பெரும் பொருளாதாரச்சரிவில் ஐரோப்பா! படிப்படியாக முன்னேறும் ரஷ்யா!!

You are currently viewing பெரும் பொருளாதாரச்சரிவில் ஐரோப்பா! படிப்படியாக முன்னேறும் ரஷ்யா!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் கொள்வனவு செய்து வந்த எரிவாயு மற்றும் பெட்ரோலியப்பொருட்களுக்கு இறக்குமதித்தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஐரோப்பாவெங்கும் எரிபொருளுக்கான கோரல்கள் அதிகரித்தும், அதன் விலைகள் அதிகரித்தும் வரும் நிலையில், நீண்டகால அடிப்படையில் பெரும் பொருளாதார சரிவொன்றை நோக்கி ஐரோப்பா பயணப்படுகிறதென பொருளியலாளர்கள் எச்சரித்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், எரிபொருள், மின்சக்தி, எரிவாயு போன்றவற்றிற்கு ஐரோப்பாவில் நிலவும் போதாக்குறை, இவை தொடர்பான நிச்சயமற்ற தன்மையொன்றை ஏற்படுத்தியிருப்பதால், இது, ஐரோப்பாவின் பொருளாதார நிலையை அசைக்கத்தொடங்கியுள்ளது. இதன் நீட்சியாக, பலமாக இருந்த ஐரோப்பிய நாணயமான “யூரோ” பலமிழந்து வருவதோடு, அமெரிக்க நாணயமான “டொலர்” இற்கு நிகரான நிலைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவிடமிருந்து இறக்குமதிகளுக்கான தடைகள் விதிக்கப்பட்டதன் எதிர்வினையாக கொள்ளக்கூடிய, கடந்த 20 வருடங்களில் இல்லாதளவுக்கு “யூரோ” வீழ்ச்சி காணத்தொடங்கியுள்ளதையடுத்து, ஐரோப்பிய நிதி முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை “யூரோ” விலிருந்து அமெரிக்க”டொலர்” இற்கு மாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய தடைகளின் நீட்சியாக ஐரோப்பாவின் பொருளாதாரச்சரிவுக்கு முகம்கொடுக்க ஐரோப்பிய நாடுகள் தயாராக வேண்டுமெனவும், அதேநேரம் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியொன்றுக்கான காலவரையறை ஒன்றையும் ஆய்வாளர்கள் முன்னதாக வெளியிட்டிருந்தாலும், அந்த காலவரையறையையும் மீறி மிக விரைவாகவே ஐரோப்பாவின் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளதாகவும் அதன் அறிகுறியே “யூரோ” வின் வீழ்ச்சி எனவும் சொல்லப்படுகிறது.

தன்னிடமிருந்து வாங்கும் எரிவாயு, மற்றும் பெட்ரோலிய பொருட்களுக்கான கட்டணம், ரஷ்ய நாணயமான “ரூபிள்” இலேயே செலுத்தப்படவேண்டும் என ரஷ்ய விடுத்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளாத நாடுகளுக்கான ஏற்றுமதியை நிறுத்தியிருந்த ரஷ்யா, கடந்தவாரம் ஜேர்மனிக்கான எரிவாயு ஏற்றுமதியையும் நிறுத்தியுள்ளது.

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயுவை கடத்திச்செல்லும் குழாய் வழியில் மேம்பாடுகள் மற்றும் பழுதுபார்க்கும் நோக்கங்களுக்காகவே ஜேர்மனிக்கான எரிவாயு வழங்கல் சுமார் 10 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக ரஷ்யா தெரிவித்தாலும், ஐரோப்பாவின் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் ரஷ்யாவின் நகர்வின் ஒரு கட்டமாகவே இவ்விடயத்தை பார்க்கும் ஐரோப்பா, தற்காலிகமான இத்தடை நிரந்தரமாக்கப்படுவதன் மூலம், ஐரோப்பிய பொருளாதாரத்தை மேலும் இறுக்கவே ரஷ்யா விரும்பும் எனவும் நம்புவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மிகப்பெரிய நாடான ஜேர்மனி, ரஷ்யாவின் இந்த நகர்வினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்நோக்குகிறது. இதேவேளை, சூழல் மாசடைவதை தடுக்கும் உலகளாவிய செயற்திட்டத்தின் விதந்துரைகளின்படி, தனது நாட்டில் இயங்கு நிலையிலிருந்த, நிலக்கரியினால் இயங்கும் கடைசி மின் உற்பத்தி ஆலையை நிறுத்தி சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், ரஷ்யா, ஜேர்மனிக்கான ஏற்றுமதியை நிறுத்தியதால் மீண்டும் அந்த ஆலையை இயங்க வைத்திருக்கிறதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவிடமிருந்து எரிவாயு, பெட்ரோலியப்பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளின் பின்விளைவுகள், ஐரோப்பாவெங்கும் எரிபொருள், மின்சக்தி விலைகள் உட்பட பொதுவான நுகர்வுப்பொருட்களுக்கான வானளாவிய விலையேற்றம் மூலம் உணரப்பட்டுவரும் நிலையில், ரஷ்ய இறக்குமதிகளுக்கான தடைகள் தொடருமானால், அமெரிக்காவிடமிருந்து எரிவாயுவையும், பெட்ரோலியப்பொருட்களையும் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்படும் ஐரோப்பா, அதற்காக அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும். இதுவும் ஐரோப்பாவின் பொருளாதாரத்தை சவாலுக்கு உள்ளாக்கும்.

இந்நிலையில், தன்னை எதிர்க்கும் மேற்குலகத்தையும், ஐரோப்பியநாடுகளையும் பொருளாதாரரீதியில் புரட்டிப்போடும் ரஷ்ய அதிபர் புதினுடைய பொருளாதாரப்போரின் நகர்வு சுமுகமாகவே நடைபெறுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படும் அதேவேளையில், ஐரோப்பாவின் எரிவாயு, பெட்ரொலியப்பொருட்கள் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, சத்தமில்லாமல் நாளொன்றுக்கு சுமார் மூன்று பில்லியன் குரோனர்களை சம்பாதித்துக்கொண்டிருக்கிறது, நோர்வே!

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments