பிரான்ஸ் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்! நோர்வே பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!!

You are currently viewing பிரான்ஸ் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்! நோர்வே பாதுகாப்புத்துறை  எச்சரிக்கை!!

பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களையடுத்து, நோர்வேயிலும் இவ்வாறான தாக்குதல்கள் நடக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் குறித்து நோர்வே பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமியர்களின் இறையருளான “முஹம்மது நபிகள்” என சித்தரிக்கப்படும் வரைபடம் பரவலாக வெளியிடப்பட்டுள்ளதால் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்களிடையே உளவியில் காயமேற்பட்டதே மேற்படி தாக்குதல்களுக்கு முதன்மைக்காரணமென தெரிவித்திருக்கும் நோர்வே பாதுகாப்புத்துறை, இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்களை மதரீதியாக இகழ்ந்து வருபவர்களால், இஸ்லாமிய தீவிரவாத சிந்தனை கொண்டவர்களின் கோபப்பார்வைக்கு நோர்வே இழுத்து வரப்படுவதாக தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் நோர்வேயிலும் மேற்கொள்ளப்படலாமென்ற கோணத்தில் பாதுகாப்பு நிலைமைகளை தீவிரமாக ஆராய்ந்து வரும் பாதுகாப்புத்துறை, கடந்த கோடைகாலத்துக்குப்பின்னதாக, தற்போதைய சூழ்நிலை, பாதுகாப்புக்களை இறுக்கமாக்க வேண்டியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

“முஹம்மது நபிகள்” இப்படித்தான் இருப்பாரென சித்தரிக்கும் வரைபடமொன்று சிலவருடங்களுக்கு முன்னதாக டென்மார்க்கிலுள்ள பத்திரிகை நிறுவனமொன்றால் வெளியிட்டிருந்தபோது, இஸ்லாமியர்களிடையே அது கடும் கோபத்தை உண்டாக்கியிருந்தது. குறித்த பத்திரிகை அலுவலகம் தாக்குதலுக்குள்ளாகியிருந்ததும், சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்ட பத்திரிகையாளர் மீது இஸ்லாமிய கடும் சட்டமான “ஷரியா” சட்டத்தின்படி மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேற்குலக நாடுகளில் நடைமுறையிலிருந்துவரும் கருத்து சுதந்திரம் என்பதன் அடிப்படையில் குறித்த சர்ச்சைக்குரிய வரைபடம் வெளியிடப்பட்டாலும், அது இஸ்லாமியர்களை காயப்படுத்துவதாக இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எனினும், பிரான்சில் பாடசாலை ஆசிரியர் ஒருவர், மேற்படி சர்ச்சைக்குரிய வரைபடத்தை வகுப்பில் வைத்தது மாணவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தாரென்ற காரணத்தினால், அந்த ஆசிரியர், இஸ்லாமிய தீவிரவாதி என நம்பப்படும் ஒருவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, பிரெஞ்சு அதிபர் வெளிப்படுத்திய கருத்துக்களால் இஸ்லாமிய நாடுகள் பிரெஞ்சு அதிபருக்கெதிரான கருத்துக்களை முன்வைத்தன.

இதன் நீட்சியாக, கடந்த வாரத்தில் பிரான்சின் “Nice” நகரின் தேவாலயமொன்றுக்கருகில் 3 பேர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இப்படுகொலை தொடர்பாக துனிசியா நாட்டை சேர்ந்தவரான சொல்லப்படும் 21 வயது கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நோர்வேயிலும் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுமென சமூகவலைத்தளங்கள் ஊடாக பரப்பப்படும் செய்திகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ள நோர்வே பாதுகாப்புத்துறை, உண்மையான தகவல்களுக்கும், போலியான வதந்திகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை மக்கள் கண்டறியாமல் போலியான வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, இஸ்லாமிய மார்க்கத்தை நோர்வேயும் இகழ்கிறதென்ற தவறான பார்வை நோர்வே மீது வரக்கூடிய நிலைமை ஏற்படலாமெனவும் எச்சரிக்கிறது.

இதேவேளை, தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட குழுக்கள், தமக்கான புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதில் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் நோர்வே பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமிய எதிர்ப்பு, மேற்குலகத்தை சாராத, வேற்று நாடுகளிலிருந்து வந்து நோர்வேயில் குடியேறி வசிப்பவர்கள் தொடர்பில் எதிர்மறையான பார்வையை கொண்டுள்ள தீவிர வலதுசாரி குழுக்களும் அடிதடிகளில் இறங்கக்கூடியவர்கள் என்பதால் இக்குழுக்கள் மீதும் விசேட கவனம் செலுத்தப்படுவதாக பாதுகாப்புத்துறை குறிப்பிடுகிறது.

தற்போது “கொரோனா” பரவல் காரணமாக அநேகமானவர்கள் வீடுகளில் இருப்பதால் நாளாந்தம் அதிக நேரத்தை இணையவலைத்தொடர்பில் செலவிடுவதால், இவ்வாறான தீவிர வலதுசாரிக்கொள்கையுடைய குழுக்களின் இணையவழியூடான பிரச்சாரத்தில் இளையோர்கள் இலகுவில் வீழ்ந்து விடக்கூடிய அபாயம் தொடர்பிலும் மக்கள் அவதானமாக இருக்கும்படியும் நோர்வே பாதுகாப்புத்துறை மக்களை எச்சரித்துள்ளது.

இதேவேளை, சந்தேகப்படும்படியான நபர்கள் அல்லது நடவடிக்கைகளை மக்கள் அவதானிக்கும் பட்சத்தில் உடனடியாக காவல்துறைக்கு அறிவிப்பதும் மக்களின் இன்றியமையாத கடமையாக இருக்கிறது.

பகிர்ந்துகொள்ள