்டு, நினைவிடங்கள் அலங்கரிக்கப்பட்டு, மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிவப்பு, மஞ்சள் கொடிகளால் நினைவேந்தல் வளாகங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்களும் பொதுமக்களும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் மாலை 6.05 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டு, 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படவுள்ளது. தொடர்ந்து 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
கோப்பாய், கொடிகாமம், எள்ளங்குளம், கனகபுரம், தேராவில், முழங்காவில், மாவடிமுன்மாரி, தரவை உள்ளிட்ட பல்வேறு மாவீரர் துயிலும் இல்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
சில மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் அல்லது அணுகல் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு அருகிலுள்ள மாற்று இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், அவர்களின் குடும்பங்களின் துயரங்களையும், இழப்புகளையும் நினைவுகூரும் நாளாகவும் மாவீரர் நாள் அமைந்துள்ளது.
ஆண்டுகள் பல கடந்தாலும் நினைவுகள் மங்காத நிலையில், தமது உறவுகளை இழந்த குடும்பத்தினரும் தமிழ் மக்களும் இன்றைய நாளில் உணர்வுபூர்வமாக நினைவேந்தலில் ஈடுபடத் தயாராகியுள்ளனர்.






