தென்கிழக்கு பிரான்சில் திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவு பலரை உயிருடன் அடித்துச் சென்ற நிலையில், நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இருவர் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் இல்லை என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களில் இருவர் வழி காட்டிகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆல்ப்ஸ் மலையில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத இரண்டு நபர்களைத் தேடும் பணியில் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கிய ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது எனவும், மேலும் எட்டு பேர் அதிர்ஷ்டவசமாக தப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் பனிச்சரிவு தொடர்பில் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றே கூறுகின்றனர்.
இருப்பினும் வெப்பம் மற்றும் காற்று ஆகியவற்றின் கலவையானது பேரழிவினை ஏற்படுத்தியிருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்ட ஜனாதிபதி மேக்ரான், பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் நினைவில் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அவசர உதவிக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெலிகொப்டர் மற்றும் மலைப்பகுதியில் பயன்படுத்தப்படும் மீட்பு நாய்களும் களமிறக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி பகல் 7 மணியில் இருந்து மீண்டும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.