பிரித்தானியாவில் பிரபல கார் உற்பத்தி ஆலைக்கு அருகே அடையாளம் காணப்படாத கல்லறையிலிருந்து 16 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மர்மமாகவே உள்ளது. பிரித்தானியாவின் Solihull பகுதியில் அமைந்துள்ள Jaguar Land Rover உற்பத்தி ஆலைக்கு அருகாமையில் உள்ள நிலப்பரப்பில் இருந்தே கடந்த நவம்பர் மாதம் 16 சடலங்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 1996ல் மாயமான இரு சிறுவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்த்துறையினர், தற்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் குறித்த சிறுவர்களுக்கு உரியதாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பினர்.
ஆனால், தீவிர விசாரணைக்கு பின்னர் அந்த எலும்புக்கூடுகள், மாயமான குறித்த சிறுவர்களுக்கு தொடர்புடையது அல்ல என காவல்த்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே, அந்த கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளின் கைப்பிடிகளை பரிசோதித்து, அந்த சடலங்களின் உண்மை நிலை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதுவரை அந்த சடலங்கள் தொடர்பில் யாரும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் நுணுக்கமான சோதனையில் அந்த சடலங்கள் 18 மற்றும் 20ம் நூற்றாண்டில் புதைக்கப்பட்டிர்டுக்கலாம் என தெரிய வந்துள்ளது.
சவப்பெட்டிகளின் கைப்படிகளும் 1800 காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மட்டுமின்றி, அந்த சடலங்கள் அனைத்தும் அருகாமையில் உள்ள Elmdon தேவாலய கல்லறைத்தோட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும், ஆனால் அவை எவ்வாறு இந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது என கூறப்படுகிறது.
அந்த 16 சடலங்களில் சாரா என்பவரது சடலம் மட்டும் தீவிர விசாரணைக்கு பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது. எஞ்சியவர்களின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாமலே உள்ளது.