யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறையிலிருந்து மருதங்கேணி ஊடக கொழும்பு நோக்கிப் பயணித்த அரச பேருந்துகள் இரண்டில் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் இன்று இரவு வவுனியா வடக்கு புதூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு புதூர் பகுதியில் இன்று படையினர் மற்றும் காவல்த்துறையினர் இணைந்து வாகனங்களை தீவிர சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரண்டு பேருந்துகளும் புதூர் பகுதியில் இன்று இரவு சோதனைக்காக மறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரண்டில் இருந்தும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே பருத்தித்துறையில் இருந்து பயணித்த பேருந்தில் போதைப்பொருளைக் கொண்டு சென்றவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக வவுனியாவில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் பதினொருவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த 3 நாட்களில் மட்டும் குறித்த சோதனைச்சாவடியில் வைத்து 33 கிலோ கஞ்சாவுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.