புதிதாக அறிவிக்கப்பட்ட கனேடிய அரசின் அவசரகால நடவடிக்கைகள்!

You are currently viewing புதிதாக அறிவிக்கப்பட்ட கனேடிய அரசின் அவசரகால நடவடிக்கைகள்!

கோவிட்-19 உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று (27.03.2020) பின்வரும் விடயங்களை அறிவித்தார்.

• கனேடிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் விளங்குவதைப் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ குறிப்பிட்டார். அவை கனடாவில் மிக அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன, பல மில்லியன் குடும்பங்களுக்கு உதவியளிக்கின்றன, எமது சமூகத்துக்குச் சேவையாற்றுகின்றன, எமது நகரங்களையும், பெருநகரங்களையும் வாழ்வதற்கு மேம்பட்ட இடங்களாக மாற்றுகின்றன.

• சிறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் உதவியாகவும், கனேடியர்கள் வேலையில் தொடர்வதற்கு உதவியாகவும், கனடாவின் பொருளாதாரத்தை மேலும் வலிமையானதாகவும், செல்வச்செழிப்புள்ளதாகவும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஆதரவு வணிக சமூகத்திற்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், கனேடிய அரசு கணிசமான உதவிகளை அறிவிக்கிறது:

– தகுதிபெறும் வணிக நிறுவனங்களுக்குக் கனேடிய அரசு 75 சதவீதம் வரையான சம்பள மானியத்தை வழங்கும். மார்ச் 18 ஆந் திகதி அறிவிக்கப்பட்ட 10 சதவீத மானியம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேலைகொள்வோர் வணிக நடவடிக்கைகளைக் குறைக்கவோ, நிறுத்தவோ வேண்டி ஏற்பட்டாலும், பணியாளர்கள் வேலையில் தொடர்வதையும், அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக இந்த உதவி வழங்கப்படுகிறது.

2020 மார்ச் 15 ஆந் திகதியில் இருந்து இந்த மானியம் நடைமுறைக்கு வருகிறது.

– சமஷ்டி அரசு கனடா அவசர வணிகக் கணக்கையும் (Canada Emergency Business Account) ஆரம்பிக்கிறது.

இந்தப் புதிய நடவடிக்கைக்கு அமைவாகத், தகுதி பெறும் வணிக நிறுவனங்களுக்கு வங்கிகள் விரைவில் 40,000 டொலர் கடன்களை வழங்கவுள்ளன. இந்தக் கடன்களுக்குக்கு அரசு உத்தரவாதமளிக்கும். இந்தக் கடன்களுக்கு முதல் வருடத்தில் வட்டி அறிவிடப்பட மாட்டாது. நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட்டால், கடனின் 10,000 டொலர் தள்ளுபடி செய்யப்படும்.

– சிறிய மற்றும் நடுத்தர அளவான வணிக நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கனேடிய ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனம் (Export Development Canada), வணிக மேம்பாட்டு வங்கி (Business Development Bank) ஆகியவற்றின் ஊடாக மேலும் 12.5 பில்லியன் டொலர் வழங்கப்படும். இதற்கமைய, வணிக நிறுவனங்கள், கோவிட்-19 காரணமான பாதிப்பை ஈடுசெய்வதற்காக உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்களுக்கு நிதி நிறுவனங்களிடம் விண்ணப்பிக்கக் கூடியதாக இருக்கும்.

– GST/HSTவரிகளையும், இறக்குமதிகளுக்குச் செலுத்தவேண்டிய தீர்வைகள், வரிகள் ஆகியவற்றையும் அறவிடுவதை அரசு ஜூன் மாதம் வரை தாமதம் செய்கிறது. இந்த நடவடிக்கை வணிக நிறுவனங்களுக்கு 30 பில்லியன் டொலர் வரியற்ற கடன்களை வழங்குவதற்கு இது நிகரானது.

(உதவிகள் குறித்த மேலதிக விபரங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும். புதிய உதவிகள் குறித்த விபரங்கள் Canada.ca/Coronavirus என்ற இணையத்தளத்திலும் உள்ளன.)

• வணிக நிறுவனங்களுக்கான புதிய உதவிகள் வழங்கப்படும் நிலையில், பணியாளர்களைப் பணிக்குறைப்புச் செய்வதற்குத் திட்டமிடும் நிறுவனங்கள் தமது முடிவுகளை மீளாய்வு செய்யவேண்டுமெனவும், சம்பளத்தை வழங்குவதற்கு உதவி கிடைப்பதால் ஏற்கனவே பணிக்குறைப்புச் செய்யப்பட்ட பணியாளர்களை மீளவும் பணியில் இணைத்துக் கொள்வது குறித்து ஆராயவேண்டுமெனவும் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ கேட்டுள்ளார்.

• கோவிட்-19 காரணமாக ஏற்கனவே வேலை இழந்தோருக்கும், சுய தொழில் செய்வோருக்கும் (இந்த வாரம் அறிவிக்கப்பட்ட) கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canada Emergency Response Benefit) மூலம் நிதியுதவி கிடைக்கும்.

• இளையோர், சமூகத்தில் ஓரம்கட்டப்பட்டவர்கள், வறுமை நிலையில் வாழ்வோர் ஆகியோரை உள்ளடக்கிய, சமூகத்தில் உள்ள எளிதில் பாதிக்கப்படக் கூடியோருக்கான மேலதிக உதவிகள் குறித்துக் கனேடிய அரசு எதிர்வரும் நாட்களில் அறிவிக்கும்.

• கனேடிய மத்திய வங்கி வட்டிவீதத்தை 0.25 சதவீதமாகக் குறைத்த முடிவை ஆதரித்த பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ அதற்கு நன்றியையும் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள